»   »  பிரசாத்துடன் கல்யாணமேஆகவில்லை-கிரகலட்சுமி

பிரசாத்துடன் கல்யாணமேஆகவில்லை-கிரகலட்சுமி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரஷாந்த் தாக்கல் செய்துள்ள பதிவுத் திருமணச் சான்றிதழில் இருப்பது எனது கையெழுத்தல்ல, நான் கையெழுத்திடவில்லை, அவரைத் திருணமும் செய்து கொள்ளவில்லை என்று பிரஷாந்த்தின் மனைவி கிரகலட்சுமி கூறியுள்ளார்.

கிரகலட்சுமிக்கு ஏற்கனவே கல்யாணமாகி விட்டது. அவரது முதல் கணவர் பெயர் நாராயணன் வேணு பிரசாத் என்று சில வாரங்களுக்கு முன்பு கூறிய பிரஷாந்த், அதுதொடர்பான பதிவுத் திருமணச் சான்றிதழையும் வெளியிட்டார். இதுதொடர்பாக போலீஸிலும் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதையடுத்து பிரசாத்தைக் கண்டுபிடித்து அவரை அழைத்து விசாரித்தனர். அப்போது தனக்கும், கிரகலட்சுமிக்கும் நடந்த திருமணத்தை அவர் ஒப்புக் கொண்டார். இதனால் பிரஷாந்த்-கிரகலட்சுமி விவகாரம் சூடு பிடித்தது.

இதைத் தொடர்ந்து கிரகலட்சுமி முன்ஜாமீன் பெற்றார். நீதிமன்ற உத்தரவுப்படி எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகி முன்ஜாமீனைப் பெற்றார். அதன் பின்னர் தினசரி தி.நகர் காவல் நிலையத்தில் ஆஜராகி வருகிறார். இன்று அவர் ஆரானபோது, அவரிடம் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றார்.

அவரிடம் கிரகலட்சுமி கொடுத்த வாக்குமூலத்தில், வேணு பிரசாத்திற்கும் எனக்கும் திருமணம் நடக்கவில்லை. வேணு பிரசாத்தின் தங்கை என்னுடைய தோழி. அவர் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பேராசிரியையாக உள்ளார்.

நான் எம்.ஏ படிப்பதற்கு அவரிடம் என்னுடைய பட்ட படிப்பு சான்றிதழ்களை கொடுத்திருந்தேன். அந்த சான்றிதழ்களை வேணு பிரசாத் பதிவு அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். எனக்கு பதிலாக வேறு பெண்ணை அவருடன் அழைத்து சென்று பதிவு திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.

பதிவுத் திருமணம் செய்த பின்னர் சான்றிதழில் என்னை கையெழுத்து போலவே போலியான கையெழுத்து போட்டு மோசடி செய்துள்ளனர்.

திருமண சான்றிதழில் உள்ளது என்னுடைய கையெழுத்து அல்ல. என் மீது அவதூறு பரப்புவதற்காக வேணு பிரசாத் என்னை திருமணம் செய்துக் கொண்டதாக நாடகம் ஆடுகிறார்.

எனக்கு பிரசாந்த்துடன் தான் முதல் திருமணம் நடந்தது. நான் அவரை ஏமாற்றவில்லை என்று கூறினார்.

கிரகலட்சுமியின் இந்த வாக்கு மூலம் வீடியோ மூலமும், எழுத்து மூலமும் பதிவு செய்யப்பட்டது.

கிரகலட்சுமியின் புதிய வாக்குமூலம் இந்த பிரச்சினையில் மேலும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil