»   »  கிரகலட்சுமி மீது 6 பிரிவுகளில் வழக்கு-கைதாவாரா?

கிரகலட்சுமி மீது 6 பிரிவுகளில் வழக்கு-கைதாவாரா?

Subscribe to Oneindia Tamil

நடிகர் பிரசாந்த்தின் மனைவி கிரகலட்சுமி மீது, போலீஸார் 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பிரசாந்த்தை விட்டு பிரிந்த கிரகலட்சுமி தனியாக வசித்து வருகிறார். இந் நிலையில் கிரகலட்சுமியை தன்னுடன் சேர்த்து வைக்கும்படி பிரசாந்த் குடும்ப நலநீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். நீதிமன்றம் மூலம் இருவருக்கும் சமரசம் ஏற்படவில்லை.

இதற்கிடையே கிரகலட்சுமிக்கும் வேணுபிரசாத் என்பவருக்கும் ஏற்கனவே திருமணம் நடந்துவிட்டது, அதை மறைத்து என்னை திருமணம் செய்துக் கொண்டார் என புகார் தெரிவித்தார் பிரசாந்த்.

அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டார்.

மேலும் சைதாப்பேட்டையிலுள்ள நீதிமன்றத்தில், கிரகலட்சுமி முதல் திருமணத்தை மறைத்து என்னை ஏமாற்றி திருமணம் செய்துக் கொண்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மாஜிஸ்திரேட் அருணாசலம் முன் விசாரணைக்கு வந்தபோது, கிரகலட்சுமி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி மாம்பலம் போலீஸாருக்கு உத்தரவிட்டார்.

கிரகலட்சுமி தந்தை தனசேகரன், தாய் சிவகாமசுந்தரி, உறவினர்கள் நாகராஜன், பொன்குமார், அவரது மனைவி அபிராமி, டாக்டர் ரங்கபாஷ்யம், சித்ரா ரங்கபாஷ்யம் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யுமாறும் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின் பேரில் மாம்பலம் மகளிர் காவல்நிலைய போலீசார் கிரகலட்சுமி மீது, இபிகோ 417(மோசடி செய்தல்), 418, 494(2வது திருமணம்), 496(திருமணம் நடந்ததை மறைத்தல், 120 பி(சதி செய்தல்), 506(2) கொலை மிரட்டல் ஆகிய 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கிரகலட்சுமியின் முதல் கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர் திருமணம் நடந்ததை ஒப்புக் கொண்டுவிட்டார்.

இதனால் பிரசாந்த்தை ஏமாற்றி திருமணம் செய்த குற்றத்திற்காக கிரஹலட்சுமி எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து கிரஹலட்சுமியும் அவரது பெற்றோரும் முன் ஜாமீன் பெற முயற்சி செய்து வருகின்றனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil