twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆர் சுந்தர்ராஜன்- இளையராஜா... எவர்கிரீன் இசைக் கூட்டணி!

    By Shankar
    |

    தமிழ் சினிமாவின் எவர்கிரீன் இசைக் கூட்டணிகளுள் ஒன்று இளையராஜா - ஆர் சுந்தரராஜன்.

    இந்த இருவரும் இணைந்த அத்தனை படங்களிலும் பாடல்கள் சூப்பர் ஹிட்டடித்தவை. ஒரு பாடல், இரண்டு பாடல் என்றில்லாமல், அத்தனை பாடல்களுமே ஹிட்தான்.

    அப்படி வந்த படங்களின் தொகுப்பு:

    பயணங்கள் முடிவதில்லை

    பயணங்கள் முடிவதில்லை

    ஆர் சுந்தரராஜனின் முதல் படம். கோவைத் தம்பி தயாரிப்பில் வந்த இந்தப் படத்தில் 7 பாடல்கள். அனைத்துமே தமிழ் சினிமா வரலாற்றில் மறக்க முடியாத பாடல்களாக அமைந்தன. இளைய நிலா.., தோகை இளமயில், சாலையோரம்.., மணியோசை.., வைகரையில்.. போன்ற பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதவை. இதில் இடம்பெற்ற ஆத்தா ஆத்தோரமா... பாடல் தெம்மாங்கு பாடல்களில் உச்சம் தொட்டது.

    நான் பாடும் பாடல்

    நான் பாடும் பாடல்

    முதல் படத்தில் கிடைத்த வெற்றி, அந்தக் கூட்டணியை அப்படியே தொடர வைத்தது. கோவைத் தம்பி தயாரிக்க, இளையராஜா இசைக்க, ஆர் சுந்தரராஜன் இயக்கி 1984-ல் வெளியான இந்தப் படத்தில் 7 பாடல்கள். தேவன் கோயில், பாடும் வானம்பாடி, சீர் கொண்டுவா, பாடவா உன் பாடலை என அத்தனையும் தேவ கானங்களாக ஒலித்தன. இதிலும் ஒரு அட்டகாசமான தெம்மாங்குப் பாட்டு இருந்தது.. அது 'மச்சானை வச்சுக்கடி...'

    குங்கும சிமிழ்

    குங்கும சிமிழ்

    மோகன் - இளவரசி- ரேவதி நடித்த இந்தப் படம் சுமாராக இருந்தாலும், இளையராஜாவின் இசையும் 6 பாடல்களும் இந்தப் படத்துக்கும் வெற்றிப் பட அந்தஸ்தைத் தந்தன. நிலவு தூங்கும் நேரம், கூட்ஸ் வண்டியிலே, பூங்காற்றே, வச்சாளாம் நெத்திப் பொட்டு, கைவலிக்குது போன்ற பாடல்களை இன்னும் திரையிசை ரசிகர்கள் முணுமுணுத்துக் கொண்டுதான் உள்ளனர்.

    வைதேகி காத்திருந்தாள்

    வைதேகி காத்திருந்தாள்

    இசைக்காகவே ஓடிய படங்களில் முக்கியமானது இந்த வைதேகி காத்திருந்தாள். காரணம், இளையராஜா போட்டு வைத்திருந்த 7 பாடல்களை வைத்து உருவாக்கப்பட்ட கதை இது. படத்தின் கதையில் ஏகப்பட்ட மைனஸ்கள் இருந்தாலும் இளையராஜாவின் இசையும், கவுண்டமணி - செந்தில் நகைச்சுவையும் படத்தை வெற்றிச் சிகரத்தில் வைத்தன. ராசாத்தி உன்னை, இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே, காத்திருந்து, அழகு மலர் ஆட, மேகம் கருக்கையிலே போன்ற பாடல்களில் தமிழகமே கிறங்கிக் கிடந்தது!

    தழுவாத கைகள்

    தழுவாத கைகள்

    தமிழக அரசின் விருது பெற்ற படம் இது. வசூலில் பெரிதாகப் போகவில்லை. ஆனால் இசையும் பாடல்களும் நெஞ்சை அள்ளியவை. ஒண்ணா ரெண்டா தாமரைப்பூ, குடும்பத்தை உருவாக்கச் சொன்னா, விழியே விளக்கொன்று ஏற்று, தொட்டுப் பாரு போன்றவை இப்போது கேட்டாலும் புதிய அனுபவத்தை தருபவை. இந்தப் படத்தின் பெரும்பான்மையான பாடல்களை ஜெயச்சந்திரன் பாடியிருப்பார்.

    என் ஜீவன் பாடுது

    என் ஜீவன் பாடுது

    பஞ்சு அருணாச்சலம் தயாரித்த இந்தப் படத்தின் இசையும் பாடல்களும் இப்போது கேட்டாலும் சிலிர்ப்பைத் தரும். கட்டிவச்சுக்கோ எந்தன் அன்பு மனசை... என்ற பாட்டை சுந்தரராஜன் எடுத்த விதமும் அந்தப் பாடலின் இனிமையும் எப்போது கேட்டாலும் நம்மை ஊட்டிக்கே அழைத்துச் சென்றுவிடும். எங்கிருந்தோ அழைக்கும், ஒரே முறை உன் தரிசனம், காதல் வானிலே, ஆண்பிள்ளை என்றால்..., மவுனம் ஏன் மவுனமே போன்ற பாடல்கள் கொடுத்த சுகமான அனுபவத்துக்கு இணையில்லை!

    அம்மன் கோயில் கிழக்காலே

    அம்மன் கோயில் கிழக்காலே

    விஜயகாந்தின் படங்களில் ஒரு தனி ரகம் இந்தப் படம். காதல் கலாட்டாவை இசையால் குழைத்துக் கொடுத்திருந்தார்கள். இதிலும் 7 பாடல்கள். ஒவ்வொன்றும் இணையற்ற இனிமை கொண்டவை. சின்னமணி குயிலே..., நம்ம கடைவீதி, பூவ எடுத்து, உன் பார்வையில், மூணு முடிச்சாலே, காலை நேரப் பூங்குயில்... போன்ற பாடல்களை இன்னொரு முறை கேட்டுப் பாருங்கள்!

    மெல்லத் திறந்தது கதவு

    மெல்லத் திறந்தது கதவு

    எம்எஸ் விஸ்வநாதனுடன் இணைந்து இளையராஜா இசையமைத்த முதல் படமான மெல்லத் திறந்தது கதவை இயக்கிய பெருமை ஆர் சுந்தரராஜனுக்கு உண்டு. இந்தப் படத்திலும் 7 பாடல்களும் மெகா ஹிட். குழலூதும், வா வெண்ணிலா, ஊரு சனம், தில் தில் தில், சக்கரகட்டிக்கு, தேடும் கண்பார்வை என தேன் சுவை பாடல்கள் படம் முழுக்க. இவை தவிர, நான்கைந்து பாடல் துணுக்குகளும் உண்டு. அவற்றை தனி சிடியாகவே கூட போடலாம் எனும் அளவுக்கு சுவாரஸ்யமானவை.

    ராஜாதி ராஜா

    ராஜாதி ராஜா

    இது ரஜினி படம். என்றாலும் இதிலும் தன் இசை முத்திரையை படம் முழுக்கப் பதித்திருப்பார் இளையராஜா. படத்தின் தயாரிப்பாளரும் அவர்தான். மொத்தம் எட்டுப் பாடல்கள். எங்கிட்ட மோதாதே, மலையாளக் கரையோரம், வா வா மஞ்சள் மலரே, மீனம்மா, மாமா உன் பொண்ணக் கொடு, உன் நெஞ்சத்தொட்டுச் சொல்லு போன்ற பாடல்களை முணுமுணுக்காத உதடுகளே இல்லை எனலாம். ஜெயிலு வாழ்க்கையே, ஆத்துக்குள்ள அத்திமரம் போன்ற இரண்டு நிமிடப் பாடல்கள் இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பு.

    தாலாட்டுப் பாடவா

    தாலாட்டுப் பாடவா

    பார்த்திபன், ரூபிணி, குஷ்பு நடித்த இந்தப் படத்தின் சிறப்பும் இளையராஜா இசைதான். வராது வந்த நாயகன், நீதானா, அம்மம்மா, ஓடைக்குயில், சொந்தமென்று வந்தவளே ஆத்தா, வெண்ணிலவுக்கு... என ஏழு தித்திக்கும் பாடல்கள்.

    திருமதி பழனிச்சாமி

    திருமதி பழனிச்சாமி

    சத்யராஜா - கவுண்டரின் கலாட்டா படம். நல்ல விழிப்புணர்வுப் படமும் கூட. இதிலும் இளையராஜாதான் ஹீரோ. பாத கொலுசு பாட்டு, குத்தாலக் குயிலே, நடுச் சாமத்துல, அம்மன் கோயில், ஓதாமல், ரெண்டுல ஒண்ணைத் தொடு ஆகிய பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.

    சாமி போட்ட முடிச்சு, எங்கிட்ட மோதாதே

    சாமி போட்ட முடிச்சு, எங்கிட்ட மோதாதே

    முரளி நடித்த சாமி போட்ட முடிச்சு, விஜயகாந்த் நடித்த எங்கிட்ட மோதாதே ஆகிய இரு படங்களும் அடுத்தடுத்து வெளியானவை. இந்த இரண்டிலும் கூட பாடல்கள் ஹிட்டடித்தன. ஆனால் படங்கள்தான் பெரிதாகப் போகவில்லை.

    நிலாச்சோறு

    நிலாச்சோறு

    இடையில் சில படங்களில் ஆர் சுந்தர்ராஜன் வேறு இசையமைப்பாளர்களுடன் பணியாற்றினார். எம்எஸ்வி, கேவி மகாதேவன், தேவா ஆகியோர் இசையமைத்திருந்தனர். இப்போது மீண்டும் இளையராஜாவுடன் கூட்டணி அமைத்து சித்திரையில் நிலாச்சோறு என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி, ராஜா ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.

    English summary
    Ilayarajaa - R Sundarrajan combination produced many classic hits in the past. Here is the compilation of those unforgettable hits.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X