»   »  நாய்க்கு பாசம் காட்டிய சந்திரசேகர்!

நாய்க்கு பாசம் காட்டிய சந்திரசேகர்!

Subscribe to Oneindia Tamil
Chandrasekar

சற்றும் சம்பந்தம் இல்லாமல் தன்னிடம் பாசம் காட்டிய நாய் மீது அன்பு கொண்ட நடிகர் சந்திரசேகர் அதை தனது வீட்டுக்கு எடுத்துச் சென்று வளர்க்க ஆரம்பித்துள்ளார்.

நடிகர் சந்திரசேகர் தனது குடும்பத்தினருடன் நெல்லையில் நடந்த திமுக இளைஞர் அணி மாநாட்டுக்காக கடந்த 14ம் தேதி காரில் சென்னையிலிருந்து நெல்லை சென்றார்.

வழியில் திண்டிவனம் அருகே ஒரு மோட்டலில் காரை நிறுத்தி குடும்பத்தோடு சாப்பிட்டார். அப்போது ஒரு நாய் சந்திரசேகரிடம் வந்து நின்று பாசத்துடன் ஒட்டிக் கொண்டது.

அதைப் பார்த்து ஆச்சரியமடைந்த சந்திரசேகர், நாய் யாருடையது என்று ஹோட்டல்காரர்களிடம் அவர் விசாரித்தபோது, எங்கிருந்தோ வந்த நாய் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து மாநாட்டுக்குப் போய் விட்டுத் திரும்பும்போது வீட்டுக்குக் கொண்டு வந்து வளர்க்கலாம் என திட்டமிட்டு நெல்லைக்குச் சென்றார்.

பின்னர் நெல்லையிலிருந்து சென்னைக்குத் திரும்பும்போது அந்த ஹோட்டலுக்குப் போய் நாயைப் பற்றி விசாரித்தார். அதற்கு ஹோட்டலில் இருந்தவர்கள், அந்த நாயை வேறு யாரோ வந்து அழைத்துச் சென்று விட்டதாக தெரிவித்தனர்.

ஏமாற்றமடைந்த சந்திரசேகர், அந்த நாயின் பாசத்தை மறக்க முடியாமல் ஒலக்கூர் காவல் நிலையம் சென்று எப்படியாவது அந்த நாயை மீட்டுத் தருமாறு கேட்டுக் கொண்டார்.

போலீஸாரும் சந்திரசேகரின் 'நாயுள்ளத்தைப்' பார்த்து வியந்து அந்த நாயைத் தேடிக் கண்டுபிடித்தனர். பின்னர் அந்த நாயை வளர்த்து வருபவரிடம் பேசி அதைப் பெற்று சந்திரசேகரிடம் ஒப்படைத்தனர்.

சந்தோஷமடைந்த சந்திரசேகர், நாயுடன் சென்னைக்குத் திரும்பினார். அனாதரவாக திரிந்து கொண்டிருந்த அந்த திண்டிவனம் நாய் இப்போது சந்திரசேகரின் சென்னை வீட்டில் 'ஜம்'மென்று வளைய வந்து கொண்டிருக்கிறது.

வெல், வெல்!!

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil