»   »  கிரகலட்சுமியின் முதல் திருமணம்-ஆதாரம் தாக்கல்

கிரகலட்சுமியின் முதல் திருமணம்-ஆதாரம் தாக்கல்

Subscribe to Oneindia Tamil
Prasanth with Grahalakshmi

சென்னை: நடிகர் பிரசாந்தின் மனைவி கிரகலட்சுமியின் முதல் திருமணம் தொடர்பான ஆதாரங்களை, பிரசாந்தின் வழக்கறிஞர் இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

நடிகர் பிரசாந்துக்கும், கிரகலட்சுமிக்கும் கடந்த 2005ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர் அவர்களுக்கிடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.

மனைவியை சேர்த்து வைக்கக் கோரி முதலில் பிரசாந்த் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில் இருந்தபோதே, நாராயண வேணுபிரசாத் என்பவருக்கும், கிரகலட்சுமிக்கும் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்று பரபரப்புத் தகவலை வெளியிட்டார் பிரசாந்த்.

மேலும் இதுதொடர்பான ஆதாரங்களை போலீஸிலும் ஒப்படைத்தார். இதன் அடிப்படையில் தனக்கும், கிரகலட்சுமிக்கும் இடையே நடந்த திருணம் செல்லாது என்று அறிவிக்கக் கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் புதிய மனுவைத் தாக்கல் செய்தார்.

இதற்கிடையே, வேணுபிரசாத்தும் குடும்ப நல நீதிமன்றத்தில், கிரகலட்சுமியிடமிருந்து விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார்.

இந்த இரண்டு வழக்குகளும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இன்று நடிகர் பிரசாந்த் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பிரசாந்த்-கிரகலட்சுமி இருவரும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

அப்போது பிரசாந்த் தரப்பு வழக்கறிஞர் ஆனந்தன், இந்த வழக்கு தொடரப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் வழக்கு விசாரணை நடக்கவில்லை. ஆதலால் வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதுடன், கிரகலட்சுமிக்கு வேணுபிரசாத்துடன் முதல் திருமணம் நடந்ததற்கான ஆதாரங்களையும் தாக்கல் செய்தார்.

ஆனால் வழக்கை விரைவாக முடிக்கக் கூடாது என்று கிரகலட்சுமி தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தேவதாஸ், வருகிற 23ம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil