For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சிலிக்கான்வேலியில் இளையராஜாவின் இன்னிசை: ஹைடெக் ரசிகர்கள் ஆரவாரம்

  By Shankar
  |

  சான் ஓசே(யு.எஸ்): அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இளையராஜா நடத்திய இசை நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள், எழுந்து போகக் கூட மறந்துபோய் ரசித்தார்கள். ஐந்தரை மணிநேரம் நடந்த இசை நிகழ்ச்சியைக் காண 12 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் வந்திருந்தனர்.

  அமெரிக்காவில் முதன்முறையாக நியூஜெர்ஸி மாநிலம் நுவர்க் நகரில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

  அதைத் தொடர்ந்து சற்று முன்பாக (வெள்ளிக்கிழமை இரவு) சிலிக்கான்வேலி என்றழைக்கப்படும் கலிஃபோர்னியா மாநிலம் பே ஏரியா, சான்ஓசே நகரில் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியை நடத்தியுள்ளார் இசைஞானி இளையராஜா.

  ஹெச்.பி. பெவிலியன் அரங்கில், மாலை 7.30 மணி முதல் நள்ளிரவு 12.15 மணி வரை நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ், தெலுங்கு பாடல்கள் இடம் பெற்றன.

  Ilayaraja
  இசை சாம்ராஜ்யம்

  எஸ்.பி.பாலசுப்ரமணியம், மனோ, சித்ரா, ஹரிஹரன், கார்த்திக், யுவன் ஷங்கர் ராஜா, பவதாரிணி, 'நீதானே பொன் வசந்தம்' புகழ் ரம்யா (கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் பேத்தி) விஜய் டிவி புகழ் சத்யன், அனிதா உட்பட பதினைந்திற்கும் மேற்பட்டவர்கள் பிரபல பிண்ணனி பாடகர்கள் பங்கேற்றனர்.

  இந்தியாவிலிருந்து வந்திருந்த இடைவேளையே இல்லாமல் நின்று கொண்டே நடத்தினார். இளையராஜாவின் முதல் படமான அன்னக்கிளி படத்தில் இருந்து கூடவே வயலின் இசைத்து வரும் பிரபாகர் உட்பட சுமார் 60 பேர் இசைத்தனர். குன்னக்குடி வைத்திய நாதனின் மகன் குமரனும் வந்திருந்து ஷெனாய் வாசித்தார்.

  முப்பது நிமிடத்தில் ஓ ப்ரியா ப்ரியா

  ஜனனி ஜனனி என்ற தாய் மூகாம்பிகை பாடலுடன் ஆரம்பமான நிகழ்ச்சியில், இளையராஜாவின் குரலும் தென்பாண்டிச்சீமையிலே வரை தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்தது. எந்த இசைக்கருவிகளும் இல்லாமல் முதல் முதலாக மேடையில் ஒரு பாடலை பாட வைத்தார்.

  ஏழு பாடகர்களின் குரல்களினால் மட்டுமே தேவையான இசை ஒலியையும் உருவாக்கி பாடிய அந்த பாடல் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. முன்னதாக நெஞ்சத்தை கிள்ளாதே படத்தில் பருவமே பாடலுக்கு, இசைக் கருவிகள் இல்லாமல் தொடையில் தாளம் தட்டியே முழு பாடலையும் பதிவு செய்தவர் இளையராஜா என்பதைக் குறிப்பிட்டார்கள்.

  இதயத்தை திருடாதே படத்தில் இடம்பெற்ற ஓ ப்ரியா ப்ரியா பாடலை முப்பது நிமிடத்தில் நோட்ஸ் கொடுத்து, இசையமைத்து முடித்ததை இளையராஜா நினைவு கூர்ந்த போது ரசிகர்கள் கரகோஷத்துடன் ஆர்ப்பரித்தனர்.

  தளபதி படத்தில் சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடலுக்கு வயலின்கள் இசைக்க இந்தி இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மனின் குழுவினர் வந்திருந்ததை எஸ்பிபி நினைவு கூர்ந்தார்.

  பாடல் பதிவு முடிந்தவுடன் அனைத்து இசைக் கலைஞர்களும் எழுந்து நின்று கைத்தட்டி இளையராஜாவை பாராட்டியது இன்றும் பசுமையாக இருக்கிறது என்றும் நினைவு கூர்ந்தார். இருவரும் தங்கள் பால்ய நட்பை வெளிப்படுத்தும் விதமாக தோள் மீது கை போட்டுக் கொண்டும், ஒருவரை ஒருவர் ஜோக்கடித்துக் கொண்டும் இருந்தனர்.

  மாசி மாசம் கேட்டு வாங்கிய ரஜினி

  செண்பகமே செண்பகமே பாடல் மூலம் புகழ் உச்சிக்கு சென்ற மனோ அதைப் பாடினார். ஒரு வார்த்தையை அவர் சற்றே மாற்றி உச்சரிக்க, பாடல் பதிவில் வெவ்வேறு டேக் வாங்குவது போல், மேடையிலும் நான்கு முறை டேக் வாங்கி மனோவுக்கு விளையாட்டு காட்டினார் ராஜா.

  தர்மதுரையில் இடம்பெற்றுள்ள மாசி மாசம் பாடல் உருவான கதையை சுவாராஸ்யமாக விவரித்தார். இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் வரும்' தண்ணி கருத்தருச்சு' பாடலை குறிப்பிட்டு, அதைப்போல் ஒரு பாடல் வேண்டும் என்று ரஜினி கேட்டாராம்.

  பல்வேறு ட்யூன்களை போட்டுக்காட்டிய பிறகு, இறுதியில் மாசி மாசம் பாடலை கேட்டதும் ரஜினிக்கு பிடித்து போய் விட்டதாக இளையராஜா தெரிவித்தார்.

  சாஃப்ட்வேர் என்றாலே நம்மூரு தானே...

  சாஃப்ட்வேர்களின் உலகத் தலைநகரமாக விளங்கும் சிலிக்கான்வேலி என்றழைக்கப்படும் பே ஏரியா தமிழ், தெலுங்கு மக்களின் அதிகப்படியான எண்ணிக்கையில் தென்னிந்தியா போல் விளங்குகிறது, நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களும் தொண்ணூறு சதவீதம் சாஃப்ட்வேர் வல்லுனர்களே.

  இதை நினைவு கூறும் விதமாக சொர்க்கமே என்றாலும் என்ற பாடலை பாடிய இளையராஜா, 'சாஃப்ட்வேர் என்றாலே நம்மூரு தானே' என்ற வரிகளையும் கூடுதலாக இணைத்து பாடினார். அதைக் கேட்ட ரசிகர்கள் உற்சாகத்தின் எல்லைக்கே போய் விட்டார்கள்.

  நான் ஷோமேன் அல்ல

  ஆனாலும் ஆரவாரம் இல்லாமல் இசையை ரசித்து கேட்க வேண்டும் என்றே இளையராஜா வேண்டுகோள் விடுத்தார். மேலும் 'நான் ஒரு ஷோமேன் அல்ல நல்ல இசையை கொடுப்பது மட்டுமே என் பணி' என்றார்.

  அவர் பத்து நிமிடம் மேடையை விட்டு சென்ற போது, மேடையை தங்கள் வசமாக்கிக் கொண்ட கார்த்திக்கும், யுவன் ஷங்கர் ராஜாவும் கூட்டத்தினரை சத்தம் எழுப்ப செய்து ஆரவாரப்படுத்தினர். ராஜா மேடையில் இருந்த மற்ற நேரம் முழுவதும் அது ஒரு இசைக் கூடமாகத்தான் தெரிந்தது. அவர் ஒரு இசை யாகம் நடத்தினார் என்று சொல்வதே சரியாக இருக்கும்.

  இளமைக் காலத்திற்கு திரும்பி வந்த தம்பதியினர்

  சுமார் பன்னிரண்டாயிரம் மேற்பட்ட ரசிகர்களில் பெரும்பாலானோர் தம்பதி சகிதமாக வந்திருந்தனர். குழந்தைகளை நண்பர்கள் வீட்டில் அல்லது காப்பகத்தில் விட்டுவிட்டு வந்திருப்பார்கள் போலும். அவர்கள் அனைவரும் மீண்டும் இளமைக் காலத்திற்கு சென்று வந்த அனுபவம் கண்கூடாக தெரிந்தது. நள்ளிரவு பன்னிரண்டு மணி தாண்டிய பிறகு, இளையராஜா தென்பாண்டிச் சீமையிலே பாடி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். ஆனாலும் யாருக்கும் எழுந்து செல்ல மனமில்லை.

  எழுந்து செல்ல மனமின்றி...

  கடைசியாக இன்னொரு பாட்டு என்று கோரிக்கை வைக்க ஆரம்பித்து விட்டனர். இப்போது கமா தான் வைத்துள்ளோம், மீண்டும் தொடர்வோம் என்று எஸ்பிபி சமாதானம் செய்த பிறகு தான், மனசே இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் கலையத் தொடங்கியது.

  டெக்னாலாஜி பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் சிலிக்கான்வேலி சமூகத்தை தன் இசையால் கட்டிப் போட்ட இசைஞானியின் இசையை விட உன்னதமான டெக்னாலஜி உலகில் வேறென்ன இருக்கு சொல்லுங்க!

  -ஒன்இந்தியா ஸ்பெஷல்

  English summary
  Maestro Ilayarajaa mesmerised more than 12000 music lovers with his outstanding musical performance in California concert.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X