»   »  கோவிலுக்குள் ஷூட்டிங் - பொங்கிய பக்தர்கள்

கோவிலுக்குள் ஷூட்டிங் - பொங்கிய பக்தர்கள்

Subscribe to Oneindia Tamil
Theetha Sharma with Vadivelu

சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கோவிலில் நடந்த வடிவேலு நடிக்கும் இந்திரலோகத்தில் நா. அழகப்பன் பட ஷூட்டிங்கால் பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் ஆதிகேசவப் பெருமாள் கோவில் உள்ளது. 1,000 ஆண்டு பழமையான இந்தக் கோவிலில் தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணிவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை.

இந்த நிலையில் வடிவேலு நாயகனாக நடிக்க, தீத்தா ஷர்மா ஜோடி போட, தம்பி ராமையா இயக்க,ஷ்ரியா ஒரு பாட்டுக்கு ஆடியுள்ள இந்திரலோகத்தில் நா. அழகப்பன் படத்தின் ஷூட்டிங்கை இங்கு நடத்தி வருகின்றனர்.

இதற்காக 500க்கும் மேற்பட்ட படக்குழுவினர் கோவிலில் குவிந்தனர். பிரமாண்ட யாக சாலை செட்களும் போடப்பட்டது.

இதனால் பகலில் சாமி கும்பிட வரும் பக்தர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. கோவில் நிர்வாகமும், பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.

ஆனால் படக்குழுவினரோ, அதை கோவில் என்றும் பாராமல், கண்ட இடத்தில் சாப்பிடுவது, சாப்பிட்ட இலையை அப்படியே போட்டு வைப்பது என்று கோவிலையே நாறடித்து வைத்தனர்.

இதனால் பக்தர்கள் பெரும் அதிருப்தியும், கோபமும் அடைந்தனர். கோவில் நிர்வாகம், பணத்திற்காக கோவிலை வாடகைக்கு விட்டு, பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதைப் பொறுக்க முடியாத பொதுமக்களும், பக்தர்களும், பேரூராட்சித் தலைவர் செல்வமேரி அருள்ராஜிடம் சென்று எப்படி படக்குழுவினருக்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி கொடுத்தீர்கள் என்று கேட்டனர். ஆனால் அவரோ இதுபற்றி எதுவும் தனக்கு தெரியாது என்றார்.

இதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் அருள்ராஜ், திமுக நகர செயலாளர் சதீஷ் ஆகியோர் பொதுமக்களுடன் திரளாக சென்று படப்பிடிப்பு குழுவினரிடம் படப்பிடிப்பை நிறுத்தக் கோரினர். ஆனால் அவர்களோ முறையாக அறநிலையத் துறையினரிடம் வாங்கிய அனுமதி கடிதத்தை
எடுத்துக் காட்டி, நிறுத்த முடியாது என்று தெனாவெட்டாக பேசியுள்ளனர்.

இதனால் கடுப்பான பொதுமக்கள் படப்பிடிப்புக் குழுவினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நிலைமை மோசமாவதைப் பார்த்த படக்குழுவினர் படப்பிடிப்பை நிறுத்தி விட்டு உடனடியாக இடத்தைக் காலி செய்தனர்.

இருப்பினும் வடிவேலு சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டும் இரவு நேரத்தில் வந்து படமாக்கியுள்ளார் இயக்குநர் தம்பி ராமையா.

மிகப் பழமையான, புராதனமான இதுபோன்ற கோவில்களில் படப்பிடிப்பு நடத்த அனுமதி தரவே கூடாது. சினிமாக்காரர்களால் கோவிலின் புனிதமும், சுத்தமும் கெட்டுப் போய் விட்டது என்று அப்பகுதி பொதுமக்கள் ஆவேசத்துடன் கூறுகின்றனர்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil