»   »  பாரதிராஜாவின் பொம்மலாட்டம்

பாரதிராஜாவின் பொம்மலாட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நம் இனிய பாரதிராஜா, என் இனிய தமிழ் மக்களே என்று மீண்டும் சொல்ல ஓடோடி வருகிறார்-பொம்மலாட்டம் மூலம்.

ஒதுக்கப்பட்டு, ஓரம் கட்டப்பட்டுக் கிடந்த கிராமங்களை, தன்னுயிர்த் தோழன் கண்ணன் (கேமராமேன்) உதவியுடன், நம் கண் இமைகளுக்கு அருகில் நிறுத்தி, கண் கசிய வைத்து, உணர்ச்சிகரமான படங்களைக் கொடுத்தவர் பாரதிராஜா.

16 வயதினிலே ஆகட்டும், நிழல்கள் ஆகட்டும், முதல் மரியாதை ஆகட்டும் எதை எடுத்தாலும், அத்தனையும் விலை மதிப்பிட முடியாத முத்துக்கள்.

பாரதிராஜாவைத் தொடர்ந்து அவரது மண் பாதையில் அடியெடுத்து வைத்து அசத்த பலரும் நினைத்து படம் எடுத்தனர். ஆனாலும் அவர் போன பாதையில் அவர் வேகத்துக்குப் போக முடியாமல் ஆங்காங்கே சோர்ந்து போய் நின்று விட்டனர். விதி விலக்காக சேரனும், அமீரும் இப்போது தலையெடுத்து வருகின்றனர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் புத்துணர்ச்சியுடன் புழுதி கிளப்ப வருகிறார் பாரதிராஜா. பொம்மலாட்டம் என்ற படத்தை தனது ஸ்டைலில் இயக்கியுள்ளார் பாரதிராஜா.

பாரதிராஜா கடைசியாக இயக்கிய படம் ஈர நிலம். அதற்கு முன்பு இயக்கிய கடல் பூக்கள், கண்களால் கைது செய் ஆகிய படங்ளும், ஈர நிலமும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படங்கள் இல்லை. இருந்தாலும் பாரதிராஜாவின் களத்துக்கு ஒத்து வராத படங்கள் என பெயர் வாங்கி விட்டன. இதனால் பாரதியும் சோர்ந்து போய் ஒதுங்கியிருந்தார்.

3 வருட இடைவெளிக்குப் பிறகு முழு வீச்சில் களம் இறங்கிய பாரதிராஜா இயக்கியுள்ள படம்தான் பொம்மலாட்டம். முதலில் இது இந்தியில்தான் உருவானது. சினிமா என்ற பெயரில் அப்படத்தை இயக்கியுள்ளார் பாரதி. நானா படேகர், அர்ஜூன் ஆகியோர் இதில் நடித்துள்ளனர்.

இந்தியில் இப்படத்தை முடித்த பின்னர் தமிழிலும் கொண்டு வர விரும்பிய பாரதிராஜா, கடந்த ஆண்டு பூஜை போட்டார். பொம்மலாட்டம் மலேசியாவில் வளர்ந்தது. படத்தின் 80 சதவீத வேலைகள் முடிந்து விட்டன. தெலுங்கிலும் இப்படத்தை காளிதாஸ் என்ற பெயரில் டப் செய்கிறார் பாரதிராஜா.

மூன்று படங்களுக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்தான் இசை. இது கிராமத்து கதை அல்ல. ஆனால் அந்த உணர்வையும், தரத்தையும் இப்படத்தில் பார்க்க முடியும் என்கிறார் பாரதிராஜா. இப்படத்தில் மகன் மனோஜ் கே. பாரதி (முன்னாள் நடிகர் மனோஜ்) உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.

தந்தையின் டைரக்ஷன் சூட்சுமங்களை படு வேகமாக கற்றுக் கொண்டு வருகிறார் மனோஜ். விரைவில் அவரும் அவதாரம் எடுக்கப் போகிறாராம்.

பாரதிராஜாவின் மண் வாசனை மாறாமல், 16 வயது முதல் 60 வயது வரையிலான அனைவரையும் கவரும் வகையில் பொம்மலாட்டம் இருக்கும் என ராசா தரப்பு தைரியமாக சொல்கிறது.

ரசிக்க காத்திருக்கோம், சீக்கிரமா வந்து ஆட்டம் காட்டு ராசா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil