twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினி அடுத்து 120 அடி பாய்வார்-வைரமுத்து

    By Sudha
    |

    Vairamuthu
    ரசிகர்கள் அத்தனை பேருக்கும் ரஜினி கொடுப்பது நம்பிக்கை. மகிழ்ச்சி, உற்சாகம். எந்திரனில் ரஜினி 100 அடி தாண்டுவார், அடுத்து 120 அடி பாய்வார் என்றார் கவிஞர் வைரமுத்து.

    எந்திரன் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ஹைலைட்டாக அமைந்தது கவிஞர் வைரமுத்துவின் பேச்சுதான்.

    ரஜினியின் பெருமையை அவர் கூறிய விதம், ரஜினி ரசிகர்களை உற்சாகத்தில் ஆட வைத்துவிட்டது. அவர் பேசி முடித்தபோது, சத்யம் திரையரங்கமே அதிர்ந்தது என்றால் மிகையல்ல.

    கவிஞர் வைரமுத்து பேச்சு:

    "தமிழன் உலகமெல்லாம் சிதறிக் கிடக்கிறான். எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் களையெடுப்பவர்கள், கூலி வேலை செய்பவர்கள், நெசவாளிகள் என எல்லோருமே மாலை நேரத்தில் சந்தோஷத்துக்காக தியேட்டருக்கு வந்தார்கள்.

    ஆனால், நவீனம் தமிழ் சினிமா ரசிகனை சிதறடித்துவிட்டது. இன்றைய குழந்தைகள் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருக்கிறது. இளைஞன் இணையத்துக்குள் மூழ்கி கிடக்கிறான். பெண்கள் சீரியலுக்குள் விழுந்து கிடக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் மீண்டும் தியேட்டருக்கு கொண்டு வரும் ஆற்றல் எந்திரனுக்கு இருக்கிறது.

    'அவதார்', 'டைட்டானிக்', 'கிளாடியேட்டர்' போன்ற படங்கள் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், இங்கிருந்து ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்யப்பட வேண்டிய படம் எந்திரன்.

    ரஜினி பற்றி இணையத்தில் ஒரு செய்தி படித்தேன். அமிதாப்பச்சனும் ரஜினியும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு செல்கிறார்கள்.

    அங்கு ரஜினியை பார்த்த ஓபாமா, 'வாங்க ரஜினி, டீ சாப்பிடலாம்' என்கிறார். இதை பார்த்ததும் அமிதாப்புக்கு அதிர்ச்சி. ஓபாமாவுக்கு கூட தெரிந்தவராக ரஜினி இருக்கிறாரே என்று.

    அடுத்து வாடிகன் நகருக்கு போப்பை சந்திக்க செல்கிறார்கள். ரஜினியை பார்த்த போப், 'ரஜினி மேடைக்கு வாருங்கள்' என்கிறார். இதை கேட்டதும் அமிதாப் மயங்கி விழுந்து விடுகிறார்.

    பிறகு அமிதாப்பிடம் ரஜினி கேட்கிறார். 'ஏன் மயங்கி விழுந்தீர்கள்' என்று.

    'போப்பிற்கு உன்னை தெரிந்திருக்கிறது என்பதற்காக மயங்கவில்லை. ரஜினியின் அருகில் வெள்ளை உடையுடன் ஒருவர் நிற்கிறாரே... அவர் யார் என்று ஒருவன் கேட்டான். அதனால்தான் மயங்கினேன்' என்றாராம் அமிதாப்.

    இது அதிக கற்பனையாக, மிகையாக கூட இருக்கலாம். ஆனால், தமிழன் சாதனையை அங்கே பதிவு செய்கிறான்.

    ரசிகர்கள் அத்தனை பேருக்கும் ரஜினி கொடுப்பது நம்பிக்கை. மகிழ்ச்சி, உற்சாகம். எந்திரனில் ரஜினி 100 அடி தாண்டுவார், அடுத்து 120 அடி பாய்வார்..." என்றார்.

    ரஜினி ஏஜ் அல்ல,இமேஜ்! - கே.எஸ்.ரவிகுமார்:

    கேஎஸ் ரவிக்குமார் பேசுகையில், "எல்லோரையும் போல படம் பார்க்க ஆவலாக இருக்கிறேன். 'யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே' என்பார்கள்.

    மணியோசை மலேசியாவிலேயே கேட்டுவிட்டது. ஹாலிவுட்டிலும் படம் இயக்க தகுதியான ஒரே 'இந்தியன்' ஷங்கர்தான்.

    ரஜினியுடன் நான் வேலை செய்திருக்கிறேன். அப்போது 'நான் இன்னும் ஒரு மூணு படம் பண்ணலாமா பாஸ்!' என்பார். 3 படமல்ல 300 படங்கள் கூட அவர் நடிப்பார். 80 வயதிலும் டூயட் பாடும் நடிகராக இருப்பார். அதற்கு காரணம் அவர் ஏஜ் இல்லை. இமேஜ்...", என்றார்.

    தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன் பேசும் போது, 'ஹரிதாஸ் 4 தீபாவளிகளைக் கடந்து ஓடியது. எந்திரன் படம் 5 தீபாவளிகளைக் கடந்து ஓடும்', என்றார்.

    "எந்திரன் ட்ரெய்லர் பார்த்த பிறகு எனக்கு பேச்சும் வரவில்லை, மூச்சும் வரவில்லை. இந்தியாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிதான்", என்றார் இயக்குநர் சேரன்.

    நடிகர் ஆர்யா பேசுகையில், "ரஜினி ரசிகர்களை போலவே நானும் இந்த படத்தை பார்க்க ஆவலாக உள்ளேன். டிரெய்லரை பார்த்து மிரண்டு விட்டேன். வழக்கமாக சினிமாவுக்கு 100 நாள் போஸ்டர் ஓட்டுவார்கள். ஆனால், இந்த படத்திற்கு 1000 நாள் போஸ்டர் ஓட்டுவார்கள். அந்த அளவிற்கு எந்திரன் மகத்தான வெற்றியை பெறுவான்", என்றார்.

    விழாவில், ரஜினி மனைவி லதா, சௌந்தர்யா, அஸ்வின், ஐஸ்வர்யா தனுஷ், நடிகர்கள் விஜயகுமார், சுந்தர்.சி, கரண், ஜெய், ஷாம், நகுலன், துஷ்யந்த், கிருஷ்ணா, இயக்குனர் தரணி, லிங்குசாமி, கிச்சா, தயாரிப்பாளர்கள் சத்யஜோதி தியாகராஜன், காஜா மைதின், எடிட்டர் மோகன், அம்மா கிரியேசன்ஸ் சிவா, அய்யப்பன், சிவஸ்ரீ சீனிவாசன், கே.முரளிதரன், முரளி நாராயணன், எடிட்டர் ஆண்டனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியை கருணாஸ் தொகுத்து வழங்கினார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X