»   »  ஜல்லிக்கட்டும் தமிழ் சினிமாவும்

ஜல்லிக்கட்டும் தமிழ் சினிமாவும்

Subscribe to Oneindia Tamil
Kamalahasan
உச்சநீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு தமிழர்களிடையே மட்டுமல்லாமல், தமிழ் சினிமாவிலும் மிகவும் பாப்புலர் ஆனது.

அந்தக் காலத்து படங்கள் முதல் இந்தக் காலத்து படங்கள் வரை ஜல்லிக்கட்டை சிறப்பித்து எடுக்கப்பட்ட காட்சிகள் ஏராளம்.

வீரபாண்டிய கட்டபொம்மனில் மயிர்க்கூச்செறியும் ஜல்லிக்கட்டு காட்சி இடம் பெற்றிருந்தது. சாவித்ரி வளர்த்து வைத்திருக்கும் காளையை ஜெமினி கணேசன் அடக்கும் காட்சியை, எந்தவித தொழில்நுட்ப வசதியும் இல்லாத அந்தக் காலத்திலேயே படு நேர்த்தியாக படம் பிடித்திருப்பார்கள்.

அதேபோல தை பிறந்தால் வழி பிறக்கும் படத்திலும் ஜல்லிக்கட்டு காட்சி இடம் பெற்றிருக்கும்.

மக்களைப் பெற்ற மகராசி படத்திலும் ஜல்லிக்கட்டு காட்சி இடம் பெற்றிருந்தது.

இது பழைய காலத்து பட நிலவரம். போன தலைமுறையில் ரஜினிகாந்த் நடித்த முரட்டுக்காளையில் ரஜினிகாந்த் காளையை அடக்குவது போன்ற காட்சியை விறுவிறுப்பாக படமாக்கியிருப்பார் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்.

ராமராஜன் நடித்த பெரும்பாலான படங்களில் காளைகளுக்கும், பசுக்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். அவரது எங்க ஊரு பாட்டுக்காரன் படத்திலும் வித்தியாசமான ஜல்லிக்கட்டு இடம் பெற்றிருக்கும். பாட்டைப் பாடியே மாட்டை அடக்குவதாக புது ஜல்லிக்கட்டை அறிமுகப்படுத்தியிருந்தனர் அப்படத்தில்.

பாக்யராஜ் வில்லனாக நடித்த கன்னிப்பருவத்திலே படத்திலும் ஜல்லிக்கட்டு இடம் பிடித்திருந்தது.

கமல்ஹாசன் நடித்த விருமாண்டி படத்தில் உண்மையான ஜல்லிக்கட்டு காளைகளை வைத்து ஜல்லிக்கட்டை படமாக்கியிருப்பார்கள். நேரிலேயே போய் ஜல்லிக்கட்டை பார்த்த திருப்தியைக் கொடுக்கும் வகையில் விருமாண்டியில் இடம் பெற்ற ஜல்லிக்கட்டு அமைந்தது.

சமீபத்தில் வெளியான மிருகம் படத்திலும் ஜல்லிக்கட்டு காட்சி இடம் பெற்றிருந்தது. ஆனால் மிருக நல வாரியம் எழுப்பிய ஆட்சேபனையால் அந்த காட்சியை தணிக்கை வாரியம் கட் செய்து விட்டது.

கிராமப்புற கதைகளை களமாக கொண்ட திரைப்படங்களில் கண்டிப்பாக ஜல்லிக்கட்டோ அல்லது மஞ்சு விரட்டோ இடம் பெறுவது என்பது எழுதப்படாத சட்டமாக இருந்து வந்தது.

இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் தமிழ் சினிமாக்காரர்களுக்கும் கூட வருத்தமாகத்தான் இருக்கும்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil