»   »  புத்தாண்டுக்கு 5 படங்கள்!

புத்தாண்டுக்கு 5 படங்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிவாஜி சற்றே பிந்தியுள்ளால், தமிழ்ப் புத்தாண்டுக்கு படபடவென்று ஐந்து படங்களை ரிலீஸ் செய்கிறார்கள் அதன் தயாரிப்பாளர்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிவாஜி ஏப்ரல் 12ம் தேதி ரிலீஸாகும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தங்களது படங்களை ரிலீஸ் செய்ய பல தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் தயங்கினர். ஆனால் இப்போது சிவாஜி மே மாதத்திற்குத் தள்ளிப் போயுள்ளதால் அச்சம் நீங்கிய ஐந்து படங்களின் தயாரிப்பாளர்கள் படங்களை தியேட்டருக்குக் கொண்டு வர முடிவு செய்துள்ளனர்.

இந்த படங்களில் அதிக எதிர்பார்ப்புக்கு ஆளாகியுள்ள மாயக்கண்ணாடி முக்கியமானது. சேரன் இயக்கம் பிளஸ் நடிப்பில், நவ்யா நாயரின் அசத்தல் நடிப்பில், பஞ்சு அருணாச்சலத்தின் தயாரிப்பில், இசைஞானி இளையராஜாவின் இன்னிசையில் உருவாகியுள்ள மாயக்கண்ணாடி நீண்ட காலத் தயாரிப்பில் இருந்த படம்.

ஏற்கனவே படத்தின் பாடல்கள் ஹிட் ஆகி விட்டன. கதையும் புதுமையானது என்று கூறப்படுவதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இப்படத்தில் நவ்யா நாயர் அழகுக் கலை நிபுணராக வருகிறார். இளைஞர்களுக்கேற்ற வகையில் ஜாலியான படமாக இது அமைந்துள்ளாம். அதேசமயம் அவர்களுக்குத் தேவையான மெசேஜையும் மசாஜ் செய்வது போல படு சூப்பராக கொடுத்துள்ளாராம் சேரன்.

இப்படத்தில் சரத்குமார், ஆர்யா, மாளவிகா, ரஞ்சிதா ஆகியோரும் உள்ளனர். ஆனால் அவர்கள் நடிகர், நடிகையராகவே தோன்றுகின்றனர்.

அடுத்து இயக்குநர் ஜீவாவின் உன்னாலே உன்னாலே. புதுமுகம் வினய், சதா, கஜோலின் தங்கச்சி தனிஷா என இளவட்டங்கள் இணைந்துள்ள ஜாலியான படம் உன்னாலே உன்னாலே.

முக்கோணக் காதல் கதை. இருந்தாலும் தனது பாணியில் வித்தியாசப்படுத்தி விறுவிறுப்பாக எடுத்துள்ளாராம் ஜீவா. முழுக்க முழுக்க ஆஸ்திரேலியாவிலேயே படத்தை ஷூட் செய்துள்ளனர்.

தனிஷாவும், சதாவும் போட்டி போட்டு கிளாமரிலும் கலக்கியுள்ளனராம். இருந்தாலும் சதாவை விட தனிஷாவுக்கே கிளாமர் சிறப்பாக வந்துள்ளதாம். இந்தப் படமும் ரசிகர்களிடையே அலையை கிளப்பும் எனத் தெரிகிறது.

மூன்றாவது படம் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகனும், பாடகருமான எஸ்.பி.பி.சரண் தயாரிப்பில், கங்கை அமரனின் மகன் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சென்னை 600028. கிரிக்கெட்டை கருவாகக் கொண்ட கதையுடன் கூடிய படம்.

இளம் நடிகர்கள் பலர் இதில் அசத்தியுள்ளனர். இயக்குநர் அகத்தியனின் மகள் விஜயலட்சுமியும் ஒரு ஹீரோயின். இந்திய கிரிக்கெட் அணியின் விளையாட்டுத்தனத்தால் கடுப்பாகியுள்ள ரசிகர்களுக்கு இந்த கிரிக்கெட் படம் சுவாரஸ்யத்தைக் கொடுக்குமா என்பது தெரியவில்லை.

ஆனால் இப்படம் நிச்சயம் இளைஞர்களின் வரவேற்பைப் பெறும் என்று சரணும், வெங்கட்பிரபுவும் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

அடுத்து மதுரை வீரன். ஜித்தன் ரமேஷ், மும்பை புயல் சலோனி இணையில் உருவாகியுள்ள இப்படம், தொங்கிப் போயுள்ள ரமேஷின் கேரியரை நிமிர்த்துமா அல்லது காசு கொடுத்துப் படம் பார்க்க வரும் ரசிகர்களின் பெண்டை நிமிர்த்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இப்படத்துக்காக இயக்குநர் பேரரசு எழுதியுள்ள ஙொக்க மக்கா ஙொக்க மாக்கா என்ற படு ஆபாசமான குத்துப் பாட்டு ஏற்கனவே சி பிரிவு ரசிகர்களிடையே பிரபலமாகியுள்ளது. படமும் பிரபலமாகுமா என்பதை காத்திருந்து பார்ப்போம்.

மலையாளத்திலிருந்து தமிழுக்கு வரும் அற்புதத் தீவு இன்னொரு புத்தாண்டுப் படம். குள்ள மனிதர்கள் பலர் கும்பலா நடித்துள்ள இந்தப் படம் சிறுவர்களை குறி வைத்து எடுக்கப்பட்டுள்ள படம். எனவே பள்ளிக்கூட விடுமுறை ஆரம்பித்துள்ள இந்த நேரத்தில் சிறுவர்களை ஈர்த்து வசூலை அள்ளி விடலாம் என்ற நம்பிக்கையில் இப்போது ரிலீஸ் செய்கிறார்கள். பிருத்விராஜ், மல்லிகா கபூர் இணைந்து நடித்துள்ளனர்.

இதில் எத்தனை படங்கள் சிவாஜி ரிலீஸ் ஆவதற்குள் வசூலைப் பார்க்கப் போகின்றன என்று தெரியவில்லை. இப்போதைக்கு மாயக்கண்ணாடிக்கு வாய்ப்பு அதிகம் என்றே கோலிவுட்டில் கூறப்படுகிறது. பார்க்கலாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil