»   »  சிக்கினார் கிரகலட்சுமியின் முதல் கணவர்:போலீஸ் விசாரணைக்கு வருகிறார்

சிக்கினார் கிரகலட்சுமியின் முதல் கணவர்:போலீஸ் விசாரணைக்கு வருகிறார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:நடிகர் பிரஷாந்த்தின் மனைவி கிரகலட்சுமியின் முதல் கணவராக கூறப்படும் நாராயணன் வேணுகோபால் பிரசாத் இருப்பிடத்தை போலீஸார் கண்டுபிடித்து விட்டனர். அவரை விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளனர். அவரும் வருவதாக ஒப்புக் கொண்டுள்ளாராம்.

பக்கா தமிழ் திரில்லர் படம் போல உள்ளது பிரஷாந்த் - கிரகலட்சுமி விவகாரம். ஆரம்பத்தில் மனைவி தன்னை விட்டுப் பிரிந்து போய் விட்டதாகவும், அவரை தன்னுடன் சேர்த்து வைக்குமாறும் கோரி குடும்ப நல நீதிமன்றத்தை அணுகினார் பிரஷாந்த்.

அடுத்து பிரஷாந்த் மீது அடுக்கடுக்கான பல புகார்களைக் கூறினார் கிரகலட்சுமி. இருவருக்கும் குடும்ப நல நீதிமன்றம் சமரசம் செய்து வைக்க முயன்று தோல்வியுற்றது.

இதைத் தொடர்ந்து பிரஷாந்த் குடும்பத்தினர் மீது கிரகலட்சுமி வரதட்சணைப் புகார் கொடுத்தார். இதனால் பிரஷாந்த் குடும்பத்தோடு தலைமறைவாகி பின்னர் நிபந்தனை ஜாமீன் பெற்றார்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு மாபெரும் குண்டைப் போட்டார் பிரஷாந்த். தனது மனைவிக்கு ஏற்னவே வேறு ஒருவருடன் கல்யாணமாகி விட்டதாகவும், அதை ஏமாற்றி தனக்குக் கட்டி வைத்து விட்டதாகவும் பரபரப்புத் தகவலை வெளியிட்டார் பிரஷாந்த்.

இந்த குண்டு பயங்கரமாக வெடித்து கிரகலட்சுமி தரப்பில் கலக்கத்தை ஏற்படுத்தியது. கிரகலட்சுமியின் முதல் கல்யாணம் குறித்து பிரஷாந்த் கொடுத்த ஆவணங்களின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் பிரஷாந்த் கூறிய புகார்கள் உண்மைதான் என்று தெரிய வந்தது.

இதையடுத்து கிரகலட்சுமியின் முதல் கணவராக கூறப்படும் வேணுகோபால் பிரசாத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறை இறங்கியது. இதில் வேணுகோபால் சிக்கியுள்ளார். அவரின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து விட்ட போலீஸார் அவரையும் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.

கிரகலட்சுமி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும், அதற்காக மாம்பலம் காவல் நிலையத்திற்கு வர வேண்டும் என பிரசாத்திற்கு போலீஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். அவரும் வருவதாக ஒப்புக் கொண்டுள்ளார்.

விரைவில் பிரசாத், வெளிச்சத்திற்கு வந்து என்னதான் நடந்தது என்பதைத் தெரிவிக்கவுள்ளார். இதனால் பிரஷாந்த் - கிரகலட்சுமி விவகாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முன் ஜாமீன் கேட்கிறார் கிரஹலட்சுமி

இந் நிலையில் கிரஹலட்சுமி முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

நாராயணன் வேணுகோபால் பிரசாத்துடன் அவருக்கு திருமணம் நடந்ததற்கான ஆதாரங்களை தாக்கல் செய்துள்ளார் பிரசாந்த். திருவல்லிக்கேணி சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து திருமண ஆவணத்தில் சாட்சிக் கையெழுத்துப் போட்டிருந்த சங்கர், சந்திரசேகரன், ராஜேஷ் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது திருமணம் நடந்தது உண்மை தான் என மூவரும் கூறினர். இந்த மூவரும் வழக்கறிஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து சார் பதிவாளர் அலுவலகத்தில் போலீசார் விசாரணை நடத்தியபோது 1998ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி கிரகலட்சுமி-நாராயணன் வேணு பிரசாத் இருவருக்கும் திருமணம் நடந்ததற்கான மேலும் ஆதரங்கள் சிக்கின.

இந் நிலையில் முதல் திருமணத்தை மறைத்து பிரசாந்தை திருமணம் செய்ததாக தரப்பட்டுள்ள புகாரின் கீழ் கிரஹலட்சுமி கைதாகும் சூழல் எழுந்துள்ளது. இதையடுத்து முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் கிரஹலட்சுமி மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், எனக்கு ஏற்கனவே திருமணமானதாக போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அதை பொய் என என்னால் நிரூபிக்க முடியும். ஆனாலும் இந்த புகாரின் பேரில் என்னை போலீசார் கைது செய்யலாம் என அஞ்சுகிறேன். இதனால் எனக்கு முன் ஜாமீன் தர வேண்டும் என கிரஹலட்சும் தனது மனுவில் கூறியுள்ளார்.

இதற்கிடையே, கிரகலட்சுமிக்கு முன்ஜாமீன் தரக் கூடாது என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரஷாந்த் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், குடும்ப நல நீதிமன்றத்தில் எங்களு வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் நானும், எனது குடும்பத்தினரும், தன்னை கொடுமைப்படுத்தியதாக கூறி கிரகலட்சுமி போலீஸில் புகார் கொடுத்தார்.

இது எனது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. இந்த நிலையில், கிரகலட்சுமிக்கு ஏற்கனவே திருமண் ஆனவர் என்பது தெரிய வந்தது. இதை எனக்குத் ெதரிவிக்காமல் மறுத்து விட்டனர்.

எனவே கிரகலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்துறையில் புகார் கொடுத்துள்ளேன். இதனை போலீஸார் விசாரித்து வருகிறார்கள். இந்த நிலையில் கிரகலட்சுமிக்கு முன்ஜாமீன் கொடுத்தால் அவர் சாட்சிகளைக் கலைத்து விடுவார். எனவே அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று கூறியுள்ளார் பிரஷாந்த்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil