»   »  இப்படிக்கு 'ரோஸ்'!

இப்படிக்கு 'ரோஸ்'!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Click here for more images
அழுவாச்சி சீரியல்களைப் போட்டும், அரைத்த மாவையே திரும்பித் திரும்பி அரைத்தும், மக்களை கிரைண்டரில் போட்டு அரைத்துக் கொண்டிருக்கும் டிவிகளுக்கு மத்தியில் படு வித்தியாசமான டிவியாக திகழும் விஜய் டிவி, இன்னும் ஒரு அதி வித்தியாசமான நிகழ்ச்சியை வழங்கப் போகிறது.

மெகா சீரியல்களைக் கண்டுபிடித்த பிரகஸ்பதி யார் என்று தெரியவில்லை. ஆனால் இன்று அந்த மெகா சீரியல்கள் மக்களைப் படுத்தும் பாட்டை சொல்லி மாள முடியாது. இந்த மெகா சீரியல்களால் மக்களின் உடல் நிலையில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக பல ஆய்வுகளும் கூட கூறியுள்ளன. அந்த அளவுக்கு மக்களின் மன நிலையையும், உடல் நிலையையும் போட்டு படுத்தி எடுத்து வருகின்றன.

இந்த நிலைக்குக் காரணம், மெகா சீரியல்களின் முக்கிய அம்சமே அழுவாச்சி கதைகள்தான். எந்தத் தொடரை எடுத்தாலும் அதில் அழுகைதான் பாதி எபிசோடுகளை ஆக்கிரமித்துள்ளது. தன்னம்பிக்கை ஊட்டக் கூடிய, தைரியம் தரக் கூடிய, அறிவுப்பூர்வமான, ஆக்கப்பூர்வமான சீரியல் என்று பார்த்தால் ஒன்று இரண்டு கூட தேறுவதில்லை.

சீரியல்களை விட்டால் டிவிகளை ஆக்கிரமித்திருக்கும் இன்னொரு ஐட்டம் சினிமா. இந்த இரண்டும் இல்லாத தமிழ் டிவியையே காண முடியாது.

இந்த வகையில், விஜய் டிவியை சற்று வித்தியாசமான டிவியாக கூற முடியும். இந்த டிவியிலும் கூட சீரியல்கள் உள்ளன. ஆனால் அழுவாச்சித்தனமான, அரைத்த மாவையே அரைக்கும் சீரியல்கள் இதில் வருவதில்லை.

வித்தியாசமான கதையம்சத்துடன் கூடிய சீரியல்களையும், நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வெளுத்துக் கட்டி வருகிறது விஜய் டிவி. சினிமா சாராத பல நிகழ்ச்சிகளை, புத்தம் புது கான்செப்ட்டுடன் கூடிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி அவற்றை வெற்றிகரமான நிகழ்ச்சிகளாகவும் மாற்றியுள்ளது விஜய் டிவி.

விஜய் டிவியின் நிகழ்ச்சிகளைப் பார்த்து பிற டிவிகள் காப்பி அடிக்கும் அளவுக்கு விஜய் டிவி இந்த விஷயத்தில் வெற்றியும் பெற்றுள்ளது.

இந்த நிலையில் விஜய் டிவியில் படு வித்தியாசமான ஒரு நிகழ்ச்சி வரவுள்ளது. நிகழ்ச்சியின் பெயர் இப்படிக்கு ரோஸ்.

இந்த நிகழ்ச்சியை ரோஸ் என்பவர் தொகுத்து வழங்கவுள்ளார். இவர் பெண் அல்ல என்பதுதான் இங்கு விசேஷமானது. ரோஸ் ஒரு அரவாணி.

இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் இதுவரை ஒரு அரவாணி, எந்த நிகழ்ச்சியையும் வழங்கியதில்லை. ஆனால் முதல் முறையாக, விஜய் டிவியில் இப்படிக்கு ரோஸ் நிகழ்ச்சியை அரவாணியான ரோஸ் தொகுத்து வழங்கவுள்ளார்.

அரவாணிகள் குறித்த சமூகத்தின் பார்வையை மாற்றும் நோக்கிலும், அரவாணிகள் குறித்த தவறான எண்ணத்தை மாற்றும் வகையிலும் இந்த நிகழ்ச்சியை அரவாணியான ரோஸை வைத்து நடத்தவுள்ளது விஜய் டிவி.

ரோஸ் சாதாரண அரவாணி இல்லை. இரண்டு என்ஜீனியரிங் பட்டங்களைப் பெற்றவர். அமெரிக்காவில் சில காலம் வசித்தவர்.

இந்த ஷோ குறித்து ரோஸ் கூறுகையில், அரவாணிகள் குறித்து சமூகத்தில் தவறான கருத்து நிலவுகிறது. ஆனால் மற்றவர்களைப் போலவே அவர்களுக்கும் கனவுகள் உண்டு, அபிலாஷைகள் உண்டு என்பதை சமூகம் மறந்து விட்டது.

இப்படிக்கு ரோஸ் மூலம் அந்தக் கருத்து மாறும் என்ற நம்பிக்கை உள்ளது. மீடியாக்கள் மூலம் சமூகத்திற்கு பல நல்ல கருத்துக்களைக் கூற முடியும். அந்த வகையில் அரவாணிகள் குறித்த தவறான அப்பிராயத்தை மாற்ற இந்த நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவி பெரும் பங்காற்றவுள்ளது.

எனது படிப்பும், அனுபவங்களும் இந்த ஷோவை வெற்றிகரமாக நடத்த உதவும் என்று தன்னம்பிக்கையோடு கூறுகிறார் ரோஸ்.

ஆல் தி பெஸ்ட் ரோஸ்!

Read more about: rose

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil