»   »  நடிகர்களுக்கு கேரவன் கட்!

நடிகர்களுக்கு கேரவன் கட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர்களின் சம்பளக் குறைப்புக்கு ஒரு வழியாக, வெற்றிகரமாக பிள்ளையார் சுழி போடப்பட்டு விட்டது.

முடியுமா, முடியாதா என்று ரொம்ப நாளாக, நடிகர்களின் சம்பளத்தைக் குறைப்பது தொடர்பான விவகாரம் இழுத்துக் கொண்டும், பறித்துக் கொண்டும் இருக்கிறது. பூனைக்கு யார் மணி கட்டுவது என்று தெரியாமல் குழம்பிக் கிடந்தது கோலிவுட்.

நடிகர்கள் தங்களது சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் அவ்வப்போது குரல் கொடுத்து வந்தனர். கே.ஆர்.ஜி. போன்ற பெரிய தயாரிப்பாளர்கள் வெளிப்படையாகவே ஹீரோக்களைக் குறை கூறி வந்தனர்.

தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் நஷ்டத்திற்கு முக்கிய காரணமே நடிகர்களின் சம்பளம்தான் காரணம் என கே.ஆர்ஜி கோபமாக கூறி வந்தார்.

இப்போது அதற்கு ஒரு வழியாக விடிவுகாலம் பிறந்துள்ளது. தயாரிப்பாளர்களும், நடிகர்களும் சேர்ந்து இதற்கு ஒரு வழி ஏற்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக தயாரிப்பாளர்கள் கூடி ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளனர்.

அதன்படி நடிகர்களுக்காக தயாரிப்பாளர்கள் செலவில், கேரவன் வண்டியை வாடகைக்கு எடுப்பதில்லை என்று தயாரிப்பாளர்கள் தீர்மானித்துள்ளனர். நடிகரோ, நடிகையோ, கேரவன் தேவை என விரும்பினால், அதை அவர்களது சொந்தச் செலவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

கேரவன் என்பது சகல வசதிகளுடன் கூடிய வாகனமாகும். இந்த வாகனத்தின் ஒரு நாள் வாடகை ரூ. 5000 ஆகும். 60 நாட்களுக்கு ஒரு ஹீரோ கால்ஷீட் கொடுப்பதாக இருந்தால், அந்த 60 நாட்களும் கேரவன் வாகனத்தை வாடகைக்கு அமர்த்தினால் ரூ. 3லட்சம் வரை செலவு தாளித்து விடும்.

ஹீரோக்களுக்கு மட்டுமல்லாது, ஹீரோயின், முக்கிய வில்லன், காமெடியன் என பலருக்கும் கேரவன் தேவைப்படுகிறது. இதெல்லாம் தயாரிப்பாளரின் தலையில்தான் விடியும். மொத்தமாக ரூ. 15 முதல் 20 லட்சம் வரை கேரவனுக்கே போய் விடுகிறது.

இப்போது இந்த செலவுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது தயாரிப்பாளர் சங்கம். இதுகுறித்து சங்கத் தலைவர் ராம.நாராயணன் கூறுகையில், படத் தயாரிப்புச் செலவைக் குறைப்பதற்கான முதல் நடவடிக்கை இது. இதேபோல மேலும் பல வீண் செலவுகளைக் குறைக்க வேண்டியுள்ளது.

ஆடம்பரமான பூஜைகள், ஆடம்பரமான அழைப்பிதழ்கள், பெரும் செலவில் நடத்தப்படும் ஆடியோ வெளியீட்டு விழா போன்றவற்றையும் குறைக்க யோசித்து வருகிறோம்.

படிப்படியாக ஒவ்வொரு ஆடம்பர செலவையும் குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம். இதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பார்கள் என எதிர்பார்க்கிறோம் என்றார் ராம.நாராயணன்.

சுபமாக முடியட்டும்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil