»   »  ஹய்யோ..முட்டிக்கிச்சி முட்டிக்கிச்சி சண்டை!

ஹய்யோ..முட்டிக்கிச்சி முட்டிக்கிச்சி சண்டை!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Gowtham with Surya
ஏ.ஆர்.ரஹ்குமான் ஸ்டைலில் தலைப்பைப் படித்துவிட்டு (பாடிட்டு) மேட்டருக்கு வாங்க...

தமிழ் சினிமாவில் இயக்குநர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் அப்படி ஒரு ஏழாம் பொருத்தம். ஒரு படம் ஆரம்பித்து அதன் முதல் ஷெட்யூல் முடிவதற்குள்ளேயே தயாரிப்பாளரும் இயக்குநரும் சிண்டைப் பிடித்துக்கொண்டு சண்டையில் இறங்கி விடுவார்கள். அந்தளவு தெளிவானவர்கள்.

இதில் விதிவிலக்காக சில இயக்குநர்கள் ஒரே தயாரிப்பாளருக்கு மூன்று நான்கு படங்கள் கூட செய்து தருவதுண்டு, எந்த சச்சரவும் இல்லாமல்.

அப்படியொரு புரிந்து கொள்ளலுடன் இதுவரை இயங்கிக் கொண்டிருந்த ஆஸ்கார் ரவி-கெளதம் மேனன் கூட்டணியும் இப்போது டமார்.

ஆஸ்கார் ரவிக்கு பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தை இயக்கிக் கொடுத்தார் கெளதம் மேனன். அவரது செயல்பாடுகள் பிடித்துப் போனதால் தொடர்ந்து தனது மூன்று படங்களை இயக்கும் பொறுப்பை ஒப்படைத்தார் ரவி. அதில் ஒன்றுதான் சூர்யா நடிக்கும் வாரணம் ஆயிரம்.

அடுத்த படம் த்ரிஷா நடிக்கும் சென்னையில் ஒரு மழைக்காலம். மூன்றாவது படத்தை விஜய்யை வைத்து இயக்குவதாகத் திட்டம். எல்லாமே முதல் பிரதி அடிப்படையில் இயக்குவதாக ஒப்பந்தம்.

இந்நிலையில் வாரணம் ஆயிரம் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் துவங்கி தொடர்ந்து நடந்தது. இந்தப் படத்துக்காக ஆப்கானிஸ்தானுக்கெல்லாம் போனார்கள்.

கிட்டத்தட்ட படத்தின் முக்கால்வாசி வேலைகள் முடிந்த நிலையில் செலவைக் கணக்குப் போட்டுப் பார்த்த ஆஸ்கார் ரவிக்கு பயங்கர ஷாக். காரணம், திட்டமிட்டதைவிட ரூ. 3.5 கோடி கூடுதலாக செலவு வைத்திருந்தார் கெளதம்.

உடனே தயாரிப்பாளர் சங்கத்தில், போட்ட பட்ஜெட்டை தாண்டி படமெடுத்து நஷ்டம் ஏற்படுத்தியதாக கெளதம் மீது புகார் செய்துவிட்டார் ஆஸ்கார் ரவி.

கெளதம் மேனனோ, மேற்கொண்டு 3.5 கோடி கொடுத்தால்தான் படத்தை முடித்துக் கொடுக்க முடியும் என்று கறாராகக் கூறிவிட்டாராம்.

சங்கத்தின் பஞ்சாயத்துக்குப் பிறகு வேறு வழியின்றி அந்தப் பணத்தைத் தருவதாக ஒப்புக் கொண்டிருக்கிறார் ரவி. இந்த தொகைக்குள்ளாவது எடுத்து முடிப்பாரா அல்லது இன்னும் சில கோடிகளை விழுங்க வைப்பாரா என்ற பீதியிலிருக்கிறார் ரவி.

மேலும் சென்னையில் ஒரு மழைக்காலம் படம் முடிந்த பிறகு, விஜய் படத்தை இயக்கும் பொறுப்பிலிருந்து கெளதமை கழட்டிவிடவும் முடிவு செய்துள்ளாராம்.

நல்ல தயாரிப்பாளர்களை தொடர்ந்து படமெடுக்க விடுங்கப்பா...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil