»   »  மாதவனின் 'வாழ்த்துகள்'!

மாதவனின் 'வாழ்த்துகள்'!

Subscribe to Oneindia Tamil
Bhavana
சீமான் இயக்கத்தில் உருவாகியுள்ள வாழ்த்துகள் படத்தில் பல வித்தியாசங்கள் இடம் பிடித்துள்ளன.

தம்பி படத்திற்குப் பிறகு மாதவனும், சீமானும் இணைந்துள்ள படம் இது. இடையில் எவனோ ஒருவன் படத்தில் இருவரும் நடிகர்களாக இணைந்து நடித்திருந்தனர்.

தம்பி படத்தில் மாதவனுக்கு அழுத்தமான கேரக்டரைக் கொடுத்திருந்த சீமான், வாழ்த்துகள் படத்திலும் ரசிகர்கள் விரும்பிப் பார்க்கும் வகையிலான ரம்யமான கேரக்டரைக் கொடுத்துள்ளாராம்.

அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தயாரித்துள்ள இப்படத்தின் கதை, இரு குடும்பங்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளை மையமாகக் கொண்டதாகும்.

மாதவனுக்கு ஜோடியாக பாவனா நடித்துள்ளார். மாதவனின் தாயாராக மல்லிகா நாயர் நடித்துள்ளார். இவர் வேறு யாருமல்ல, நடிகர் பிருத்விராஜின் தாயார்தான். மிகுந்த சிரமப்பட்டு இவரை நடிக்க வைத்துள்ளாராம் சீமான். பாந்தமான இந்த கேரக்டரில் மல்லிகா நாயர் சிறப்பாக நடித்துள்ளாராம்.

அதேபோல மாதவனின் தந்தையாக நடித்திருப்பவர் பிரபல ஓவியர் டிராட்ஸ்கி மருது. இதுவரை தூரிகையால் கலக்கி வந்த டிராட்ஸ்கி மருது இப்படத்தில் நல்ல நடிகராகவும் வெளிப்பட்டுள்ளார்.

பாவனாவின் தந்தையாக இளவரசு நடித்துள்ளார். அவரது தாத்தாவாக கூத்துப்பட்டறை முத்துசாமியை நடிக்க வைத்துள்ளார் சீமான். எத்தனையோ நடிகர், நடிகையை திரையுலகுக்குக் கொடுத்த புண்ணியம் பெற்றது இந்த கூத்துப்பட்டறை. இங்கு நடிப்புப் பயிற்சிப் பெற்றவர்தான் பசுபதி என்பது நினைவிருக்கலாம்.

இதுதவிர பண்ருட்டி தொகுதி பாமக எம்.எல்.ஏ வேல்முருகனும் படத்தில் இடம் பெற்றுள்ளார். அவர் திரையில் தலை காட்டுவது இதுவே முதல் முறை. தேர்ந்த நடிகர் போல அசத்தியுள்ளாராம் வேல்முருகன்.

இயக்குநராக பிரபலமாகி விட்ட வெங்கட் பிரபுவும், ஹீரோயின் நடிப்பிலிருந்து வாலண்டரி ரிடையர்மென்ட் வாங்கி விட்ட பிரண்ட்ஸ் பட நாயகி, விஜயலட்சுமியும் கூட படத்தில் உள்ளனர்.

இந்தப் படத்தை கட்டாயம் குடும்பத்தோடுதான் பார்க்க வேண்டும். அந்த அளவுக்கு கதையும், தரமும், பண்பும், பண்பாடும் கை கோர்த்து உலா வரும் வகையில் படத்தை எடுத்துள்ளாராம் சீமான்.

கேட்கவே வித்தியாசமே இருக்கே, பார்க்க எப்படி இருக்கும்?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil