For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  இளையராஜா... மக்களின் கலைஞன்!

  By Shankar
  |

  சென்னை: இசைஞானி இளையராஜா 70 வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார். நேற்று அவரது பிறந்த நாள் கொண்டாடப்பட்ட போதும் இன்றுதான் அவரது பிறந்த நாள் என்று அவரே ஒருமுறை கூறியுள்ளார். எனவே இன்று்ம் ராஜா புகழ் பாடலாம்...

  1975-ல் அன்னக்கிளி என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான போதே, திரையிசைக்கு புதிய பரிமாணத்தைத் தந்தவர் இளையராஜா.

  தமிழ் சினிமா எல்லைகளைத் தாண்டி, இந்தியாவின் முக்கிய மொழிகளில் உருவாகும் சினிமாக்களில் பரீட்சார்த்தமான பல இசை முயற்சிகளை மேற்கொண்டவர்.

  டேனியல் ராசய்யா...

  டேனியல் ராசய்யா...

  இளையராஜாவின் இயற்பெயர் ஞானதேசிகன் எனும் டேனியல் ராசய்யா. 1943-ம் ஆண்டு ஜூன் 2-ம் தேதி தேனி மாவட்டம் பண்ணைப் புரத்தில் பாவலர் சகோதரர்கள் நால்வரில் ஒருவராகப் பிறந்தார்.

  இளமை நாட்கள்...

  இளமை நாட்கள்...

  வறுமையின் தாக்கம் நிறைந்ததாக இளமைப் பருவம் கழிந்தாலும், இசை, பாட்டு என உற்சாகத்துக்குக் குறைவில்லாமல் மதுரை மண்ணில் சுற்றி வந்தார் ராசய்யா. பாவலர் பிரதர்ஸின் பாட்டுக் கச்சேரிகளில் பட்டி தொட்டியெங்கும் ராசய்யாவின் குரல் ஒலித்துக் கொண்டிருந்தது. பாரதிராஜாவின் நட்பு கிடைத்தது. அவர் நாடகங்களுக்கு இசை பாவலர் சகோதரர்கள்தான்.

  சென்னை வாழ்க்கை

  சென்னை வாழ்க்கை

  மூத்தவரான பாவலர் வரதராஜன் அமரரான பிறகு, சினிமாவில் வாய்ப்பு வேண்டும், இசையமைப்பாளனாக வேண்டும் என்ற கனவோடு அறுபதுகளில் சென்னைக்கு வந்தனர் பாவலர் சகோதரர்கள் பாஸ்கர், ராசய்யா மற்றும் கங்கை அமரன். கூடவே பாரதிராஜாவும். சென்னை வந்த பிறகு அவர்களுக்கு அத்தனை சுலபத்தில் கிட்டவில்லை வாய்ப்பு.

  நாடகங்களுக்கு இசை...

  நாடகங்களுக்கு இசை...

  சென்னையில் எஸ்ஏ சந்திரசேகரன், ஷோபா போன்றவர்கள் நடத்திய நாடகங்களுக்கு பாவலர் சகோதரர்கள் இசையமைத்துள்ளனர். பின்னர் குரு தன்ராஜ் மாஸ்டரின் உதவியுடன் அன்றைய முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜிகே வெங்கடேஷிடம் உதவியாளராகச் சேர்ந்தார் ராசய்யா, ஒன்றல்ல இரண்டல்ல... கிட்டத்தட்ட 200 படங்களுக்கு உதவியாளராக, இசைக் கருவிகள் வாசிப்பவராக, இசை நடத்துநராக பணியாற்றினார்.

  கோல்ட் மெடல்...

  கோல்ட் மெடல்...

  1970-ம் ஆண்டு லண்டன் ட்ரினிட்டி இசைக் கல்லூரியில் க்ளாசிகல் கிடார் பிரிவில் தங்கப் பதக்கம் பெற்றார் ராஜா. ஆமாம்... ராசய்யாவிலிருந்து ராஜாவாகிவிட்டிருந்தார்.

  கர்நாடக சங்கீதமும்...

  கர்நாடக சங்கீதமும்...

  வெகு ஜன இசையில் சிறுவயதிலிருந்தே நிபுணத்துவம் மிக்கவராகத் திகழ்ந்த ராஜா, மேலை இசை, கர்நாடக சங்கீதம், இந்துஸ்தானி இசையின் நுணுக்கங்களை தன்ராஜ் மாஸ்டர் உதவியுடன் கற்றுத் தேர்ந்தார். அதையெல்லாம் தான் உதவியாளராகப் பணியாற்றிய படங்களில் இடையிடையே பரீட்சார்த்தமாக இசைத்தும் பார்த்திருக்கிறார். அன்றைக்கு டாப் இசையமைப்பாளராகத் திகழ்ந்த சலீல் சவுத்ரி குழுவில் கிடாரிஸ்டாக, கீ போர்ட் பிளேயராக, ஏன்... இசை நடத்துநராகவும் இருந்திருக்கிறார் ராஜா.

  அன்னக்கிளி...

  அன்னக்கிளி...

  1975-ல் பஞ்சு அருணாச்சலம் ஒரு படம் தயாரிக்க முடிவு செய்தார். அதுதான் அன்னக்கிளி. ராஜாதான் இசையமைப்பாளர். ஏற்கெனவே ஏஎம் ராஜா பாடகராகவும் இசையமைப்பாளராகவும் அன்று பிரபலமாக இருந்ததால், இவருக்கு இளையராஜா என்று பெயர் சூட்டினார் பஞ்சு அருணாசலம். அந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்தபோது ஏற்பட்ட ஏராளமான தடங்கல்களே பின்னர் எப்படி வெற்றிப் படிக்கட்டுகளாகின என்பதையெல்லாம் நிறைய படித்திருப்பீர்கள்.

  பதினாறு வயதினிலே

  பதினாறு வயதினிலே

  ஆரம்ப ஆண்டில் இளையராஜா இசையமைத்தது 4 படங்களுக்குத்தான். அதில் இரண்டு படங்கள் சூப்பர் ஹிட் (அன்னக்கிளி, பத்ரகாளி). மற்ற இரண்டு படங்களிலும் பாடல்கள் அனைத்தும் ஹிட். அடுத்த ஆண்டு ஏழு படங்கள். அவற்றில் ஒன்றுதான் பதினாறு வயதினிலே. பாரதிராஜா - இளையராஜா கூட்டணியில் வந்த முதல்படம்.

  5 ஆண்டுகளில் 100 படங்கள்...

  5 ஆண்டுகளில் 100 படங்கள்...

  1978-ம் ஆண்டே இளையராஜா உச்சத்துக்குப் போய்விட்டார். அந்த ஆண்டு மட்டும் அவர் இசையமைத்தது 22 படங்கள்! 1979-80-ல் இளையராஜாவிடம் முதலில் தேதி வாங்குங்கள் என தயாரிப்பாளர்கள் சொல்ல ஆரம்பித்துவிட்டனர். 1980-ல் பாலு மகேந்திரா இயக்கிய மூடுபனிதான் இளையராஜாவின் 100வது படம். ஜஸ்ட் 5 ஆண்டுகளில் 100 படங்கள்.. இது ஒரு புதிய சாதனையாகும்.

  ஒரே ஆண்டில் 52 படங்கள்...

  ஒரே ஆண்டில் 52 படங்கள்...

  1980லிருந்து அடுத்த பத்தாண்டுகள் வரை, தமிழ் சினிமாவில் இசை என்றால் இளையராஜாதான். அந்தப் பத்தாண்டுகளில் இளையராஜா தந்தது இந்திய சினிமாவின் விலை மதிப்பற்ற பொக்கிஷமான இசையாகும். 1992-ல் உச்சகட்டமாக தமிழ், தெலுங்கில் 52 படங்களுக்கு இசையமைத்து பிரமிக்க வைத்தார் இளையராஜா.

  ஓய்ந்துவிட்டதா இளையராஜா அலை?

  ஓய்ந்துவிட்டதா இளையராஜா அலை?

  ஏ ஆர் ரஹ்மான் வருகைக்குப் பிறகு இளையராஜா அலை ஓய்ந்துவிட்டதாக சிலர் பேசி வந்தனர். ஆனால் அதையெல்லாம் இளையராஜா கண்டுகொள்ளவே இல்லை. தொன்னூறுகளிலும், இரண்டாயிரம் பிறந்த பிறகும் கூட ராஜாவின் இசையில் தெவிட்டாத பல நூறு பாடல்கள் வந்து கொண்டேதான் உள்ளன.

  2011-ல் 30 படங்கள்...

  2011-ல் 30 படங்கள்...

  2011-ல் தனது 68வது வயதில் இளையராஜா இசையமைத்த படங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா... 31! அத்துடன் ரமணர் மற்றும் சாய் பாபா பற்றி இரண்டு ஆல்பங்களும் வெளியிட்டார். இந்த 2012-ல் இளையராஜா இசையில் வெளியான மறந்தேன் மன்னித்தேன், நீதானே என் பொன் வசந்தம் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

  இந்த ஆண்டு...

  இந்த ஆண்டு...

  இப்போதும் இளையராஜா ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கிறார். அவரது மகன் யுவன் முன்னணி இசையமைப்பாளர். ஆனால் அவரை விட அதிக படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறார் ராஜா. இந்த ஆண்டு மட்டும் அவர் 14 படங்களுக்கு தமிழில் மட்டும் இசையமைக்கிறார். இது தவிர, தெலுங்கில் நான்கு படங்கள். மலையாளம், கன்னடம், இந்திப் படங்கள் தனி!

  5 தேசிய விருதுகள்...

  5 தேசிய விருதுகள்...

  இதுவரை 4 முறை தேசிய விருது பெற்றுள்ளார் இளையராஜா. மூன்று முறை பாடல் - இசைக்காகவும், ஒரு முறை பின்னணி இசைக்கும் தேசிய விருது பெற்றுள்ளார். பாலு மகேந்திராவால் ஒரு முறை விருது பெறும் வாய்ப்பைத் தவற விட்டுள்ளார் (தேவர் மகன்). ஜூரிக்களின் பாரபட்சத்தால் கிட்டத்தட்ட 6 முறை தேசிய விருது இவருக்கு கிடைக்காமல் போயிருக்கிறது.

  சாதனை இயக்குநர்கள்...

  சாதனை இயக்குநர்கள்...

  இன்றைய கட்டத்தில் சாதனை செய்து ஓய்ந்த அல்லது இன்னும் தொடரும் பாரதிராஜா, மணிரத்னம் போன்ற அத்தனை இயக்குநர்களின் படைப்புகளுக்கும் தன் இசையால் சிறப்பு சேர்த்தவர் இளையராஜா. ராஜாவின் இசையை மவுனித்து விட்டு, இந்த இயக்குநர்களின் படங்களைப் பாருங்கள்... அந்த இசையின் மகத்துவம் புரியும்!

  இன்றைய இயக்குநர்களின் விருப்பம்...

  இன்றைய இயக்குநர்களின் விருப்பம்...

  இளையராஜாவுடன் ஒருமுறையாவது பணியாற்றிவிட வேண்டும் என்பதுதான் இன்றைய இளம் இயக்குநர்களின் விருப்பம். காரணம், அவர்கள் வளர்ந்ததும் அவர்களின் கற்பனை சிறகடித்ததும் இவர் இசையைக் கேட்டுத்தான். திறமை மிக்க இளைஞர்களை ஊக்குவிப்பதில் இளையராஜாவுக்கு நிகரில்லை. பல இளம் படைப்பாளிகளின் முதல் படத்துக்கு ராஜா சம்பளம் பெற்றதில்லை என்ற உண்மை நிறைய பேருக்குத் தெரியாது.

  கவிஞர், பாடகர்...

  கவிஞர், பாடகர்...

  பாட்டெழுதுவதில் ராஜாவின் திறமையை காவியக் கவிஞர் வாலியே புகழ்ந்திருக்கிறார். வெண்பா எழுதும் கலையை தனக்கு சொல்லிக் கொடுத்தவரே இளையராஜாதான் என்பார் வாலி. இளையராஜா இசையில் அதிகம் பாட்டெழுதிய பெருமையும் வாலிக்குத்தான் உண்டு.

  கண்ணதாசன்...

  கண்ணதாசன்...

  இளையராஜா மீது அதிக அன்பும் அக்கறையும் கொண்டிருந்தவர் கவியரசு கண்ணதாசன். ராஜாவுடன் அவர் 6 ஆண்டுகள் பணியாற்றினார். கவியரசரை அதிகம் பயன்படுத்தியவர்களுள் இளையராஜாவும் ஒருவர். கவியரசர் மரணத்தருவாயில் எழுதிய கடைசி பாட்டு கண்ணே கலைமானே... அவர் காலமான பிறகு, அவர் எழுதிய ஒரு பாடலை தன் படத்தில் பயன்படுத்தினார் ராஜா. அதுதான் 'தேவன் தந்த வீணை...' (உன்னை நான் சந்தித்தேன்).

  இந்த இசைக்கு யார் வாரிசு..

  இந்த இசைக்கு யார் வாரிசு..

  ஒருமுறை இளையராஜாவிடம், உங்கள் இசைக்கு யார் வாரிசு என்று பிரஸ் மீட்டில் கேட்டோம். அதற்கு ராஜா தந்த பதில், "நீங்கள்தான்... நீங்கள்தான் என்றார். பின்னர், "இந்த உலகம் ரொம்பப் பெரிசு. இதில் அனைவருக்குமே சம பங்குண்டு. இங்கே உரிமை கொண்டாட என்ன இருக்கிறது. எனக்கென்று இசை வாரிசுகள் யாருமில்லை. இசைக்கு யாரும் வாரிசாகவும் முடியாது. அவரவர் திறமையில் முன்னே வர வேண்டியதுதான்," என்றார்.

  English summary
  Today Ilayarajaa celebrates his 70th birthday. Here is the glimpse of the Maestro's life and works.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X