»   »  தெலுங்கு காமெடியன்களும் இனி ஹீரோக்கள்!

தெலுங்கு காமெடியன்களும் இனி ஹீரோக்கள்!

Subscribe to Oneindia Tamil

தமிழில் வடிவேலுவும், விவேக்கும் ஹீரோக்களாக அவதாரம் எடுத்திருப்பதைப் போல தெலுங்கு காமெடி நடிகர்களும் ஹீரோக்களாக மாற ஆரம்பித்துள்ளனர்.

தமிழ் சினிமாவும், தெலுங்கு சினிமாவும் இரட்டைக் குழல் துப்பாக்கியைப் போலவே. இங்கு என்ன நடந்தாலும் அங்கு பிரதிபலிக்கும். அதுபோலவே தெலுங்கு டிரெண்ட் தமிழிலும் எதிரொலிக்கும். இப்படி இரு திரையுலகம் கை கோர்த்து நடை போடுவது ரொம்ப காலமாகவே நடந்து வருகிறது.

இந்த நிலையில் தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் டிரண்ட் ஒன்று தெலுங்கிலும் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. அது, காமெடியன்கள் ஹீரோக்களாக அவதாரம் எடுப்பதுதான்.

தமிழில் வடிவேலு இம்சை அரசன் 23ம் புலிகேசி படம் மூலம் ஹீரோவாக மாறினார். ரெகுலர் ஹீரோவாக இல்லாவிட்டாலும் கூட இடையில் சில படங்களில் காமெடி டிராக்கில் நடித்து விட்டு இப்போது இந்திரலோகத்தில் நா. அழகப்பன் படம் மூலம் மறுபடியும் நாயகனாகியுள்ளார்.

அதேபோல விவேக்கும் சொல்லி அடிப்பேன் படம் மூலம் ஹீரோவாகியுள்ளார். இப்படம் ஹிட் ஆனால் அவரும் தொடர்ந்து ஹீரோவாக மாறக் கூடிய அபாயம் உள்ளது.

தமிழின் முன்னணி காமெடியன்கள் இப்படி நாயகர்களாக மாறியுள்ளதைப் பார்த்த சில தெலுங்கு காமெடியன்களுக்கும் ஹீரோ ஆசை வந்து விட்டதாம். அவர்களும் இப்போது ஹீரோக்களாக அவதாரம் எடுத்துள்ளனர்.

தெலுங்கில் பிரபலமான காமெடியன் பிரம்மானந்தம் ஒரு படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார். இவர் மொழி படத்தில் நடித்துள்ளார். எப்போதும் டென்ஷனாக இருக்கும் கதாபாத்திரத்தில் வருவாரே அவர்தான் பிரம்மானந்தம்.

எவடி ஆனந்தம் வாடித்தி என்ற படத்தில் பிரம்மானந்தம்தான் ஹீரோவாம். அவருக்கு ஜோடி போடப் போவது யார் தெரியுமா, ஆர்த்தி அகர்வால். பம்பரக் கண்ணாலே படத்தில் ஸ்ரீகாந்த்துக்கு ஜோடி போட்டவர்தான் இந்த ஆர்த்தி அகர்வால்.

ஏற்கனவே காமெடியில் கிங் ஆக இருக்கும் பிரம்மானந்தம் இந்தப் படம் மூலம் ரசிகர்களை எந்த அளவுக்குக் கவரப் போகிறார் என்பதை அறிய தெலுங்கு திரையுலகமே அதிக ஆவலுடன் உள்ளது.

அதேபோல சுனில் என்ற காமெடி நடிகரும் ஹீரோவாகியுள்ளார். இவர் ஹீரோவாக நடித்த அந்தால ராமுடு படம் ஹிட் ஆகி விடவே அவரும் ஹீரோ வரிசையில் சேர்ந்து விட்டார்.

இதைப் பார்த்து விட்டு மேலும் சில காமெடியன்களும் ஹீரோக்களாக மாறி விடலாமா என்று நாள், நட்சத்திரம் பார்த்துக் கொண்டுள்ளனராம்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil