»   »  ரெட் சிக்கலில் சேரன்!

ரெட் சிக்கலில் சேரன்!

Subscribe to Oneindia Tamil

மாயக்கண்ணாடி கவிழ்த்து விட்டு விட்டதால் சேரன் பெரும் சிக்கலில் சிக்கியுள்ளார்.

நல்ல படங்களாகக் கொடுத்து வந்த சேரனுக்கு என்ன ஆனதோ, திடீரென தேவையில்லாமல் மாயக்கண்ணாடி படத்தை இயக்கி கடும் விமர்சனங்களைச் சந்தித்துள்ளார். இப்படி ஒரு படம் சேரனுக்குத் தேவையா என்று பலரும் விமர்சித்து தீர்த்து விட்டனர்.

ஆனால் விமர்சகர்களின் விமர்சனங்களை ஆக்கப்பூர்வ ஆலோசனையாக எடுத்துக் கொள்ளாமல் அவர்கள் மீது பாய்ந்து குதறியுள்ளார் சேரன். பத்திரிக்கையாளர்களை நாய்கள் என்று கூட அவர் காட்டமாக விமர்சித்ததாகவும் ஒரு தகவல் உண்டு.

சேரனை விமர்சித்த அனைவருமே, அவர் முன்பு போல நல்ல படங்களை கொடுக்க வேண்டும், வழக்கமான சினிமா பார்முலாவுக்குள் அவர் சிக்கி விடக் கூடாது, தேவையில்லாத படங்களை எடுத்து தொய்ந்து போய் விடக் கூடாது என்ற நல்லெண்ணத்துடன்தான் அவரை விமர்சித்தனர்.

மாயக்கண்ணாடி ஃபிளாப் ஆன பின்னர் சத்தம் இல்லாமல் இருந்து வந்தார் சேரன். விநியோகஸ்தர்கள் கண்ணில் படாமல் இருந்து வந்தார். கடும் நஷ்டத்தை சந்தித்த விநியோகஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்களும், சேரனை சந்தித்து நஷ்டத்திற்கு இழப்பீடு கோர முடிவு செய்தனர்.

இழப்பீட்டைத் தர சேரன் முன்வராவிட்டால் அவருக்கு ரெட் கார்டு போடவும் தீர்மானித்தனர். தமிழ் சினிமாவில் ஒருவருக்கு ரெட் கார்டு போடப்பட்டால் அவர் சொந்தமாக படம் தயாரிக்க முடியாது, இயக்க முடியாது, விநியோகிக்க முடியாது. மொத்தத்தில் ஒன்றும் செய்ய முடியாது.

இதை உணர்ந்த சேரன் ஒரு காம்ப்ரமைஸ் பார்முலாவுடன் விநியோகஸ்தர்கள் தரப்பை அணுகினார். அதன்படி தான் அடுத்து இயக்கப் போகும் பொக்கிஷம் படத்தை விநியோகஸ்தர்களுக்காக இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார் சேரன்.

மாயக்கண்ணாடியால் ஏற்பட்ட நஷ்டத்தை பொக்கிஷம் மூலம் சரி செய்து விடுவதாக அவர் உறுதியளித்துள்ளார். இந்தப் படத்தை முதலில் சேரனே தயாரிப்பதாக இருந்தது. ஆனால் அதற்கு விநியோகஸ்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த முடிவிலிருந்து அவர் பின் வாங்கி விட்டார். வேறு ஒருவர் தற்போது தயாரிக்கவுள்ளார்.

நல்லபடியாக பிரச்சினை முடியட்டும், சேரன் போன்றவர்கள் முடங்க ஒரு படம் காரணமாகி விடக் கூடாது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil