»   »  பாட்ஷா-2 ?

பாட்ஷா-2 ?

Subscribe to Oneindia Tamil

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பம்பர் ஹிட் படமான பாட்ஷாவின் 2ம் பாகத்தை தயாரிக்க ஆர்வமாக இருப்பதாக இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா கூறியுள்ளார்.

ரஜினிக்கு மாபெரும் ஹிட் கொடுத்த படங்களில் முக்கியமானது பாட்ஷா. ரஜினி ரசிகர்களால் மறக்க முடியாத படம் பாட்ஷா. ரஜினியின் நடிப்பும், படத்தை சுரேஷ் கிருஷ்ணா உருவாக்கிய விதமும் பாட்ஷாவை ரஜினியின் மாபெரும் ஹிட் பட வரிசையில் கொண்டு போய் நிறுத்தின.

பாட்ஷா படத்திற்கு ஆன வசூலை இன்னும் எந்த தமிழ்ப் படமும் வசூலிக்கவில்லை என்பது ரஜினிக்கு மட்டுமே சாத்தியப்படக் கூடிய சாதனையாகும்.

தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் கூட பாட்ஷா வசூல் சாதனை படைத்தது. இந்தப் படத்திற்குப் பிறகுதான் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர்கள், ரஜினி படத்தைப் பார்த்து மிரள ஆரம்பித்தனர்.

அப்படிப்பட்ட பாட்ஷாவை மீண்டும் உருவாக்க அதாவது 2ம் பாகத்தை உருவாக்க சுரேஷ் கிருஷ்ணா விருப்பம் தெரிவித்துள்ளார். ரஜினியின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறார்.

இதுகுறித்து சுரேஷ்கிருஷ்ணா கூறுகையில்,

பாட்ஷா படைத்த சாதனையை யாராலும் மறக்க முடியாது. இப்போது பார்த்தாலும் கூட படம் விறுவிறுப்பாக இருக்கும்.

பாட்ஷாவின் இரண்டாம் பாகத்தை சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்க ஆர்வமாக உள்ளேன். இதுகுறித்து சூப்பர் ஸ்டாருடன் பேசியுள்ளேன். அவரும் ஸ்கிரிப்ட்டை பக்காவாக ரெடி செய்து விட்டு வந்து சந்திக்குமாறு கூறியுள்ளார்.

இதுதவிர ரஜினிக்கு பொருத்தமான வேறு சில கதைகளையும் நான் வைத்துள்ளேன். ஆனால் இந்தக் கதைகளுக்கு அவர் இதுவரை ஓ.கே. சொல்லவில்லை. அவர் மட்டும் ஓ.கே. சொல்லி விட்டால், இன்னொரு பாட்ஷாவாக, அண்ணாமலையாக அந்தப் படம் அமையும் என்கிறார் சுரேஷ்கிருஷ்ணா.

பாட்ஷாவின் 2ம் பாகத்தை எடுக்க சுரேஷ் கிருஷ்ணா ஆர்வம் காட்டினாலும் கூட இப்போதைக்கு அவருக்கு ரஜினி வாய்ப்பு கொடுப்பாரா என்பது சந்தேகம்தான். காரணம் சுரேஷ்கிருஷ்ணா வரிசையாக கொடுத்து வரும் தோல்விப்படங்கள்தான்.

ரஜினியை வைத்து சுரேஷ்கிருஷ்ணா நான்கு படங்களைக் கொடுத்துள்ளார். வீரா, அண்ணாமலை, பாட்ஷா, பாபா ஆகியவையே அவை. இதில் பாபாவைத் தவிர மற்ற மூன்று படங்களும் மெகா ஹிட் படங்கள்.

பாபா படத்தை ரஜினியால் ஜென்மத்திற்கும் மறக்க முடியாது. அப்படி ஒரு அடியைக் கொடுத்த படம் பாபா.

பாபாவுக்குப் பின்னர் சுரேஷ்கிருஷ்ணா இயக்கிய மூன்று படங்களும் மாபெரும் தோல்வியைத் தழுவின. கமலை வைத்து இயக்கிய ஆளவந்தான், விஜயகாந்த்தை வைத்து இயக்கிய கஜேந்திரா, ரஜினியின் மருமகன் தனுஷை வைத்து இயக்கிய பரட்டை என்கிற அழகுசுந்தரம் ஆகிய மூன்று படங்களுமே மகா தோல்விப் படங்கள்.

இந்த நிலையில் மறுபடியும் சுரேஷ் கிருஷ்ணாவிடம் மாட்டிக் கொள்வாரா ரஜினி என்பது கேள்விக்குறிதான்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil