»   »  இளையராஜா .. பாரதிராஜா உருக்கம்!

இளையராஜா .. பாரதிராஜா உருக்கம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இளையராஜா இல்லாமல் எனது படங்கள் முழுமை பெறாது, உயிர் பெறாது என்று இயக்குநர் பாரதிராஜா உருக்கமாக கூறியுள்ளார்.

பாரதிராஜாவின் இயக்கத்தில் இந்தி, தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள படம் பொம்மலாட்டம். இந்தியில் சினிமா என்ற பெயரிலும் தமிழில் பொம்மலாட்டம் என்ற பெயரிலும் இப்படம் உருவாகியுள்ளது. தெலுங்கில் கிளைடாஸ்கோப் என பெயரிட்டுள்ளார் பாரதிராஜா. இந்தி இசைப் புயல் ஹிமேஷ் ரேஷமய்யா இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பாடல் வெளியீடு நேற்று சென்னையில் நடந்தது. பாடல் வெளியீட்டு விழா என்பதை விட இரு இதயங்களின் உணர்வுப் பரிமாற்ற விழாவாகவே இது காணப்பட்டது. காரணம், பாரதிராஜாவும், அவரது தோழரான இளையராஜாவும் தங்களது நட்பை, அதன் ஆழத்தை, பரிசுத்தத்தை, அன்பை விழா மேடையில் விலாவாரியாகப் பரிமாறிக் கொண்டனர்.

இந்த இரு நண்பர்களின் உணர்ச்சிப் பரிமாற்றத்தை கே.பாலச்சந்தர், எஸ்.பி.முத்துராமன், கமல்ஹாசன் மற்றும் அரங்கில் கூடியிருந்த நூற்றுக்கணக்கானோரும் மெய் மறந்து லயித்துப் பார்த்தனர்.

முதல் கேசட்டை பாலச்சந்தர் வெளியிட, இளையராஜா முன்னிலையில், கமல்ஹாசன் பெற்றுக் கொண்டார். விழாவில் இளையராஜா பேசுகையில், சினிமா விழாக்களை முடிந்தவரை தவிர்ப்பன் நான். எனது படங்களின் இசை வெளியீட்டுக்குக் கூட நான் போவதில்லை. பாரதிக்கும் இது தெரியும்.

இருந்தாலும், நான் தான் இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வர வேண்டும் என அவர் வேண்டிக் கேட்டுக் கொண்டார். எந்தத் தயக்கமும் இல்லாமல் நானும் வருவதாக ஒத்துக் கொண்டேன்.

எல்லோருக்கும் ஒரு தாய் இருப்பார்கள். ஆனால் எனக்கும், பாரதிக்கும் இரண்டு தாய்கள். எனது தாய், அவருக்கும் தாய். அவரது தாய் எனக்கும் தாய். அம்மா, தெய்வத்துக்கும் மேலே.

அவர் இயக்கிய சில படங்களுக்கு நான் இசையமைக்காமல் இருந்திருக்கலாம். என்னை அவர் கூப்பிடாமல் இருந்திருக்கலாம். அதையும் மீறி எங்களுக்குள் ஒரு ஜீவனுள்ள நட்பு உண்டு. சிறு வயதிலிருந்தே இந்த நட்பு தொடர்ந்து வருகிறது.

எனக்கும், பாரதிக்கும் உள்ள நட்பை சொல்லத் தெரியவில்லை. நான் எனது சுயசரிதை எழுத உட்கார்ந்தேன். எழுத எழுத பாரதிராஜாவைப் பற்றித்தான் நிறைய எழுதிக் கொண்டிருந்தேன். அப்புறம்தான் தெரிந்தது, பாரதி இல்லாமல் நான் இல்லை, நான் இல்லாமல் பாரதி இல்லை. எனது வாழ்க்கையில் அவரும் ஒரு அங்கமாகவே இருந்து வந்திருக்கிறார் என்பதை அப்போதுதான் உணர்ந்தேன்.

அவர் எனக்கு நண்பனா, சகோதரனா, என்ன உறவு என்றே தெரியவில்லை. நான் சென்னைக்கு வந்தபோது அவர்தான் எனக்கு வழிகாட்டி. இதுதான் கடற்கரை, இதுதான் மெரீனா பீச், இதுதான் எஸ்.ஐ.இ.டி. கல்லூரி என்று எனக்கு காட்டியிருக்கிறார். அவர் காட்டிய வழியில் நான் போகவில்லை.

இந்த விழாவுக்கு வராமல் இருந்தால் எனது வாழ்க்கைக்கே அர்த்தம் இல்லை என்பதால்தான் இந்த விழாவுக்கு நான் வந்தேன் என்றார் இளையராஜா.

பாரதிராஜா பேசுகையில், ராஜா சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அவரது இதயத்திலிருந்து வந்தது. எனது சிறு வயது முதலே அவர் மட்டுமே எனக்கு நெருங்கிய நண்பன். இங்கு நான் ஒரு விஷயத்தை ஒப்புக் கொள்ள வேண்டும். இளையராஜா இல்லாமல் எனது படங்கள் இல்லை, இளையராஜாவின் இசை இல்லாமல் எனது படங்கள் முழுமை பெறாது, உயிர் பெறாது என்றார் நெகிழ்ச்சியுடன்.

கமல்ஹான் பேசுகையில், இளையராஜா வெளிப்படையாகப் பேசக் கூடியவர். மனதில் பட்டதை பட்டென்று போட்டு உடைத்து விடுவார். ஆனால் இன்று பேசியதைப் போல எங்குமே அவர் வெளிப்படையாக பேசியதில்லை.

இளையராஜா, பாரதிராஜா ஆகியோரை நான் கேட்டுக் கொள்வது, உங்களது நட்பு வட்டத்துக்குள் என்னையும் இணைத்துக் கொள்ளுங்கள்.

உங்களுடன் நான் லேட்டாக வந்து ஒட்டிக் கொண்ட சகோதரன். உறவு வேறு, நட்பு வேறு. நானும் பாரதிராஜாவும் நான்கு படங்களில் பணிபுரிந்த உறவு உண்டு.

நான் ஒரு பேட்டியில் பாலச்சந்தர் படத்தில் நடிப்பு வீட்டுச் சாப்பாடு சாப்பிடுவது போல என்று கூறியிருந்தேன். அப்படியானால் நான் ஹோட்டல் சாப்பாடா என்று என்னிடம் பாரதிராஜா கேட்டார். அப்படி எங்களுக்குள் ஒரு உறவும், உரிமையும் உண்டு என்றார்.

விழாவில் கே.பாலச்சந்தர், எஸ்.பி.முத்துராமன், நடிகர்கள் நெப்போலியன், விஜயக்குமார் உள்ளிட்டோரும் பேசினர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil