»   »  இளையராஜா என்ற சொர்க்கத்தை இசையுலகுக்குக் காட்டிய பஞ்சு அருணாச்சலம்!

இளையராஜா என்ற சொர்க்கத்தை இசையுலகுக்குக் காட்டிய பஞ்சு அருணாச்சலம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இளையராஜா என்ற இசைமேதையை இந்த உலகுக்கு அறிமுகம் செய்த பெருமைக்குரியவர் பஞ்சு அருணாச்சலம்.

ஜிகே வெங்கடேஷின் உதவியாளராக இருந்த காலத்தில் கோவர்தன் மாஸ்டருடன் இணைந்து திரைப்படங்களில் இசையமைப்பாளராக பணியாற்ற இளையராஜா வாய்ப்புத் தேடி வந்த காலம் அது.

பஞ்சு அருணாச்சலத்தின் உதவியாளராக இருந்த ஆர் செல்வராஜ்தான் அன்னக்கிளி கதையை பஞ்சு அருணாச்சலத்துக்குக் கூறி, இளையராஜாவையும் அறிமுகப்படுத்தினார். அன்றைக்கு தமிழ் சினிமாவில் எம்எஸ் விஸ்வநாதன், கேவி மகாதேவன் போன்ற ஜாம்பவான்கள் இருந்தாலும், இந்தி சினிமா பாடல்களின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது.

Ilaiyaraaja is the gift of Panju Arunachalam

அந்த சூழலில் அன்னக்கிளியை பாடல்களுக்கு முக்கியத்துவம் உள்ள படமாக கருப்பு வெள்ளையில் தயாரித்தார் பஞ்சு அருணாச்சலம். அந்தப் படத்துக்கு இதுவரை இல்லாத வகையில் இசை பாடல்கள் அமைய வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில்தான் இளையராஜா அவரைச் சந்தித்தார். மேசையில் தாளமிட்டபடி அவர் பாடிக் காட்டிய பாடல்களில் இருந்த ஜீவன் பஞ்சு அருணாசலத்தின் மனதைப் பிசைந்தது. அவரது சகோதரர்கள், பார்ட்னர்கள் எவ்வளவோ மறுத்தும், இளையாராஜாதான் தன் படத்தின் இசையமைப்பாளர் என்பதில் பிடிவாதமாக இருந்தார் பஞ்சு.

படத்தின் பாடல் பதிவு ஆரம்பித்தபோது தொடர்ந்து இரு முறை மின்சாரம் இல்லாமல் போக, அதை அபசகுணமாகக் கருதி, மீண்டும் இளையராஜா வேண்டாம் என்றனர் பார்ட்னர்கள். 'பரவாயில்லை... எல்லாம் நல்லபடியாக நடக்கும். இந்தப் பையன் பெரிய ரேஞ்சுக்கு வருவான்,' என்று கணித்தவர் பஞ்சு அருணாச்சலம்.

டேனியல் ராஜய்யாவாக இருந்த அந்த இளைஞருக்கு இளையராஜா என்று பெயர் சூட்டியவரும் பஞ்சு அருணாச்சலம்தான்.

இளையராஜாவுடன் அன்னக்கிளியில் ஆரம்பித்த பயணம் எந்த சூழலிலும் தடைப்பட்டதில்லை. எவ்வளவு பிஸியாக இருந்தாலும் பஞ்சு அருணாச்சலம் கேட்டால் உடனே கால்ஷீட் தந்துவிடுவார் இளையராஜா.

இளையராஜா இந்த திரையுலகில் அதிகம் மதித்தது, நேசித்தது பஞ்சு அருணாச்சலத்தை. அவரது குடும்பத்தில் பிரிக்க முடியாத ஒரு அங்கம் இளையராஜா. அதேபோல தனது குடும்பத்தின் அனைத்து நிகழ்வுகளிலும் பஞ்சு அருணாச்சலத்தைத்தான் முன்னிறுத்தி நடத்துவார் இளையராஜா.

கடைசிவரை, அன்னக்கிளி தொடங்கி தான் தயாரித்த அத்தனைப் படங்களுக்கும் இளையராஜா அல்லது அவரது புதல்வர்களை மட்டுமே இசையமைப்பாளர்களாக நியமித்தவர் பஞ்சு அருணாச்சலம். இளையராஜாவை மட்டுமல்ல, அவரது மகன்கள் கார்த்திக் ராஜாவை அலெக்சாண்டர் படம் மூலமும், யுவன் சங்கர் ராஜாவை அரவிந்தன் மூலம் இசையமைப்பாளர்களாக அறிமுகமாக்கிய ராசிக்காரர் பஞ்சு அருணாச்சலம்.

English summary
Panju Arunachalam was the producer who introduced Ilaiyaraaja as a Music director through his classic movie Annakkili.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil