twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'லீவுக்கு வந்த ரிஷி மாதிரி இருக்கியே...' - எந்திரனில் சுஜாதாவின் நகைச்சுவை!

    By Staff
    |

    Enthiran
    எந்திரனில் சுஜாதா எழுதி இடம்பெற்ற ஒரு நகைச்சுவை வசனத்தை அவரது நினைவஞ்சலிக் கூட்டத்தில் சொல்லி நினைவு கூர்ந்தார் இயக்குநர் ஷங்கர்.

    அமரர் சுஜாதாவின் இரண்டாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டலில் சிறப்புக் கூட்டம் ஒன்றை உயிர்மை பதிப்பகமும் மற்றும் சுஜாதா அறக்கட்டளை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இந்தக் கூட்டத்தில் இயக்குனர்கள் ஷங்கர், வசந்த், ராஜீவ்மேனன், நடிகர் பார்த்திபன், ஏ. நடராஜன், மதன், இந்திரா பார்த்தசாரதி, ஞானக்கூத்தன், மனுஷ்யபுத்திரன் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.

    விழாவில் இயக்குநர் ஷங்கர் பேசுகையில், "சினிமாவில் சுஜாதாவின் பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவின் வசனத்தை சுருக்கமாக அதே நேரம் அழுத்தமாக இருக்கும்படி மாற்றியவர் சுஜாதாதான். அவர் பாதிப்பு இல்லாமல் இன்றைக்கு யாராலும் எழுத முடியாது.

    இந்தியன் படத்தில்தான் அவருடன் இணைந்து பணியாற்ற ஆரம்பித்தேன். அதன் பிறகு எனக்கு அவர்தான் அனைத்துப் படங்களிலும் வசனம் எழுதினார். எனக்கு அவர் எழுதிய வசனங்கள் அனைத்துமே சிறப்பானவை.

    குறிப்பாக இந்தியனில் 'பக்கத்துல இருக்கிற குட்டி குட்டி நாடெல்லாம் எங்கேயோ போயிடுச்சி. ஆனா இந்தியா இன்னும் அப்படியே இருக்கு.. ஏன்? ஏன்னா அங்கெல்லாம் கடமையை மீறுவதற்குதான் லஞ்சம். இங்க மட்டும்தான் கடமையைச் செய்வதற்கே லஞ்சம்…' என்று எழுதியிருப்பார். அது ரொம்பப் பிடிச்சிருந்தது எனக்கு.

    அந்நியனில் அவர் எழுதிய பல வசனங்கள் மிகச் சிறப்பானவை. ட்ரெயின்ல அம்பி கேரக்டர் பேசுறது, ரெமோ கேரக்டருக்கு ஹீரோயின் கையில முத்தம் கொடுக்கறப்போ 'என்ன போப்பாண்டவர் மாதிரி தர்றே"னு கேட்கிற அந்த நுணுக்கமான நகைச்சுவை... இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்.

    அவர் எழுதின எல்லா வசனங்களுமே அற்புதமானவை. சிவாஜி படத்துல ரஜினி சார் அமெரிக்காவுல இருந்து வர்ற காட்சியில, சென்னையின் முன்னேற்றத்தைப் பார்த்து வியப்பார். அப்போ, சிக்னல்ல ஒரு பிச்சைக்காரப் பெண் கார் கதவைத் தட்டும்போது, 'எல்லாம் வந்துடுச்சி.. ஆனா இது (வறுமை) இன்னும் போகலை' என்பார்.

    எல்லாத்தையும் இழந்த பிறகு, வக்கீலிடம் ரஜினி சார் பேசும், 'நான் நடக்கப் பழகிக்கறேன் சார்' என்ற ஒரு வரி வசனத்தில் எல்லாத்தையும் சொல்லிவிடுவார் சுஜாதா சார். பக்கம் பக்கமா பேச வேண்டிய அவசியமில்லாம, பளிச்சின்னு ரெண்டே வரியில, முடிஞ்சா ரெண்டு வார்த்தையில் சொல்லிடணும் என்பது அவர் கற்றுக் கொடுத்த பாடம்தான்.

    எந்திரன் படத்தில அவரது வசனங்கள் பல இடங்களில் என்னை வியக்க வைத்தவை. நகைச்சுவையை அவரளவுக்கு வேறு யாராலும் வெளிப்படுத்த முடியாத அளவுக்கு அத்தனை சிறப்பாக இருக்கும். உதாரணத்துக்கு இந்தப் படத்துல ஒரு காட்சி...

    நீண்ட நாள் கழிச்சு ஹீரோ ரஜினி சார், வீடு திரும்புகிறார், தாடி மீசையோட… கதவைத் திறந்ததும், அவரது அம்மா, அவரது நீளமான முடியையும், தாடியையும் பார்த்து பேசும் வசனம் இது.

    'என்னப்பா, லீவுக்கு வந்த ரிஷி மாதிரி இருக்க!'.

    எனக்கு இந்த சின்ன வசனமும், அதில் இருக்கிற நகைச்சுவையும் பிரமிப்பாக இருந்தது. நீங்கள் படம் பார்க்கும்போது இதுபோன்ற நிறைய வசனங்களை உணர முடியும். இப்படி ஒரு படைப்பாளி இல்லையேன்னு வருத்தப்படுவீங்க

    தனிப்பட்ட முறையில் எனக்கு நல்ல நண்பனாக, ஒரு புரொபஸராக இருந்து பல விஷயங்களைச் சொல்லிக் கொடுத்தார். எனது குடும்பத்தில் அவரும் ஒருவர். ஒரு தந்தையின் ஸ்தானத்திலிருந்து எனக்கு வழிகாட்டியவர். அவரை ரொம்ப மிஸ் பண்றேன்" என்றார்.

    மதன் கோரிக்கை...

    கார்டூனிஸ்ட் மதன் பேசுகையில், "தலைமுறைகளைத் தாண்டி இன்றும் பல இளைஞர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்பவர் சுஜாதா. கோட்டூர்புரத்தில் புதிதாக அமையும் அரசு நூலகத்தில் சுஜாதாவுக்கென்று தனி பகுதி அமைய வேண்டும். அதில் அவர் வசனம் எழுதிய படங்களின் கிளிப்பிங்குகளைப் போட்டுக் காட்டலாம். அவரது கையெழுத்துப் பிரதிகள், புத்தகங்கள், ஓவியங்கள், நிகழ்வுகள் இப்படி பல விஷயங்களை சேகரித்து வைக்கலாம். அரசுக்கு இதை என் வேண்டுகோளாகவே வைக்கிறேன்" என்றார்.

    எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி, சுஜாதாவுக்கும் தனக்குமான உணர்வுப்பூர்வமான நட்பைப் பகிர்ந்து கொண்டார்.

    சுஜாதாவின் ரசிகனாக வசந்த் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட விதம், சுஜாதா மீதான அவரது காதலைச் சொல்வதாக இருந்தது.

    பார்த்திபன், சுஜாதாவின் சகோதரர் திருமலை, எழுத்தாளர் தேவி மைந்தன் ஆகியோரும் பேசினர்.

    எழுத்தாளர் ஞானக்கூத்தன், தான் வந்திருப்பது ஒரு மாபெரும் எழுத்தாளரை நினைவு கூர்வதற்கான கூட்டம் என்பதை மறந்து, தன்னை முன்னிலைப்படுத்துவதிலேயே குறியாக இருந்தது சிறப்பாக நடந்த இந்த கூட்டத்துக்கு சின்ன கரும்புள்ளியாக அமைந்தது. இத்தனைக்கும் தான் உயிரோடு இருந்தவரை ஞானக்கூத்தனின் கவிதைகளைக் கொண்டாடியவர் சுஜாதா!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X