»   »  200 இசைக் கலைஞர்களுடன் ஹங்கேரி செல்கிறார் இளையராஜா

200 இசைக் கலைஞர்களுடன் ஹங்கேரி செல்கிறார் இளையராஜா

Posted By:
Subscribe to Oneindia Tamil

நவம்பர் 27, 2003

200 இசைக் கலைஞர்களுடன் ஹங்கேரி செல்கிறார் இளையராஜா

மாணிக்கவாசகரின் திருவாசக இறை கீதங்களுக்கு சிம்பொனி இசையமைக்கும் முயற்சியில் இசைஞானி இளையராஜா ஈடுபட்டுள்ளார்.

இதற்கான இசைப் பதிவு ஹங்கேரியில் நடக்கவுள்ளது.

தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் ஜெர்மன் மொழிகளில் இந்த திருவாசக இசை வெளியிடப்படவுள்ளது.

இந்த ஆண்டிலேயே இதை வெளியிட்டுவிட முயற்சிக்கப்பட்டது. ஆனால், நிதி உள்ளிட்ட சில காரணங்களால் இந்தப் பணி தள்ளிப் போய்விட்டது. கிட்டத்தட்ட ரூ. 5 கோடி செலவு பிடிக்கும் திட்டம் இது.

திருவாசகத்துக்கு நான்கு மொழிகளிலும் இசை வடிவம் தரும் சிம்பொனி நோட்ஸ்களை ராஜா தயாரித்து முடித்துவிட்டார்.

இதையடுத்து ஒலிப் பதிவைத் துவக்கிவிடத் திட்டமிட்டுள்ளார். டிசம்பர் மாதத்தில் இந்த கம்போசிங் பணி நடக்கவுள்ளது.

ஜனவரியில் ஒரே நேரத்தில் நான்கு மொழிகளில் இந்த சிம்பொனி இசை வெளியிடப்படவுள்ளது.

ரெக்கார்டிங் ஹங்கேரியில் தலைநகர் புடாபெஸ்ட்டில் நடக்கவுள்ளது. இதற்காக சுமார் 200 இசைக் கலைஞர்களுடன் ஹங்கேரிக்கு செல்ல இருக்கிறார் இசைஞானி.

கிட்டத்தட்ட ஒரு மாத காலம் அங்கேயே தங்கப் போகும் இளையராஜா, ஹங்கேரி நாட்டு இசைக் கலைஞர்களையும் கொண்டு இந்த சிம்பொனியை உருவாக்கி முடிக்கவுள்ளார்.

உலக அமைதிக்காக இந்த திருவாசக இசை யாகத்தை நடத்தும் இளையராஜா, இதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு சென்னையில் சர்வதேச இசைப் பல்கலைக்கழகம் அமைப்பதும், வட-கிழக்கு இலங்கையில் இசை- கலைக் கல்லூரி அமைக்கவும் திட்டமிட்டுள்ளார்.

இந்தத் திட்டத்துக்கான நிதி தமிழ் ஆர்வலர்கள், கோவில்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடம் திரட்டப்பட்டு வருகிறது.

Post your comment for this article

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil