twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சந்திரபாபு நினைவு நாள்... நடிப்புக்காக முகத்தில் பெருச்சாளியை ஓடவிட்ட நடிகர்...அரிய தகவல்கள்

    |

    சென்னை: தமிழ் திரையுலகில் 1950 களிலேயே ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் பெற்று ராஜ வாழ்க்கை வாழ்ந்து பிற்காலத்தில் வறுமையில் வாடியவர். பரபரப்புக்கு பஞ்சமில்லாதவர் 46 வயதில் மரணமடைந்தது சோகம். நடிகர் சந்திரபாபு நினைவு நாள் இன்று. அவரைப்பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்.

    ஜெமினி ஸ்டுடியோவில் வாய்ப்புக் கிடைக்காத சோகத்தில் கடிதம் எழுதிவைத்து அங்கேயே தற்கொலைக்கு முயன்ற இளைஞர் அடுத்த சில ஆண்டுகளில் ஒருவார கால்ஷீட்டுக்கு ரூ. 1 லட்சம் (அப்போது தங்கம் ஒரு சவரன் 100 ரூபாய் இருந்தது, கணக்கு போட்டுக்கொள்ளுங்கள்) சம்பளம் வாங்கும் நிலையை அடைந்தார். அவர்தான் சந்திரபாபு.

    தற்கொலைக்கு முயன்ற சந்திரபாபு

    தற்கொலைக்கு முயன்ற சந்திரபாபு

    1943 ஆம் ஆண்டு ஜெமினி எஸ்.எஸ்.வாசனை சந்திக்க அந்நிறுவன ஸ்டுடியோவில் நுழைந்த அந்த இளைஞன் தற்கொலை முயற்சியில் ஈடுபட அவனை கைது செய்த போலீசார் நீதிபதி முன் நிறுத்தினர். அப்போது நீதிபதியிடம் அந்த இளைஞர் வைத்த வாதம் நீதிபதியை வெகுவாக கவர அவனுடைய பிரச்சனை என்னவென்று கேட்டார். வாசனை சந்திக்க இயலாமல் போனதையும், சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் போனதையும் குறிப்பிட்டு கூறிய அந்த இளைஞன் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தது உங்களுக்கெல்லாம் செய்தி ஆனால் எனக்கு அதுக்கு வலி என்று கூறி ஒரு சிறு உதாரணம் மூலம் கூறி நீதிபதியைக் கவர்ந்தார்.

    உச்சம் தொட்ட 1950-கள்

    உச்சம் தொட்ட 1950-கள்

    பின்னர் அவர் செய்த சேட்டைகளை, சந்திரபாபுவின் நடிப்புத் திறமையை பார்த்து ஈர்க்கப்பட்ட நீதிபதி அவரை சிறையில் அடைக்காமல் நிபந்தனை ஜாமீனில் விடுவித்தார் இதன் பின்னர் அவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்தது. அதன் பின்னர் 1947 ஆம் ஆண்டு திரைப்படத்தில் அறிமுகமாகி அடுத்த 6,7 ஆண்டுகளில் உச்சத்துக்குச் சென்றார் சந்திரபாபு. எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி என அனைவர் படங்களிலும் அவர்தான் நகைச்சுவை நடிகர்.

    பாடல், நடிப்பு, நடனம், நவநாகரீக உடை

    பாடல், நடிப்பு, நடனம், நவநாகரீக உடை

    பாடல், நடிப்பு, நடனம் என வித்தியாசமாக நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்து உச்ச நட்சத்திரமானார் சந்திரபாபு. அந்த காலத்திலேயே அவரது ஆங்கிலம் கலந்த வித்தியாசமான நடனம், நடிப்பு, மேனரிசம் மிகுந்த வரவேற்பை பெற்றது. ஆங்கிலம் சரளமாக பேசுவார், மேற்கத்திய பாணி உடை அணிவது, மேற்கத்திய நடனமான ராக் அன் ரோல் பாணி நடனம் அதுவரை சினிமாவில் யாரும் பார்க்காத ஒன்று. நின்ற இடத்தில் கால்களை மட்டும் அசைத்து ஆடுவது அவரது புகழ்பெற்ற நடனமாகும்.

     நடிப்புக்காக முகத்தில் பெருச்சாளியை ஓடவிட்டவர்

    நடிப்புக்காக முகத்தில் பெருச்சாளியை ஓடவிட்டவர்

    நடிப்புக்காக எதையும் செய்வார் சந்திரபாபு. அதுவும் டூப் போடாமல் அவர் செய்யும் சாகசங்கள் பிரமிப்பாகவும் நகைச்சுவையாகவும் இருக்கும். மாடியிலிருந்து குதிப்பது, பல்டி அடிப்பது, பாய்ந்து விழுவது என அவர் காட்டிய வித்தைகளை ரசிக்காத ஆட்களே இல்லை எனலாம். ஒரு படத்தில் முட்டையை விழுங்கி கோழிக்குஞ்சுகளை வாயிலிருந்து எடுப்பார். அன்னை படத்தில் பெருச்சாளியை மேலே விட்டு அது முகத்துக்கு அருகில் வரும்போது தூக்கிப்பிடித்து பார்த்துவிட்டு அலறி அடித்து அந்த பகுதியையே ரணகளமாக்கும் நகைச்சுவை பிரபலமானது.

    மெட்ராஸ் பாஷையின்நாயகன்

    மெட்ராஸ் பாஷையின்நாயகன்

    இவர் பின்னனி பாடிய கல்யாணம், ஆஹா கல்யாணம் என்கிற பாடலுக்கு வீணை பாலச்சந்தர் ஆடி நடித்திருப்பார். இன்றளவும் அந்தப்பாடல் பிரபலம். நடிப்பில் மட்டுமல்ல தமிழ் திரைப்படத்தில் மெட்ராஸ் பாஷையை அறிமுகப்படுத்தியதும் சந்திரபாபுவே. சகோதரிப்படத்தில் பால்காரராகவும், சபாஷ் மீனாவில் குடிகார கைரிக்‌ஷாகாரராகவும் வந்து கலக்குவார். திருவல்லிக்கேணியில் இளம்வயதிலேயே வளர்ந்ததால் அவருக்கு மெட்ராஸ் பாஷை இயல்பாக வந்தது. அதுவரை அப்படி ஒரு தமிழ் சினிமாவில் பேசப்பட்டதில்லை. பிற்காலத்தில் சோ, லூஸ் மோகன், சுருளிராஜன், கமல்ஹாசன், தேங்காய் சீனிவாசன், எம்.எஸ்.பாஸ்கர் போன்றோர் பேசினாலும் முதலில் விதைபோட்டது இவரே.

    எந்த காலத்திலும் மறக்கமுடியாத எவர் கிரீன் பாடல்கள்

    எந்த காலத்திலும் மறக்கமுடியாத எவர் கிரீன் பாடல்கள்

    தமிழ் சினிமாவில் பாடல்களுக்காக புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் சந்திரபாபு மட்டுமே. அவரது 'கல்யாணம் ஆஹா கல்யாணம்' 'பொறந்தாலும் ஆம்பளையாப் பொறக்கக் கூடாது', 'நான் ஒரு முட்டாளுங்க', 'குங்குமப் பூவே கொஞ்சம் புறாவே', 'உனக்காக எல்லாம் உனக்காக', 'பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாலே', 'நானொரு முட்டாளுங்க', 'பிறக்கும் போது அழுகின்றான்', 'சிரிப்பு வருது சிரிப்பு வருது', 'ஒண்ணுமே புரியல உலகத்துல', 'புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை', 'என்னைத் தெரியலையா இன்னும் புரியலையா' ஆகிய பாடல்கள் இன்றும் எவர் கிரீன் பாடல்கள் தான்.

    நடிப்புக்காக வீட்டைதுறந்து வெளியேறியவர்

    நடிப்புக்காக வீட்டைதுறந்து வெளியேறியவர்

    சந்திரபாபுவின் அப்பா ரோட்ரிக்ஸ் தூத்துக்குடியை பூர்வீகமாக கொண்ட மீனவர். சுதந்திரப்போராட்டத்தியாகி. அவரது தாயார் ரோஸ்லினும் சுதந்திரப்போராட்டத்தியாகிதான். இதானால் இத்தம்பதி இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டனர். சந்திரபாபு 16 வயதுவரை இலங்கையில்தான் படித்து வளர்ந்தார். பின்னர் தமிழகம் திரும்பிய அவர்கள் திருவல்லிக்கேணியில் வசித்தனர். படம் நடிக்க தடை போட்ட தந்தையைப் பகைத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினார் சந்திரபாபு.

    இசையமைப்பாளர் வேதாவுடன் பழக்கம்

    இசையமைப்பாளர் வேதாவுடன் பழக்கம்

    அங்கு இங்கு திரிந்து பிளாட்பார்மில் படுத்துறங்கி வாய்ப்பு தேடி அலைந்துள்ளார். பெரும்பாலும் சாந்தோம் கடற்கரையில் மறைந்த இசையமைப்பாளர் வேதா(மாடர்ன் தியேட்டர்ஸ் ஆஸ்தான இசையமைப்பாளர்), தபேலா தாமுவுடன் பாடல் பாடி வருமானம் ஈட்டியுள்ளனர். இதுவே அவர் திரையில் பாடல் பாட உதவியாக இருந்தது.

    பெரும் தலைவர்களுடன் நட்பு

    பெரும் தலைவர்களுடன் நட்பு

    சந்திரபாபுவின் அப்பா காங்கிரஸ்காரர் என்பதால் காமராஜர் அவரது குடும்ப நண்பர். சந்திரபாபுவுக்கும் அவர் நண்பர். அதேபோல் எதிர் துருவமான ஜெயகாந்தனுக்கும் அவர் நண்பர். இருவரும் அடிக்கடி சந்தித்து விவாதம் செய்வது வழக்கம். சந்திரபாபு போலி புகழ்ச்சி அறியாதவர். அப்போதைய புகழ்பெற்ற நடிகர் எம்.ஜி.ஆரை 'மிஸ்டர் எம்.ஜி. ஆர்.' என்று அழைத்த ஒரே ஆள் இவர்தான், சிவாஜி கணேசனுடன் வாடா, போடா நட்பு உண்டு.

    இன்றுவரை ஒருவர் வரவில்லை...சந்திரபாபுவின் சாதனை

    இன்றுவரை ஒருவர் வரவில்லை...சந்திரபாபுவின் சாதனை

    என் நடிப்பு மற்றவர்களுக்கு ஒரு சவால்தான். யாராவது இதைப்போல நடித்துக் காட்டுங்கள் என்று சவால்விடுவாராம் சந்திரபாபு. உண்மைதான் 50 ஆண்டுகள் ஆனாலும் அவர்போல் நடிக்க பாடல், நடனம் ஆட யாரும் வரவில்லை. 'புகழ் பெறுவதற்காக விளம்பரம் அடையும் வரை தொழிலில் அக்கறை காட்டுவது இயற்கை. ஆனால், புகழ்பெற்ற பிறகும் நடிப்பில் சந்திரபாபுவைப் போல அக்கறை காண்பிப்பவர்கள் குறைவு' என்று சொன்னவர் எம்.ஜி.ஆர்.

    உல்லாச மாளிகை...வாழாமல் போன பரிதாபம்

    உல்லாச மாளிகை...வாழாமல் போன பரிதாபம்

    சந்திரபாபு நடிப்பின் உச்சத்தில் இருந்தபோது, அவர் ஒருவாரத்திற்கு ரூ.1 லட்சம் சம்பளம் வாங்கினார். மந்தைவெளியில் அவர் வீடு ஒன்றைக்கட்டினார். அது கண்ணாடி மாளிகை, அவரது காரில் நேராக படுக்கை அறை வரைச் செல்லும் வகையில் நவீனமாக கட்டியிருந்தார். ஆனால் அந்த வீடு கட்டி முடிக்கப்பட்டபோது அவர் பட்ட நஷ்டத்தால் அதை விற்க நேர்ந்தது.

    முதலிரவு அன்றே முடிந்த திருமண வாழ்க்கை

    முதலிரவு அன்றே முடிந்த திருமண வாழ்க்கை

    ஷீலா என்ற பெண்ணுடன் திருமணம், முதலிரவின் போதே தனக்கு உள்ள இன்னொரு தொடர்பை அந்தப் பெண் சொன்னதால் முதலிரவோடு முறிந்தது உறவு. விரும்பியவருடன் மனைவியை அனுப்பி வைத்துவிட்டார். அதன் பின் திருமணமே செய்துக்கொள்ளவில்லை. ஆனால் பெண்கள் விஷயத்தில் அவர் நிறைய பேசப்பட்டார், அதை அவர் மறுக்கவும் இல்லை. எப்போதும் வெளிப்படையான வாழ்க்கையையே சந்திரபாபு வாழ்ந்தார். மனதில் பட்டதை பேசினார்.

     புனித பாத்திமாவின் மீது அயராத பற்று

    புனித பாத்திமாவின் மீது அயராத பற்று

    என் திறமையை நினைத்து நானே அடைந்துகொள்ளும் பெருமை எனது பலவீனம். அடுத்தது, என்னுடைய குடிப்பழக்கம். நான் பெண்களைத் தேடி அலைபவன் அல்ல', அவர்கள் என்னைத் தேடி வரும்போது கதைவைத் தாழிட்டுக் கொள்பவனும் அல்ல' என்று சொன்னதாக சொல்வார்கள். தீவிர மதப்பற்றாளரான சந்திரபாபு புனித பாத்திமா மீது பக்தி கொண்டவர். தனது முதல் சம்பளத்தில் அவர் வாங்கிய புனித பாத்திமா படத்தை எப்போதும் தன்னுடனேயே வைத்திருந்தார். அவர் உயிரிழந்தபோது அவருடனேயே அப்படத்தை வைத்து புதைத்தனர்.

    இறங்குமுகம், நஷ்டம்...

    இறங்குமுகம், நஷ்டம்...

    1960 க்குப்பிறகு அவரது திரையுலக வாழ்வில் சறுக்கல் ஏற்பட்டது. மது, பெத்தடினுக்கு அடிமையானார். இரண்டு படங்களில் கதாநாயகனாக நடித்தது தோல்வியை கொடுத்தது. மாடிவீட்டு ஏழை என சொந்தப்படம் எம்ஜிஆரை வைத்து எடுக்கும் முயற்சியும் தோல்வியில் முடிந்தது. 'தட்டுங்கள் திறக்கப்படும்' அவர் இயக்கிய படம் சரியாக போகவில்லை. அதன் பின்னர் அவரது திரையுலக வாழ்க்கையில் இறங்குமுகம் ஆரம்பித்தது. கடன் பிரச்சினையில் சிக்கினார்.

    காலம் தந்த அற்புத கலைஞன் கடைசிக்காலத்தில் வறுமை

    காலம் தந்த அற்புத கலைஞன் கடைசிக்காலத்தில் வறுமை

    காலம் தந்த அற்புதமான கலைஞன் சந்திரபாபு தனக்கு ஏற்றம் தந்த சினிமாவில் எப்படி வாழ வேண்டும் என்று புரியாமல் நஷ்டப்பட்டுக்கொண்டார். கடைசி காலங்கள் அவருக்கு வறுமையான காலக்கட்டமாக அமைந்தது. பட வாய்ப்புகள் குறைந்துப்போய் வறுமையில் வாடியுள்ளார். கடைசி காலத்தில் அவர் தன்னை பார்க்கவரும் நண்பர்களிடம் பிரியாணியும், குவார்ட்டரும் வாங்கிட்டு வா என்று கேட்டதை சிலர் வருத்தத்தோடு பதிவிட்டிருந்தனர்.

    புரியாத புதிரான சந்திரபாபு

    புரியாத புதிரான சந்திரபாபு

    வறுமையில் வாடி சினிமாவில் நுழைந்து உச்சம் தொட்டு, வாழத் தெரியாமல் வந்ததை இழந்து, மீண்டும் வறுமையில் வாடிய சந்திரபாபுவின் வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டு. ஆனால் தமிழ் திரையுலகில் அவரது பங்களிப்பு மறக்க முடியாதது. புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றிக்காண்பதில்லை என பாடியவர், ஒன்னுமே புரியல உலகத்திலே என்று அனைவருக்கும் புரியாத புதிராகவே மறைந்துபோனார். அவர் மறைந்தபோது அவரது வயது 46 மட்டுமே என்பது கூடுதல் சோகம்.

    English summary
    Today is the 48th anniversary of Chandrababu's memorable performance in Tamil cinema., தமிழ் திரையுலகில் மறக்க முடியாத நடிகராக விளங்கிய சந்திரபாபுவின் 48வது நினைவு நாள் இன்று.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X