»   »  வேணுகோபால் பிரசாத் எங்கே?

வேணுகோபால் பிரசாத் எங்கே?

Posted By:
Subscribe to Oneindia Tamil

எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி விட்டது என்று அவதூறாகக் கூறி வருகிறார் பிரஷாந்த். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது மனைவி கிரகலட்சுமி காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். இதற்கிடையே பிரஷாந்த் கூறியுள்ள கிரகலட்சுமியின் முதல் கணவராக கூறப்படும் வேணுகோபால் பிரசாத் எங்கிருக்கிறார் என்று போலீஸார் தேடி வருகின்றனர்.

பிரஷாந்த்தும், கிரகலட்சுமியும் பிரிந்து வாழ்கிறார்கள். மனைவியை தன்னுடன் சேர்ந்து வந்து வாழ வேண்டும் என உத்தரவிடக் கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் பிரஷாந்த். இதற்கு கிரகலட்சுமி விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் பிரஷாந்த் மற்றும் குடும்பத்தினர் மீது வரதட்சணைப் புகார் அளித்தார் கிரகலட்சுமி. இதையடுத்து பிரஷாந்த் உள்ளிட்டோர் மீது போலீஸார் புகார் பதிவு செய்தனர். இந்த வழக்கில் பிரஷாந்த் உள்ளிட்டோர் முன்ஜாமீன் பெற்றுள்ளனர்.

பிரஷாந்த் குடும்ப நல நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பிரஷாந்த் புதிய குண்டைத் தூக்கிப் போட்டார்.

கிரகலட்சுமிக்கும், நாராயணன் வேணுகோபால் பிரசாத் என்பவருக்கும் இடையே 1998ம் ஆண்டு கல்யாணம் நடந்தது. அதை மறைத்து விட்டு தனக்கு கிரகலட்சுமியைக் கட்டி வைத்து விட்டார்கள் என்றார் பிரஷாந்த். மேலும் இதுதொடர்பாக காவல்துறையில் புகார் கொடுக்கப் போவதாகவும் பிரஷாந்த் தெரிவித்தார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பிரஷாந்த்தின் புகாரால் கிரகலட்சுமி தரப்பு அதிர்ந்தது. நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த கிரகலட்சுமியின் வழக்கறிஞர் சுதா ராமலிங்கம், பிரஷாந்த் அவதூறாகப் பேசுகிறார். அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதையடுத்து கிரகலட்சுமியும், சுதா ராமலிங்கமும் நேற்று துணை ஆணையர் பாஸ்கரன் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு பிரஷாந்த் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிரகலட்சுமி புகார் கொடுத்தார்.

புகார் கொடுத்து விட்டு வெளியே வந்த கிரகலட்சுமி, கண்ணீர் மல்க அங்கிருந்து சென்றார். அவரது முகம் இருண்டு கிடந்தது.

கிரகலட்சுமி கொடுத்த புகார் குறித்து பாஸ்கரனிடம் கேட்டபோது, 2 நாட்களுக்கு முன்பு பிரஷாந்த்தும், அவரது தந்தை தியாகராஜனும் என்னிடம் வந்தனர். கிரகலட்சுமி குறித்து வாய் மொழியாக புகார் கூறி நடவடிக்கை எடுக்குமாறு கோரினர். எழுத்துப்பூர்வமாக புகார் கொடுங்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றேன்.

ஆனால் அதன் பின்னர் இருவரும் வரவில்லை, எழுத்துப் பூர்வமாகவும் புகார் தரவில்லை.

இந்த நிலையில் இன்று கிரகலட்சுமி தனது வக்கீலுடன் வந்தார். பிரஷாந்த் தன் மீது அபாண்டமாக புகார் கூறுவதாக அவர் தெரிவித்தார். அவரும் எழுத்துப் பூர்வமாக புகார் தரவில்லை.

இரு தரப்பினரும் வாய் மொழியாகத்தான் புகார் கூறியுள்ளனர். எழுத்துப் பூர்வமாக புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதற்கிடையே, கிரகலட்சுமியின் திருமண பதிவுச் சான்றிதழ் குறித்து பிரஷாந்த் கூறியுள்ள புகார் குறித்து போலீஸார் ரகசிய விசாரணையை முடுக்கி விட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அந்தப் பதிவுத் திருமணச் சான்றிதழில், கிரகலட்சுமிக்குச் சாட்சியாக சந்திரசேகர், ராஜேஷ், சங்கர் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். அவர்களன் முகவரிக்குச் சென்ற போலீஸார் அவர்களிடம் வாக்குமூலம் பெற்றனர்.

அதேசமயம், நாராயணன் வேணு பிரசாத் முகவரிக்கு போலீஸார் சென்றபோது அந்த முகவரியில் அந்தப் பெயரில் யாரும் வசிக்கவில்லை என்று தெரிகிறது. எனவே உண்மையிலேயே வேணு பிரசாத் என்பவர் இருக்கிறாரா, அவருக்கும் கிரகலட்சுமிக்கும் என்ன சம்பந்தம் என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil