»   »  'ரோபோட்'டில் ரஜினி - கூறுகிறது அய்ங்கரண்

'ரோபோட்'டில் ரஜினி - கூறுகிறது அய்ங்கரண்

Subscribe to Oneindia Tamil
Rajini

ஷங்கரின் இயக்கத்தில் ரோபோட் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக அய்ங்கரன் பிலிம்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

சிவாஜி படத்திற்குப் பிறகு ரஜினி நடிக்கப் போகும் படம் எது, யார் இயக்கப் போகிறார், யார் தயாரிக்கப் போவது என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஷங்கரின் ரோபோட் படத்தில் ரஜினி நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. ரோபோட், ரூ. 100 கோடி பட்ஜெட் படம் என்பதால் ரஜினி ரசிகர்களிடையேயும், திரையுலகினர் மத்தியிலும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த செய்தி குறித்து ஷங்கர் கூறுகையில், ரஜினியுடன் பேச்சு நடந்து வருகிறது. எல்லாம் உறுதியான பின்னர் முறைப்படி தெரிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ரோபோட் படத்தில் ரஜினி நடிக்கவிருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

கார்ப்பரேட் படத் தயாரிப்பு நிறுவனமான ஈராஸ் மற்றும் அய்ங்கரன் இன்டர்நேஷனல் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளனவாம். ரூ. 120 கோடி என படத்திற்கான பட்ஜெட்டை நிர்ணயித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் இப்படத்தை தயாரிக்கவுள்ளனர். வெளிநாடுகளில் ஆங்கில சப்டைட்டிலுடன் படம் திரையிடப்படுமாம்.

இதுகுறித்து அய்ங்கரன் இன்டர்நேஷனல் நிறுவன தலைமை செயல் அதிகாரி மாணிக்கவாசகர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், இது ஒரு கூட்டுத் தயாரிப்பு. நாங்களும், ஈராஸ் மல்டிமீடியா நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளோம்.

ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கவுள்ளார். ஷங்கர் இயக்குகிறார். விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வமான ஒப்பந்தம் கையெழுத்தாகும். பிற விவரங்களை ரஜினி சாரும், ஷங்கரும் அடுத்த வாரம் வெளியிடுவார்கள் என்றார்.

ரோபோட் - சிவாஜி - ஷங்கர் குறித்த தகவல் உண்மைதானா என்று அயங்கரன் நிறுவனத்தின் இந்தியத் தலைமையிடம் நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவரும் அதை உறுதிப்படுத்தினார். இந்திய சினிமா வரலாற்றில் இது பெரும் வரலாறு படைக்கும் என்றும் அவர் கூறினார்.

ரஜினி மற்றும் ஷங்கரின் செய்தித் தொடர்பாளரான நிகில் முருகனிடம் கேட்டபோது, இந்த செய்தியை ரஜினி சார் அல்லது ஷங்கர் ஆகியோர்தான் உறுதி செய்ய முடியும். இருப்பினும் பொங்கலுக்குள் எல்லாம் தெளிவாகி விடும் என்றார்.

ரோபோட்டில் ரஜினி நடிக்கப் போவதாக உறுதியாக கூறப்பட்டாலும் கூட ரஜினியே வாய் திறந்து ஆமாம் என்று சொன்னால்தான் அது உறுதியான செய்தியாகும் அது வரை சஸ்பென்ஸுடன் காத்திருக்க வேண்டியதுதான்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil