»   »  திரும்பி வந்தார் தீபா

திரும்பி வந்தார் தீபா

Subscribe to Oneindia Tamil

வளர்ப்புப் பெற்றோர் என்னைத் தவறான வழிக்குக் கொண்டு செல்ல முயன்றதால்தான் வீட்டை விட்டு வெளியேறினேன் என்று சில நாட்களுக்கு முன்பு திடீரென காணாமல் போன துணை நடிகை தீபா கூறியுள்ளார்.


சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் தீபா. செல்வராஜ், சரோஜா தம்பதியினரின் வளர்ப்பு மகள் இவர். கிரிஜா எம்.ஏ., மலர்கள் உள்ளிட்ட சில டிவி சீரியல்களில் நடித்துள்ளார் தீபா. இதுதவிர வசந்தம் வந்தாச்சு படத்திலும் தலை காட்டியுள்ளார்.

ப்ரீத்தி வர்மா பாணியில் சமீபத்தில் படப்பிடிபிலிருந்து எஸ்கேப் ஆகி விட்டார் தீபா. இதையடுத்து செல்வராஜ் போலீஸில் புகார் கொடுத்தார். தனது புகாரில், சென்னை போரூரைச் சேர்ந்த தனநாயகம் என்ற சினிமா ஏஜென்ட்தான் தனது மகளைக் கடத்திச் சென்று விட்டதாக கூறியிருந்தார்.

இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.தலைமறைவாக இருந்து வந்த தீபா, திடீரென தனது நிஜ தாயுடன், மகாகவி பாரதி நகர் காவல் நிலையத்தில் ஆஜரானார். பின்னர் போலீஸாரிடம் தான் காணாமல் போனது தொடர்பாக விளக்கினார்.

அவர் கூறுகையில், எனது வளர்ப்புப் பெற்றோரான செல்வராஜும், சரோஜாவும் என்னை மகள் போல நடத்தவில்லை. மாறாக, என்னை வைத்து பணம் சம்பாதிக்கவே நினைத்தனர்.

நான் படித்து வேலைக்கு செல்வதை அவர்கள் விரும்பவில்லை. அதைக் காட்டிலும் சினிமாவில் நடித்தால்தான் நிறைய பணம் கிடைக்கும் என்று வலியுறுத்தினர். மேலும், அதற்கு ஒரு சிலருடன் ஒத்து போக வேண்டும். அப்படி நடந்து கொண்டால் பணம் குவிக்கலாம் என எனக்கு ஆசை வார்த்தைகளைக் கூறி விபச்சாரத்தில் ஈடுபடுத்தப் பார்த்தனர்.

இதனால் நான் மிகுந்த வேதனை அடைந்தேன். அந்த நிலையில்தான் மணமாகியும் கூட, தனித்து வாழ்ந்து வரும் தனநாயகம் மீது எனக்கு அன்பு பிறந்தது. நானாக விரும்பித்தான் அவருடன் போனேன்.

என்னைப் பெற்றெடுத்த நிஜமான தாயின் சம்மதத்தைப் பெற்று, தனநாயகத்தை மணந்து கொண்டு விழுப்புரத்தை அடுத்துள்ள குப்பம் பகுதியில் நிம்மதியாக வாழ்ந்து வருகிறேன் என்றார் தீபா.

இதைத் தொடர்ந்து தீபாவை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர் மைனர் பெண் என்பதால் அவரை அரசு மகளிர் காப்பகத்தில் சேர்த்தனர். தனநாயகத்தைக் கைது செய்ய அவருக்கு வலை வீசப்பட்டுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil