»   »  'ஆச்சி'க்குப் பாராட்டு விழா!

'ஆச்சி'க்குப் பாராட்டு விழா!

Posted By:
Subscribe to Oneindia Tamil
 Manorama
உலகத் தமிழர்களின் நெஞ்சங்களில் ஒய்யாரமாக அமர்ந்துள்ள ஆச்சி மனோரமாவின் 50 ஆண்டு கால கலைச்சேவையைப் பாராட்டும் வகையில், முதல்வர் கருணாநிதி தலைமையில் அவருக்கு ஜனவரி 14ம் தேதி சென்னையில் பிரமாண்ட பாராட்டு விழா நடைபெறுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கலைஞானி கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலகமே திரண்டு வந்து ஆச்சியை பாராட்டவுள்ளது.

மணிமகுடம் என்ற நாடகத்தின் மூலம் கலை உலகுக்கு அறிமுகமானவர் மனோரமா. 1957ம் ஆண்டு கவியரசு கண்ணதாசன் தயாரித்த மாலையிட்ட மங்கைதான் மனோரமா நாயகியாக, நடிகையாக நடித்த முதல் திரைப்படம்.

இவர் திரையுலகிற்கு நடிக்கவந்து 50 வருடங்கள் ஆகிவிட்டது. இதுவரை 1,500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த ஒரே நடிகை என்ற உலக சாதனையைப் படைத்துள்ளவர் மனோரமா தான். இதற்காக கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் அவரது பெயர் இடம் பெற்றுள்ளது.

ஹீரோயினாக அறிமுகமான மனோரமா பின்னர் குணச்சித்திர நடிகையாக, காமெடி அரசியாக பல அவதாரங்கள் எடுத்து உலகத் தமிழர்களை மகிழ்வித்தார். தொடர்ந்து மகிழ்வித்து வருகிறார்.

ஐந்து தென்னிந்திய முதல்வர்களுடன் நடித்த ஒரே நடிகை என்ற பெருமையும் ஆச்சிக்கு மட்டுமே உண்டு. பேரறிஞர் அண்ணாவுடன் நாடகம் ஒன்றில் ஜோடியாக நடித்துள்ளார். கலைஞர் கருணாநிதியுடனும் நாடகத்தில் ஜோடியாக நடித்துள்ளார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் 25 படங்களில் நடித்துள்ளார். அதேபோல ஜெயலலிதாவுடன் பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் மறைந்த முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவுடன் இணைந்து நடித்துள்ளார்.

ஆச்சி என்று திரையுலகினரால் செல்லமாக அழைக்கப்படும் மனோரமா, பத்மஸ்ரீ பட்டமும் பெற்றவர்.

1,500 படங்களுக்கு மேல் நடித்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளதையும், கலை உலகில் அவரின் 50 ஆண்டு கலைச்சேவையை பாராட்டியும் வரும் 14ம் தேதி நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் அவருக்கு பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

விழாவில் ரஜினிகாந்த், கமலஹாசன் உட்பட ஒட்டு மொத்த திரையுலகினரும் திரண்டு வந்து ஆச்சியை பாராட்டி கெளரவிக்கவுள்ளனர்.

இயக்குநர்கள் கே.பாலச்சந்தர், பாரதிராஜா மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராம.நாராயணன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

ரஜினிகாந்தும், கமலஹாசனும் இணைந்து மனோரமாவுக்கு நினைவுப் பரிசை வழங்க இருக்கிறார்கள்.

சாதகப் பறவைகள் இசைக் குழுவினர் இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளனர். அதன் பின்னர் நமீதா, ப்ரியா மணி, சந்தியா, சங்கீதா, நிலா, தேஜாஸ்ரீ ஆகியோர் பங்கேற்கும் நடன விருந்து பரிமாறப்படவுள்ளது.

நடிப்புலகில் 'ஆட்சி' புரிந்து வரும் ஆச்சியை நாமும் பாராட்டுவோம்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil