»   »  கர்ப்பிணி அல்ல-காவேரி மறுப்பு

கர்ப்பிணி அல்ல-காவேரி மறுப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil
Cauvery
நடிகை காவேரியை காதலித்து, கல்யாணமும் செய்து கொண்டு இன்னொரு பெண்ணைக் கல்யாணம் செய்ய முயற்சித்துத் தலைமறைவாகி விட்டதாக கூறப்படும் ஒளிப்பதிவாளர் வைத்தி என்கிற வைத்தியலிங்கத்தைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர்.

ஒளிப்பதிவாளர் வைத்தி தன்னைக் காதலித்து, கல்யாணம் செய்து கொண்டு குடித்தனம் நடத்தி வந்ததாகவும், இப்போது திடீரென தனது உறவுக்காரப் பெண்ணைக் கல்யாணம் செய்ய முயற்சிப்பதாகவும் நடிகை காவேரி போலீஸில் பரபரப்பு புகார் கொடுத்தார்.

இதையடுத்து போலீஸ் படை ஒன்று புதுக்கோட்டை மாவட்டம் கீரனூருக்கு விரைந்தது. அவர்களுடன் காவேரியின் அண்ணன் மார்க்கும் உடன் சென்றார். போலீஸார் தலையீட்டால் நேற்று வைத்திக்கும், அவரது உறவுப் பெண் சுப்புலட்சுமிக்கும் இடையே நடப்பதாக இருந்த திருமணம் நடக்கவில்லை.

இந் நிலையில் காேவரியின் புகாரை மறுத்து சுப்புலட்சுமியின் குடும்பத்தினர் மத்திய மண்டல ஐஜியிடம் புகார் கொடுத்தனர். அதில் சுப்புலட்சுமி, வைத்தி கல்யாணத்திற்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரியிருந்தனர்.

ஆனால் சென்னையிலிருந்து சென்ற போலீஸார் வைத்தியை எப்படியும் கைது செய்வது, கல்யாணத்தைத் தடுத்து நிறுத்துவது என்பதில் தீவிரமாக இருந்ததால் நேற்று திட்டமிட்டபடி கல்யாணம் ஆகவில்லை. கல்யாணம் ரத்து செய்யப்பட்டதாக சுப்புலட்சுமியின் குடும்பத்தினர் அறிவித்ததால் கல்யாணத்திற்கு வந்திருந்த அனைவரும் கலைந்து சென்றனர்.

இந் நிலையில் தலைமறைவாகி விட்ட வைத்தியைப் பிடிக்க போலீஸார் தனிப்படைகளை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். வைத்தியைப் பிடித்து விசாரித்தால்தான் உண்மை என்ன என்று தெரிய வரும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

கர்ப்பிணி அல்ல

இதற்கிடையே, தான் கர்ப்பமாக இருப்பதாக வெளியான செய்தியை காவேரி மறுத்துள்ளார். தனது கணவரை தன்னுடன் ஒப்படைக்க வேண்டும் என்று மட்டுமே தான் போலீஸில் புகார் கொடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நானும், வைத்தியும் திருமணம் செய்து கொண்டதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன. அவற்றை நான் காவல்துறையில் கொடுத்துள்ளேன். தேவைப்பட்டால் அனைத்தையும் பகிரங்கமாக வெளியிடுவேன்.

1998ம் ஆண்டுதான் நான் முதன் முதலில் வைத்தியை சந்தித்தேன். பிறகு நெருங்கிப் பழக ஆரம்பித்தோம். 2003ம் ஆண்டு முதல் மிகவும் நெருக்கமாக பழகினோம். திருமணம் செய்து கொள்வதாக கூறித்தான் என்னுடன் பழகினார்.

இதுதொடர்பாக ஒன்றரை வருடங்களாக இரு வீட்டிலும் திருமணப் பேச்சுக்கள் நடந்தன. ஆனால் வைத்தியின் அம்மா திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லை. இதனால் அம்மாவின் சம்மதத்தைப் பெற்ற பின்னர் ஊரறிய கல்யாணம் செய்து கொள்வதாக கூறினார் வைத்தி. தனது தாயார் தடுப்பதால்தான் இப்போது சேர்ந்த வாழ மறுக்கிறார்.

எனக்கும், அவருக்கும் கல்யாணம் நடந்த பிறகு டிவியில் நடிக்க வேண்டாம் என்று கூறியதால் ஐந்து தொடர்களில் நடிக்க வந்த வாய்ப்பை விட்டு விட்டேன்.

நான் 3 மாத கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நான் எனது புகாரில் அப்படிக் கூறவே இல்லை. எனது கணவரின் 2வது கல்யாணத்தைத் தடுத்து அவரை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று மட்டும்தான் முதல் தகவல் அறிக்கையில் நான் கூறியுள்ளேன். நான் கர்ப்பமாக இல்லை. அப்படிக் கூறப்படுவது தவறான தகவல்.

நானும், வைத்தியும் கல்யாணம் செய்து கொண்டது உண்மை. நானும், வைத்தியும் நேரில் பேசினால் எல்லாப் பிரச்சினையும் சரியாகி விடும். வைத்தி என்னுடன் பேச வேண்டும். அவருக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அவர் நேரில் என்னிடம் கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்று கூறட்டும் பார்க்கலாம்.

நான் எந்தக் காரணத்தைக் கொண்டும் எனது கணவரை விட்டுக் கொடுக்க மாட்டேன். எனது வாழ்க்கையை தியாகம் செய்ய முடியாது. அவர் நல்லவர்தான். அவரைச் சுற்றிலும் உள்ளவர்கள், என்னுடன் வாழக் கூடாது என்று அவரை நிர்ப்பந்தப்படுத்தி வருகிறார்கள். அவர் என்ன செய்வார் பாவம் என்றார் காவேரி.

காவேரி சமீப காலமாக டிவி தொடர்களில் நடிக்காமல் இருக்கிறார். கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் தேன்மொழியாள் தொடரில் மட்டும் ஒப்புக் கொண்ட சில காட்சிகளில் நடித்துக் கொடுத்து வருகிறாராம்.

Read more about: kaveri

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil