»   »  ஜீவா உடலுக்கு அமிதாப் அஞ்சலி

ஜீவா உடலுக்கு அமிதாப் அஞ்சலி

Subscribe to Oneindia Tamil

ரஷ்யாவில் மறைந்த இயக்குநர் ஜீவாவின் உடல் இன்று காலை மும்பைக்கு வந்தது. அவரது உடலுக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், அவரது மகனும் நடிகருமான அபிஷேக் பச்சன் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

ரஷ்யாவில் தாம் தூம் படத்தின் ஷூட்டிங்குக்காகச் சென்ற இடத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார் ஜீவா. அவரது உடல் இன்று அதிகாலை மும்பைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது.

மும்பை விமான நிலையத்தில் இயக்குநரும், ஜீவாவின் மைத்துனருமான வசந்த், ஜீவாவின் குருவான இயக்குநர் பிரியதர்ஷன் ஆகியோர் உடலைப் பெற்றுக் கொண்டனர்.

ஜீவாவின் உடல் விமான நிலையத்தில் ஒரு மணி நேரம் வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு நடிகர்கள் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், சுனில் ஷெட்டி, அக்ஷய் குமார், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அதன் பின்னர் ஜீவாவின் உடல் ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டது. பிற்பகல் 12.30 மணிக்கு விமானம் சென்னையை வந்தடைந்தது.

ஸ்டெர்லிங் சாலையில் உள்ள ஜீவாவின் வீட்டில், அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. அங்கு திரைத் துறையினர் ஜீவா உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இன்று மாலை 6 மணிக்கு ஜீவாவின் உடல் ராயப்பேட்டை மசூதியில், அடக்கம் செய்யப்படவுள்ளது.

திரிஷா, ஆசின் புகழாரம்:

இயக்குநர் ஜீவாவின் மறைவுக்கு நடிகைகள் திரிஷாவும், ஆசினும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது திறமையை புகழ்ந்துள்ளனர்.

ஜீவாவின் உடல் இன்று சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு அவரது வீட்டில் திரையுலகினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மும்பையில் ஷூட்டிங்கில் இருந்த ஆசின் அங்கிருந்து சென்னைக்கு விரைந்து வந்தார்.

ஜீவாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அவர் ஜீவாவின் மனைவி அனீஷாவுக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் ஆசின் கூறுகையில், ஜீவா சார்தான் எனது முதல் இயக்குநர். அந்தப் படத்தில் நான் புக் ஆவதற்கு முன்பே ஜீவா குறித்து நிறைய அறிந்திருந்தேன். தாம் தூம் படத்திற்குப் பிறகு ஜீவாவின் இயக்கத்தில் நடிப்பது குறித்து கூட நான் ஜீவாவுடன் பேச்சு நடத்தியிருந்தேன்.

அவரது திடீர் மரணம் எனக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடத்துள்ளது. அவரது மறைவால், தென்னிந்திய சினிமாவில் பெரும் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

மிகவும் அருமையான, திறமையான நபர் ஜீவா. அவரது புதிய சிந்தனைகள் சினிமாவுக்கு புத்துயிர் கொடுத்தன. மனித உணர்வுகளை நவீன பாணியில் படமாக்கியவர் அவர் என்றார் ஆசின்.

அதேபோல திரிஷாவும், ஜீவாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். திரிஷா கூறுகையில், நான் மாடலாக இருந்த நாட்களிலிருந்த ஜீவாவை எனக்கு நன்றாகத் தெரியும். எனது முதல் விளம்பரப் படத்தின் இயக்குநரும் ஜீவாதான். அவர் தான் நான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஊக்கம் கொடுத்தார்.

ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு பார்ட்டியில் அவரை சந்தித்தபோது, அடுத்து என்னை வைத்து ஒரு படம் இயக்கப் போவதாக கூறியிருந்தார். அதற்கு நான் விளையாட்டாக, இந்தியாவிலேயே படத்தை ஷூட் செய்வதாக இருந்தால் நடிக்கிறேன் என்று கூறியிருந்தேன்.

இப்போது எனது நலம் விரும்பிய நல்ல மனிதரான ஜீவா உயிருடன் இல்லை. ஜீவா மாதிரியான திறமையான, ஜாலியான, திறமையான ஒரு இயக்குநருடன் பணிபுரியும் வாய்ப்பு எனக்கு இனிமேல் கிடைக்காது என்றார் திரிஷா. இப்படிக் கூறியபோது அவரது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil