»   »  பள்ளிக்கூடம் - வரதராஜன் புகழாரம்

பள்ளிக்கூடம் - வரதராஜன் புகழாரம்

Subscribe to Oneindia Tamil


தங்கர் பச்சானின் இயல்பு இயக்கத்தில் உருவாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் பள்ளிக்கூடம் படத்திற்கு தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் வரதராஜன் புகழாரம் சூட்டியுள்ளார். இதுபோன்ற படங்களுக்கு தமிழக அரசு ஆக்கமும், ஊக்கமும் கொடுக்க வேண்டும் எனவும் அவர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


இதுதொடர்பாக வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் திரையுலகம் தனது 75வது ஆண்டு விழாவைக் கொண்டாடி வருகிறது. பல்லாயிரக்கணக்கான கலைஞர்களுக்கு வாழ்வளிக்கும் துறையாக திகழ்கிறது.

இந்தியாவிலேயே தமிழில் தான் அதிக அளவில் படங்கள் தயாரிக்கப்படுகின்றன. இருந்தாலும், பகுத்தறிவு, சுயமரியாதை, பண்பாடு, கலாச்சாரம், சமத்துவம், சமூக அக்கறை ஆகியவற்றை முன்னிருத்தி வெறும் 10 சதவீதப் படங்களே எடுக்கப்படுகின்றன.

இந்த பத்து சதவீதப் படங்களில் கணிசமான பங்களிப்பை சிறு மற்றும் குறு முதலீட்டில் படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் நிறைவேற்றுகிறார்கள்.

சமீபத்தில் பெரியார் படத்திற்குப் பிறகு தமிழில் தரமான படமாக தங்கர் பச்சானின் பள்ளிக்கூடம் படம் வந்துள்ளது. கிராமப்புற பள்ளிக்கூடத்தை முன்னாள் மாணவர்கள் முயன்று புணரமைப்பதுதான் படத்தின் மையக் கருவாக உள்ளது.

கல்வியையும், கல்வியோடு, வாழ்க்கையையும் கற்றுத் தருகிற பள்ளிகள் போற்றிப் பாதிக்கப்பட வேண்டியவை எனும் கருத்தை சமூக உணர்வோடு இந்த படம் வெளிப்படுத்துகிறது.

இப்படத்தின் ஆக்கத்திற்காக உழைத்த இயக்குநர் தங்கர் பச்சானுக்கும், மற்றும் பிற கலைஞர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.

இதுபோன்ற படத்தை தமிழக அரசு ஆதரித்து ஊக்கப்படுத்துவது அவசியம் என்று கருதுகிறோம். இது மேலும் பல நல்ல திரைப்படங்கள் தமிழில் குறைந்த முதலீட்டில் வெளிவருவதற்கு உத்வேகமளிக்கும்.

நிர்ணயிக்கும் கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை பல திரையரங்குகளில் உள்ளதால், பள்ளிக்கூடம் போன்ற நல்ல திரைப்படங்களை கூடுதலான மக்கள் பார்ப்பதற்கு வாய்ப்பு இல்லாத நிலை ஏற்படுகிறது.

இதனால் சிறு, நடுத்தர திரைப்படத் தயாரிப்பாளர்கள் கூடுதலாக இழப்பைச் சந்திக்க நேரிடுகிறது. எனவே அரசு வழிகாட்டுதலின்படி உள்ள கட்டணங்களை மட்டுமே தியேட்டர்களில் வசூலிக்கும் நடைமுறையை உறுதி செய்திட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

மேலும் இப்படத்தை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் பார்ப்பதற்கான வாய்ப்பை தமிழக அரசு உருவாக்கித் தர வேண்டும் என்று கூறியுள்ளார் வரதராஜன்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil