»   »  டாக்டர்கள் விஜய், ஷங்கர்!

டாக்டர்கள் விஜய், ஷங்கர்!

Subscribe to Oneindia Tamil

சென்னையில் நடந்த விழாவில் நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் ஷங்கர் ஆகியோருக்கு எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் கெளரவ டாக்டர் பட்டத்தை இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் வழங்கினார்.

சென்னை மதுரவாயலில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி.சண்முகம் தலைமை தாங்கினார்.

இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார். முக்கிய நிகழ்ச்சியாக நடிகர் விஜய், இயக்குநர் ஷங்கர் மற்றும் டாக்டர் அனில்கோலி ஆகியோருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

சமூக சேவைக்காக நடிகர் விஜய்க்கும், திரைத்துறை சாதனைக்காக ஷங்கருக்கும், மருத்துவத் துறையில் சிறந்த சேவை புரிந்தமைக்காக டாக்டர் கோலிக்கும் இப்பட்டம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஷங்கர் பேசுகையில், நான் அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. படிக்க நினைத்தேன். ஆனால் பொருளாதார நிலை மற்றும் பி.இ. சீட்டுக்கு இடம் கிடைக்காததால் டிப்ளமோதான் படிக்க முடிந்தது.

எனக்கு இந்தப் பட்டம் பெறுவதற்கு தகுதி இருக்கிறதா என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். ஆனால் உனது உழைப்புக்குக் கிடைத்த மரியாதை இது, 25 ஆண்டுகள் திரைத்துறையில் இருந்து, பல வித்தியாசமான படங்களைக் கொடுத்துள்ளாய், கவலையோடு வரும் மக்களுக்கு உனது படங்கள் மூலம் சந்தோஷம் கிடைத்துள்ளது என்று என் மீது அக்கறை கொண்டவர்கள் தெரிவித்தார்கள். அவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன்.

வாழ்க்கையில் வெற்றி பெற எனது சில யோசனைகள். உங்களுக்குப் பிடித்த துறையை தேர்வு செய்யுங்கள். திறமை இருக்கிறதோ இல்லையோ, 100 சதவீத ஈடுபாட்டோடு அதில் உழையுங்கள். தடுமாற்றம் இல்லாத மனதோடு செயல்படுங்கள். எதைச் செய்தாலும் அதை தரம் மிக்கதாக கொடுங்கள்.

செய்யும் செயலை அனுபவித்து சந்தோஷத்துடன் செய்யுங்ள். நேர்மையோடு இருங்கள். நிச்சயம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.

மாணவர்களாக இருக்கும் வரைதான் லஞ்சம், ஊழல், அநியாயம், அராஜகம், அநீதியைத் தட்டிக் கேட்கிறோம். ஆனால் பின்னாளில் நாமே அந்தத் தவறை செய்யும் சூழல் ஏற்பட்டு விடுகிறது. எனவே இப்போது வெள்ளை உள்ளத்துடன் இருக்கும் நீங்கள் கடைசி வரை அதே போல இருக்க முயற்சியுங்கள் என்றார் ஷங்கர்.

விஜய் பேசுகையில், அள்ளிக் கொடுத்த வள்ளல் எம்.ஜி.ஆர். பெயரால் அமைந்துள்ள பல்கலைக்கழகம் வழங்கியுள்ள இந்தப் பட்டத்தை பெருமையுடன் பெற்றுக் கொள்கிறேன். ஏதோ, எம்.ஜி.ஆரே. கொடுத்தது போல உள்ளது.

2020ல் இந்தியா வல்லரசாக மாறும் என்கிறார்கள். ஆனால் மாணவர்களாக நீங்கள் நினைத்தால் 2010லேயே வல்லரசாக நமது நாடு மாறி விடும். அந்த சாதனையைச் செய்ய உங்களால் முடியும்.

படித்து முடித்ததும் வெளிநாடு செல்வது இன்று ஃபேஷனாகி விட்டது. படிப்பது இங்கு, அறுவடை வெளிநாட்டிலா? இங்கு படித்து பட்டம் பெறும் மாணவர்கள், இங்கேயே வேலை செய்ய வேண்டும். இந்திய என்ஜீனியர்களுக்கு இன்று வெளிநாட்டில் நல்ல மரியாதை உள்ளது.

ஆனால் நமது அறிவை மட்டும் பயன்படுத்திக் கொண்ட நம்மைத் துரத்தி விட்டு விடுகின்றன. அந்த அறிவை இங்கேயே பயன்படுத்தினால் எப்படி இருக்கும் என்றார் விஜய்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil