»   »  வேணு பிரசாத்திடம் ரூ. 5 கோடிநஷ்டஈடு கோரும் கிரகலட்சுமி

வேணு பிரசாத்திடம் ரூ. 5 கோடிநஷ்டஈடு கோரும் கிரகலட்சுமி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:தன்னைத் திருமணம் செய்து கொண்டதாக தவறான தகவலைக் கொடுத்து எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக நாராயணன் வேணு பிரசாத் எனக்கு ரூ. 5 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரி குடும்ப நல நீதிமன்றத்தில், பிரஷாந்த்தின் மனைவி கிரகலட்சுமி மனு தாக்கல் செய்துள்ளார்.

தன்னைக் கல்யாணம் செய்து கொள்வதற்கு முன்பாகவே நாராயணன் வேணு பிரசாத்தை கிரகலட்சுமி திருமணம் செய்து கொண்டு விட்டதாக நடிகர் பிரஷாந்த் புகார் கூறியுள்ளார். இதுதொடர்பான ஆவணங்களையும் அவர் தாக்கல் செய்துள்ளார்.

இந்தத் திருமணத்தை வேணு பிரசாத்தும் ஒத்துக் கொண்டுள்ளார். மேலும் கிரகலட்சுமியிடமிருந்து விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

பிரசாத்தின் இந்த விவாகரத்து வழக்கு நேற்று நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கிரகலட்சுமி சார்பில் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், இந்து முறைப்படி கடந்த 01-09-2005 அன்று எனக்கு நடிகர் பிரஷாந்துடன் மட்டும் தான் கல்யாணம் நடந்தது. வேணு பிரசாத்துடன் திருமணம் நடக்கவில்லை. எனக்கும் வேணுபிரசாத்துக்கும் திருமணம் நடந்ததாக சொல்லி தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் பொய்யானது.

இந்த திருமணம் நடந்ததாக சொல்லும் காலகட்டத்தில் எனக்கு வயது 17தான். ஆழ்வார்பேட்டையில் உள்ள வி.எம்.கல்யாண மண்டபத்தில் எனக்கு திருமணம் நடந்ததாக நடிகர் பிரஷாந்த் கூறியுள்ளார். ஆனால் அங்கு திருமணம் நடக்கவில்லை.

கடந்த 30-11-1998 அன்று பதிவு திருமணம் மட்டும் செய்தோம் என்று நாராயண வேணுபிரசாத் கூறியுள்ளார். பிராஷாந்த் சொன்ன தகவலுக்கும், வேணு பிரசாத் சொன்ன தகவலுக்கும் முரண்பாடு உள்ளது.

வி.எம்.கல்யாண மண்டபத்தில் கல்யாணம் நடந்ததாக பிராஷாந்த் சொன்ன தேதியில் எந்த திருமணமும் அங்கு நடக்கவேயில்லை.

எனக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும் வகையில் அவதூறாகப் பேசிய, நடக்காத கல்யாணத்திற்கு விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்த நாராயண வேணுபிரசாத் ரூ.5 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும்.

அவர் தொடர்ந்த இந்த விவகாரத்து வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்று கிரகலட்சுமி தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையை வரும் அக்டோபர் 1ம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளி வைத்தது.

பிரஷாந்த் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு:

இதற்கிடையே, கிரகலட்சுமி கொடுத்த வரதட்சணைப் புகாரின் பேரில் நடிகர் பிரஷாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்து ஒரு மாதத்தில் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரஷாந்த், கிரகலட்சுமி விவகாரம் குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தபோது திடீரென பிரஷாந்த், அவரது தந்தை, தாயார், சகோதரி ஆகியோர் மீது மாம்பலம் காவல் நிலையத்தில் வரதட்சணைக் கொடுமை செய்ததாக புகார் கொடுத்தார் கிரகலட்சுமி.

இதையடுத்து பிரஷாந்த் உள்ளிட்டோர் கோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றனர். இந்த நிலையில், கிரகலட்சுமி சார்பில் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், எனது குடும்பச் சொத்தில் எனக்குரிய பங்கைத் தராதததால், எனது மாமனார், மாமியார், நாத்தனார் ப்ரீத்தி ஆகியோர் கொடுமைப்படுத்தினர். வரதட்சணை வாங்கி வராவிட்டால், வீட்டை விட்டு வெளியேற்றி விடுவோம் என மிரட்டினர்.

இதுகுறித்து எனது கணவரிடம் கூறியும் அவர் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில், கடந்த 2005ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி என்னைத் துன்புறுத்தியதால், கர்ப்பிணியாக இருந்த நான் எனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டேன்.

பின்னர் வரதட்சணை கொடுமை தொடர்பாக இந்த 7.5.2007 அன்று வரதட்சணைத் தடுப்புப் பிரிவு போலீஸில் புகார் கொடுத்தேன். ஆனால் இதுவரை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.

நான் கொடுத்த புகாரகைப் பதிவு செய்யாமல் பாரபட்சம் காட்டி வருகிறார்கள். எனவே நான் கொடுத்த புகாரைப் பதிவு செய்து பிரஷாந்த் உள்ளிட்டோரை விசாரித்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பழனிவேலு, 1 மாதத்திற்குள் இந்தப் புகாரை பதிவு செய்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil