»   »  தமிழர் வாழ்வியலைக் கூறும் பாரதிராஜாவின் மண்வாசனை!

தமிழர் வாழ்வியலைக் கூறும் பாரதிராஜாவின் மண்வாசனை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

- கவிஞர் மகுடேசுவரன்

பாரதிராஜா இயக்கிய படங்களில் எனக்கு மிகப்பிடித்தமான படம் அது. இதுவரை நான் பார்த்த படங்களிலேயே மிகுதியான முறை பார்த்த படம் அதுவாகத்தான் இருக்கும். தமிழ்த் திரையுலகில் அரிவாள், வெட்டுகுத்து, பகைக்கொலை, மதுரை வழக்கு, சல்லிக்கட்டு ஆகியவற்றைத் தூக்கிப் பிடித்த முதற்படம். நாயகன், நாயகி என்று கதையில் இருவர் இருப்பார்கள். ஆனாலும் அவர்கள் வெறுமனே கதைப்பாத்திரங்கள். கதையை மீறிய நாயகப்பாங்கென்று ஒன்றுமில்லை. படம் முழுக்க அதன் நிகழ்களத்தையே தொடர்ந்து பதிவுசெய்த படம். நாட்டுப்புறத்துக் குடிமக்கள் வாழ்க்கையை விரிவாகச் சொன்னபடம் அதுதான். என்ன படம் என்று கணிக்க முடிகிறதா ?

மண்வாசனை.

"இந்த மண்ணிலே நடந்த உண்மைச் சம்பவத்தைக் கற்பனைப் பெயர்களோடு கலந்து உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்," என்னும் இயக்குநரின் முன்னுரையோடு தொடங்கும். கரிசல்பட்டி, காக்கிவாடன்பட்டி என்னும் அந்தக் கற்பனையூர்களை மறக்க முடியுமா ? முத்துப்பேச்சியையும் வீரையனையும் மலைச்சாமியையும் மூக்கையனையும் ஒச்சாயிக் கிழவியையும் பள்ளிக்கூட வாத்தியையும் ஊர் நாட்டாமையையும் எப்படி மறக்க முடியும் ?

Bharathiraja's Manvasanai

கரிசல்பட்டியைச் சேர்ந்த மூக்கையாவின் காளையை யாரும் அடக்க முடியாது. சல்லிக்கட்டுதோறும் அடக்க முடியாக் காளையாக வெற்றி வாகை சூடி வருகிறது. காக்கிவாடன்பட்டியினர் மூக்கையாவின் காளையை அடக்க முடியாமல் மண் கவ்வுகின்றனர். காக்கிவாடன்பட்டி மலைச்சாமிக்கு அது பொறுக்கவியலாத் தலைக்குனிவாகிறது. சல்லிக்கட்டுத் திருவிழாவில் தலைநில்லாப் போதையில் இருக்கும் மூக்கையனிடம் "உன் மாட்டை அடக்குனா உன் பொண்ணைக் கட்டிக் குடுப்பியா ?" என்று கேட்டு அவனைச் சினமேற்றி ஒப்புக்கொள்ள வைக்கின்றனர்.

Bharathiraja's Manvasanai

"எட்டுக் கிராமத்துக்கும் ஒட்டுமொத்தமான அறிவிப்பு... இந்தப் பல்லவராயன்பட்டி சல்லி சரித்திரம் சொல்லப்போவுது... மாடு பிடிக்கிற வீரர்களே நல்லாக் கேட்டுக்கங்க... எட்டு ஜில்லாவிலயும் முப்பது ஊர் சல்லியிலும் யாரும் தொட்டுப்பார்க்க முடியாதுன்னு பேர் வாங்குன காளை கரிசப்பட்டி மூக்கையாத் தேவன் காளை... இந்தச் சல்லியில மாட்டைப் பிடிக்கிற மாப்பிளைக்கு மூக்கையத் தேவர் பொண்ணையே தர்றதா பேச்சு... மாட்டை அணையற மாப்பிள்ளைக்குப் பொண்ணு... மாட்டை அணையற மாப்பிள்ளைக்குப் பொண்ணு...," என்று ஒலிபெருக்கியில் அறிவிக்கிறார்கள். மூக்கையனின் மாட்டுக்கு மருந்து வைத்து காக்கிவாடன்பட்டியைச் சேர்ந்த இளைஞன் அடக்கிவிடுகிறான். அடக்கியவனுக்குப் பரிசாக மூக்கையனின் ஒற்றை மகள் முத்துப்பேச்சியைப் பெண்கேட்டு காக்கிவாடன்பட்டிக்காரர்கள் வந்து நிற்க, கரிசல்பட்டிக்காரர்கள் இதைத் தன்மானக்கேடாகப் பார்க்கிறார்கள்.

Bharathiraja's Manvasanai

முத்துப்பேச்சியை விரும்பும் தாய்மாமன் வீரையன் கத்தியால் கரிக்கோல் சீவுபவன். எவ்வொன்றுக்கும் சினந்து சீறுபவன். ஒரு பெண்ணுக்காக இரண்டு ஊர்களும் ஒன்றையொன்று அடித்துக்கொண்டும் வெட்டிக்கொண்டும் தீயெரிய நிற்கின்றன. காக்கிவாடன்பட்டிக்குப் படிக்கச் செல்பவர்கள் விரட்டப்படுகிறார்கள். கட்டிக்கொடுக்கப்பட்ட பெண்கள் கண்களைக் கசக்கிக்கொண்டு திரும்புகிறார்கள். காக்கிவாடன்பட்டியாரோடு ஏற்பட்ட மோதலில் சிலரைக் கொன்றுவிட்டதாக அஞ்சும் வீரையன் ஊரைவிட்டோடி பட்டாளத்தில் சேர்ந்துவிடுகிறான். காக்கிவாடன்பட்டியினர்தான் வீரையனைக் கொன்று காணாப்பிணமாக்கிவிட்டார்கள் என்று கரிசல்பட்டியினர் கருதுகின்றனர். இடையில் மூக்கையன் மானக்கேடு தாங்க முடியாமல் தான் வளர்த்த காளையைக் கொன்றுவிட்டுத் தன்னையும் குத்திக்கொண்டு சாகிறான். முத்துப்பேச்சி காவலற்றவள் ஆகிறாள். அவள் வாழ்ந்த ஊர் அவளுக்காகத் திரண்டு நிற்கிறது. பஞ்சாயத்துகள் நடக்கின்றன. ஒவ்வொரு பஞ்சாயத்தும் அடிதடியில் முடிகிறது.

Bharathiraja's Manvasanai

மூக்கையனின் வைப்பாக இருந்தவள் இப்போது மலைச்சாமிக்கு வைப்பாக இருந்து ஏற்றி விடுகிறாள். அவளுடைய தம்பிதான் மூக்கையனின் சல்லிக்கட்டுக் காளைக்கு மருந்து வைத்தவன். காப்பற்ற முத்துப்பேச்சியை வீடு புகுந்து தூக்கிச் செல்வதற்கு வீச்சரிவாள், வேல்கம்பு ஏந்தியபடி மலைச்சாமி தலைமையில் ஊரெல்லையில் வந்து நிற்கிறார்கள். பட்டாளத்தில் சேர்ந்திருந்த வீரையன் அங்கே ஒரு வடக்கத்தியப் பெண்ணை மணந்துகொண்டவனாய் ஊர் திரும்பியிருக்கிறான். "வீரையனைக் கொன்றுவிட்டோம் என்று எங்கள்மீது பழிபோட்டீர்களே... இப்போது அவன் உயிரோடு வந்து நிற்கிறான்... அவனுக்குத் திருமணமும் ஆகிவிட்டது... இப்போதாவது மாட்டை அடக்குனவனுக்குப் பெண்ணைக் கட்டிக்கொடுப்பீர்களா மாட்டீர்களா...," என்று காக்கிவாடன்பட்டியினர் படையாக வந்து நிற்கின்றார்கள். விடிவதற்குள் பொண்ணை அனுப்பிவைக்காவிட்டால் வீடு புகுந்து தூக்குவோம் என்று ஊரெல்லையில் அமர்கின்றார்கள்.

Bharathiraja's Manvasanai

இங்கே ஒச்சாயிக் கிழவி வீட்டில் பஞ்சாயத்து நடக்கிறது. "இரவோடிரவாக வீரையனுக்கே முத்துப்பேச்சையைக் கட்டிவைத்துவிடலாம்...," என்று முடிவெடுக்கையில் "கட்டிக்கப்போற என்னை ஒரு வார்த்தைகூடக் கேட்காம நீங்களே முடிவெடுத்தால் எப்படி ?" என்று முத்துப்பேச்சி குறுக்கிடுகிறாள். "எனக்கு என் மாமனைக் கட்டிக்க இஷ்டமில்லை," என்று தீர்க்கமாகக் கூற, ஊரே திடுக்கிடுகிறது. "உனக்காக ஊரே இரண்டுபட்டுக் கிடக்கையில் நீ இப்படிச் சொல்லிவிட்டாயே...," என்கிறது ஊர்தரப்பு. "இனி இந்தக் குடும்பத்துக்கும் ஊரார்க்கும் எந்தத் தொடர்புமில்லை... ஆனதைப் பார்த்துக்கொள்ளச் சொல்," என்று மலைச்சாமித் தரப்புக்குச் செய்தி சொல்லப்படுகிறது. காக்கிவாடன்பட்டியினர் கரிசல்பட்டிக்குள் புகுந்து முத்துப்பேச்சியைத் தூக்கிச் செல்கிறார்கள். வீரையன் தனியொருவனாக அவர்களை எதிர்க்கிறான். எல்லாரையும் வெட்டிச்சாய்க்கிறான். இறுதியில் வீரையன் மடியில் அவனுடைய இரத்தத்துளிகளே செங்குங்குமமாக உயிர் துறக்கிறாள் முத்துப்பேச்சி.

Bharathiraja's Manvasanai

ஒரு திரைக்கதை எவ்வளவு கதையடர்த்தியோடு இருக்க வேண்டும் என்பதற்கு மண்வாசனை மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு சுடுவையும் எப்படி அமைத்தால் படத்தின் கதை பார்வையாளர்களைத் தாக்கும் என்பதற்கு மண்வாசனையில் நூறு பாடங்கள் இருக்கின்றன. பின்னணி இசையால் எப்படி உயிரைக் கொதிக்கவும் குளிரவும் வைக்கலாம் என்று இளையராஜா உணர்த்துவார். ஒரு வலிமையான பாத்திரத்தைப் படைக்க பழமொழிகளும் சொலவடைகளும் கொண்ட மொழி எப்படிப் பயன்படுமென்று காட்டும் காந்திமதி நடித்த ஒச்சாயிக் கிழவி வேடம்.

Bharathiraja's Manvasanai

பல படங்களின் தோல்விக்குப் பிறகு தமக்கேற்ற களம், தான் வாழ்ந்த நிலத்தின் பண்பாட்டுக் கூறுகளே என்று பாரதிராஜா உறுதியான முடிவெடுத்து இயக்கிய படம் மண்வாசனை. பாரதிராஜா தேவையில்லாமல் எடுத்துச் சிக்கிக்கொண்ட பல படங்கள் அவர்க்கு நற்பெயரைத் தரவில்லை. வாலிபமே வா, கொடி பறக்குது, கேப்டன் மகள் போன்ற படங்களை அவர் தொட்டிருக்கவே கூடாது. மண்வாசனை போன்ற படங்களையே அவர் தொடர்ந்து இயக்கியிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் பாரதிராஜாவின் மிகச்சிறந்த படங்கள் பலவும் எண்பதுகளிலேயே நமக்குக் கிடைத்திருக்கும். தம் படைப்பாற்றலின் பொன்னான காலத்திலிருந்த பாரதிராஜா அதைக் கணிக்கத் தவறிவிட்டார் என்றே தோன்றுகிறது.

ஏறு தழுவுதல் என்னும் தமிழ்ப் பண்பாட்டு விழா தமிழரின் மானத்தோடும் வீரத்தோடும் கொண்டிருந்த ஆதித் தொடர்பை மண்வாசனை கூறுகிறது. போர்வெற்றியால் பெண்ணை அடைவது என்னும் மனித வரலாற்றை இயக்கிய வேட்கைதான் மண்வாசனையின் அடிப்படை. பெண்ணின் மானத்தைக் காக்க அப்பெண்ணைப் பெற்றெடுத்த சமூகமே ஒன்றாய்த் திரளும் என்னும் தமிழர் வாழ்வியல்தான் மண்வாசனையில் இலங்கும் கதை. 'தமிழர் வீரமும் மானமும்' என்கின்ற பொருளில் மண்வாசனை அளவுக்கு வேறு திரைப்படம் ஏதேனும் வலிமையாய்க் கூறியிருக்கிறதா... நினைவுக்கு வந்தால் சொல்லுங்கள். ஏற்றுக்கொள்கிறேன்.

English summary
Poet Magudeswaran's analysis on Bharathiraja's epic Tamil movue Manvasanai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil