»   »  2007ல் கோலிவுட் 'கலாட்டாக்கள்'!

2007ல் கோலிவுட் 'கலாட்டாக்கள்'!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Srikanth with Vanthana

கலகலப்புக்குப் பஞ்சம் இல்லாத தமிழ் சினிமாவில், 2007ல் பல கலாட்டாக்களும் நடந்தேறி பரபரப்பையும் கூட்டியிருந்தன.

முதல் பரபரப்பு ஸ்ரீகாந்த் - வந்தனா கல்யாண கலாட்டா. இருவருக்கும் கல்யாணம் என்ற செய்தி முதலில் வெளியானது. ஆனால் அடுத்த சில நாட்களிலேயே வந்தனாவின் சகோதரர் மீது கிரிமினல் வழக்கு இருப்பதாகவும், அவர் பண மோசடியில் சிக்கியவர் என்றும் செய்திகள் வந்தன.

இதைப் பார்த்து அதிர்ந்தது ஸ்ரீகாந்த் தரப்பு. இதையடுத்து கல்யாணம் நின்றது. இரு தரப்பும் பேச்சுவார்த்தைகளில் இறங்கின. ஆனாலும் உடன்பாடு எதையும் காணோம்.

இதனால் தடாலடியாக ஸ்ரீகாந்த் வீட்டுக்கு இரவில் சூட்கேஸோடு வந்திறங்கிய வந்தனா, இது எனது கணவர் வீடு, நான் இங்குதான் இருப்பேன் என்று கூறி அதிரடியாக குடியேறினார்.

பயந்து போன ஸ்ரீகாந்த் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேறி ஹோட்டல்களில் தங்கினர்.

இதைத் தொடர்ந்து இரு தரப்பும் போலீஸுக்குச் சென்றன. நீதிமன்றத்திற்கும் வழக்கு போனது, விசாரணை, வழக்கு, முன்ஜாமீன் என சட்டப் போரில் ஈடுபட்டு வந்த இரு தரப்பும் வக்கீல்களின் மூலமாக சமரசப் பேச்சிலும் இறங்கினர்.

இதில் உடன்பாடு ஏற்பட்டது, வந்தனாவை ஏற்றுக் கொள்ள ஸ்ரீகாந்த்தும், அவரது குடும்பத்தினரும் ஒப்புக் கொண்டனர். இதைத் தொடர்ந்து இருவரும் முறைப்படி மீண்டும் ஒருமுறை கல்யாணம் செய்து கொண்டனர். தடபுடலான வரவேற்பு நிகழ்ச்சியையும் நடத்தி ஊரறிய தம்பதிகளாகினர்.

குஷ்புவுக்கு செருப்பு சிக்கல்:

அடுத்த பரபரப்பு குஷ்பு. வல்லமை தாராயோ படத்தின் பூஜையின்போது சாமி சிலைகளுக்கு அருகே செருப்புக் காலுடன், கால் மேல் கால் போட்டபடி அமரப் போக, குஷ்புவுக்கு வந்தது சிக்கல்.

இந்து முன்னணி அமைப்பினர் சரமாரியாக வழக்குகள் தொடர்ந்தனர். இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தி விட்டார் குஷ்பு என குரல்கள் எழ, குஷ்பு அதிர்ந்து போனார். கடவுள்களை அவமானப்படுத்தும் நோக்கில் அப்படி அமரவில்லை என்று அவர் மறுப்பும் வெளியிட்டார்.

குஷ்புவுக்கு ஆதரவாக பார்த்திபன், சத்யராஜ் ஆகியோர் குரல் கொடுத்தனர். அப்போதைக்கு பெரும் பரபரப்பாக இருந்தாலும் இப்போது இந்த விவகாரம் சலனமற்றுப் போய் விட்டது.

பத்மப்ரியாவுக்கு அடி:

மிருகம் படத்தின் ஷூட்டிங்கின்போது, நடிகை பத்மப்ரியாவை இயக்குநர் சாமி அடித்ததாக வெளியான செய்தி, திரையுலகின் அடுத்த பரபரப்பு.

மதுரை அருகே குரண்டி என்ற கிராமத்தில் நடந்த மிருகம் படத்தின் ஷூட்டிங்கின்போது, கணவனின் சடலத்தைப் பார்த்து மனைவியான பத்மப்ரியா கதறி அழ வேண்டும். ஆனால் பத்மப்ரியாவின் அழுகை சாமிக்கு திருப்தியைத் தரவில்லை. பலமுறை ரீடேக் எடுத்தும் கூட காட்சி சரியாக வராததால் கடுப்பான சாமி, பத்மப்ரியாவை அடிக்கப் போக, அவர் கோபமடைந்து ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து வெளியேறி சென்னைக்கு வந்தார்.

தயாரிப்பாளர் கவுன்சிலில் சாமி மீது சரமாரியாக புகார் கொடுத்தார். பாலியல் தொல்லைகளை சாமி கொடுத்தார் என்பதும் பத்மப்ரியாவின் ஒரு புகார்.

சாமியையும், பத்மப்ரியாவையும் நேரில் வரவழைத்து தயாரிப்பாளர் கவுன்சில் விசாரித்தது. அப்போது பத்மப்ரியாவின் பாலியல் புகார் உண்மை இல்லை என்று தெரிய வந்தது. சாமியும், அடித்ததற்காக மன்னிப்பு கேட்டார். இருந்தாலும் அவருக்கு ஒரு ஆண்டு தடை விதித்தது தயாரிப்பாளர் கவுன்சில்.

இந்த சலசலப்பு அடங்கிய நிலையில் சமீபத்தில் மிருகம் வெளியாகி வெற்றிப் படமாகவும் மாறியுள்ளது.

கமல் மீது வழக்கு:

இதேபோல இன்னொரு பரபரப்பு, தசாவதாரம் படத்தின் கதை தொடர்பாக உதவி இயக்குநர் செந்தில்குமார் என்பவரின் சட்டப் போராட்டம்.

தசாவதாரம் படத்தின் கதை தன்னுடையது என்று கோரி முதலில் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் கமல் மீது வழக்கு தொடர்ந்தார் செந்தில்குமார். ஆனால் அதில் கமலுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.

விடாத செந்தில்குமார், சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார். அங்கும் கமலுக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்தது. இதையடுத்து அப்பீல் செய்தார். அதிலும் செந்தில்குமாரின் மனு தள்ளுபடி ஆனது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப் போவதாக அறிவித்தார் செந்தில்குமார்.

இந்த நிலையில் கமல்ஹாசனும், அவரது உதவியாளர்களும் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் செந்தில்குமார். இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் எந்த நடவடிக்கையும் இல்லை. இதையடுத்து நீதிமன்றத்தை செந்தில்குமார் அணுக, கமல் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன் பேரில் போலீஸார் கமல்ஹாசன் உள்ளிட்டோர் மீது கொலை மிரட்டல் வழக்கைத் தொடர திரையுலகமே அதிர்ந்து போனது.

இந்த ஆண்டில் திரையுலகம் சந்தித்த பரபரப்பு நிகழ்வுகளில் இதுவும் ஒன்று.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil