»   »  ஹாலிவுட்டில் பொம்மலாட்டம்

ஹாலிவுட்டில் பொம்மலாட்டம்

Subscribe to Oneindia Tamil

ஹாலிவுட்டில் திரையிடப்படும் முதல் தமிழ்ப் படம் என்ற பெருமை பாரதிராஜாவின் பொம்மலாட்டத்திற்குக் கிடைக்கவுள்ளது.

வெள்ளந்தி மக்களின் பாசக் கோட்டையாக திகழும் தமிழகத்துக் கிராமங்களுக்குள் சினிமா ரசிகர்களை கை பிடித்துக் கூட்டிக் கொண்டு போய் அறிமுகப்படுத்தி, தமிழ் சினிமாவுக்குப் புதிய பாதை காட்டியவர் பாரதிராஜா.

ஆனால் அவரே சில காலத்துக்கு முன்பு தனது பாதையிலிருந்து தவறிப் போய் வேறு பாதைக்குள் (கண்களால் கைது செய்) புகுந்தபோது தமிழ் சினிமா உலகமே பாரதிராஜாவை ஆச்சரியத்துடன் பார்த்தது.

அதன் பிறகு பெரிய இடைவெளி விட்ட பாரதிராஜா மீண்டும் தனது டச்சுடன் பொம்மலாட்டம் மூலம் ரீவிசிட் கொடுக்கிறார். இந்தியிலும், தமிழிலும் உருவாகியுள்ள இப்படத்தில் நானா படேகர், அர்ஜூன், ருக்மணி ஆகியோர் நடித்துள்ளனர். முதல் முறையாக நானா படேகர் தமிழில் வசனம் பேசி அசத்தியுள்ளார். காஜல் அகர்வால் ஹீரோயினாக நடித்துள்ளார்.

சினேகாவின் உள்ளம் கவர்ந்த முன்னாள் கள்வன் நாக் ரவிதான் இப்படத்தின் பட விநியோகம் மற்றும் ஆடியோ உரிமையை வாங்கியுள்ளார். படத்தின் ரஷ் காட்சியைப் பார்த்தவுடன் பிரமித்துப் போய் விட்டாராம் நாக் ரவி. இந்தப்படத்தை பெரிய அளவில் திரையிட அவர் முடிவு செய்து விட்டார்.

அதன்படி ஹாலிவுட்டில் பொம்மலாட்டத்தை ரிலீஸ் செய்கிறார் நாக் ரவி. இந்த யோசனையை பாரதிராஜாவிடம் அவர் சொன்னபோது மகிழ்ந்து போய் விட்டாராம் ராஜா. அப்படியே செய்யுங்கள் என்று பச்சைக் கொடியும் காட்டியுள்ளார்.

இதுகுறித்து நாக் ரவி கூறுகையில், பாரதிராஜாவின் பொம்மலாட்டத்தை உலகம் முழுவதும் விநியோகம் செய்யும் உரிமை கிடைத்திருப்பது எனக்குக் கிடைத்த பெரிய கெளரவம். தமிழ் சினிமாவுக்கு உலகளவில் புதிய பரிமாணத்தை இப்படம் கொடுக்கும்.

எனவேதான் இப்படத்தை ஹாலிவுட்டில் திரையிட நான் தீர்மானித்தேன். இதற்கான ஏற்பாடுகள் விரிவான முறையில் நடந்து கொண்டுள்ளன என்றார் ரவி.

இதுவரை எந்த தமிழ்ப் படமும் (சிவாஜி உள்பட) ஹாலிவுட்டில் திரையிடப்பட்டதில்லை. முதல் முறையாக அந்தப் பெருமை கிராமத்துப் படங்களுக்கு தனி இலக்கணம் வகுத்த பாரதிராஜாவுக்குக் கிடைக்கப் போகிறது என்பதில் தமிழர்களுக்கும் தனிப் பெருமைதான்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil