»   »  கவுண்டர் வர்ராருங்கோ!

கவுண்டர் வர்ராருங்கோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மீண்டும் பலத்த சப்தத்துடன் ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைக்க வீறு கொண்டு வருகிறார் கவுண்டமணி - கூடவே செந்திலுடன்.

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நாயகர்களில் மறக்க முடியாத சிலரில் கவுண்டமணியும், செந்திலும் முக்கியமானவர்கள். இருவரும் தனித்து நடித்தப் படங்களை விட இணைந்து அசத்திய படங்கள்தான் இன்னும் ரசிகர்களால் மறக்க முடியாத சிரிப்புக் காவியங்களாக உள்ளன.

தென்னிந்தியாவின் லாரல் ஹார்டி என்று சொல்லப்படும் அளவுக்கு இருவரும் இணைந்து காமெடியில் கலக்கி வந்தனர். இவர்களின் சிறப்புக்கு ஒரு சின்ன உதாரணம் இது. கரகாட்டக்காரன் படம் வந்தபோது அந்தப் படம் கர்நாடகத்திலும் வெற்றிகரமாக ஓடியது.

தமிழர்களைப் போலவே கன்னடர்களையும் கவர்ந்தது கவுண்டர்-செந்திலின வாழைப்பழ காமெடி. கவுண்டமணியும், செந்திலும் இணைந்து நடித்த அந்த வாழைப்பழ காமெடி கன்னட மக்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இது ஒரு பானை சோறுக்கு ஒரு பதம்தான். கவுண்டமணி, செந்திலுக்கு தமிழகத்தைக் கடந்தும் பெரும் ரசிகர் கூட்டம் இருக்கிறது. சமீபத்தில் தினகரன் நாளிதழ் நடத்திய கருத்துக் கணிப்பில் சிறந்த நகைச்சுவை நடிகராக வடிவேலுவை கூறியிருந்தார்கள். 2வது இடம் விவேக்குக்கும், 3வது இடம் லொள்ளு சபா சந்தானம் மற்றும் கஞ்சா கருப்புக்குக் கொடுத்திருந்தனர்.

ஆனால் நகைச்சுவையில் புதிய சரித்திரம் படைத்த கவுண்டமணிக்கும், அவருக்கு உற்ற துணையாக வந்து சாதனை படைத்தவரான செந்திலுக்கும் அதில் இடம் இல்லை.

2005ம் ஆண்டு வரை இருவரும் இணைந்து நடித்தனர். அதன் பின்னர் பிரிந்து விட்டனர். கடந்த 2 ஆண்டுகளாக கவுண்டமணி புதிய படம் எதிலும் நடிக்காமல் உள்ளார். கடைசியாக சத்யராஜுடன் இணைந்து சுயேச்சை எம்.எல்.ஏ என்ற படத்தில் நடித்தார். ஆனால் செந்தில் தொடர்ந்து நடித்துக் கொண்டுதான் உள்ளார்.

இவர்கள் இருவரும் இணைந்து திரையில் இப்போது தோன்றாவிட்டாலும் கூட எந்த தொலைக்காட்சியைத் திருப்பினாலும் இவர்களின் காமெடிக் காட்சிகள்தான் கலக்கிக் கொண்டுள்ளன.

காமெடி நிகழ்ச்சிகளில் கவுண்டமணி, செந்தில் இல்லாமல் அவை முடிக்கப்படுவதில்லை. அந்த அளவுக்கு இவர்களின் காமெடிக்கு இன்றளவும் நல்ல வரவேற்பு இருக்கிறது.

இந்த நிலையில் மீண்டும் இணைந்து நடிக்க கவுண்டமணியும், செந்திலும் முடிவு செய்துள்ளனராம். சில நாட்களுக்கு முன்பு 3 படங்களில் நடிக்க ஒரே நாளில் கையெழுத்துப் போட்டாராம் கவுண்டமணி. 3 படத்திலும், செந்திலும் நடிக்கிறார்.

இதுகுறித்து கவுண்டமணி கூறுகையில், நான் இப்போதும் சினிமாவில்தான் இருக்கிறேன். பீல்டவுட் ஆகி விட்டதாக நான் நினைத்ததே இல்லை. நிறைய வாய்ப்புகள் என்னிடம் வந்து கொண்டுதான் இருந்தன. ஆனால் அவற்றை நான் ஏற்கவில்லை. காரணம் ஒரே மாதிரி காமெடி செய்து கொண்டிருக்க நான் விரும்பவில்லை.

ஆனால் மறுபடியும் தீவிரமாக நடிக்க இப்போது முடிவு செய்துள்ளேன். செந்திலும் இனிமேல் என்னுடன் இணைந்து நடிப்பார். மீண்டும் ரெண்டு பேரும் சேர்ந்து மிரட்டப் போகிறோம் என்றார் தனக்கே உரிய கலக்கல் சிரிப்புடன்.

சவுண்டா வாங்க கவுண்டரண்ணா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil