»   »  எட்டி பார்க்குமா ஆணிவேர்?

எட்டி பார்க்குமா ஆணிவேர்?

Subscribe to Oneindia Tamil

ஈழத் தமிழர்களின் இன்னல்களை விவரிக்கும் ஆணிவேர் படத்தை தமிழகத்தில் திரையிடுவதற்காக சென்சார் போர்டுக்குப் படத்தை அனுப்ப உள்ளனர்.

ஈழத்தில் நடக்கும் சண்டையினால் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழர்களின் இன்னல்கள், துயரங்களை விவரிக்கும் முழுமையான திரைப்படம்தான் ஆணிவேர்.

பிரபல ஒளிப்பதிவாளர், இயக்குநர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார். நந்தா, மதுமிதா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

முழுக்க முழுக்க யாழ்ப்பாணத்திலேயே இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங்குக்காக ஒரே ஒரு கேமராவை மட்டும் பயன்படுத்தியுள்ளனர். ஈழத் தமிழர்களின் முழுமையான உதவியுடன், அவர்களின் பங்களிப்புடன் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

படத்தின் கதை இதுதான். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழரான நந்தா அங்கு டாக்டராகப் பணியாற்றுகிறார். போரில் பாதிக்கப்படும் தமிழர்களுக்கு இன உணர்வுடன், அர்ப்பணிப்பு மனதுடன் பணியாற்றுகிறார்.

இந்தியாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளரான மதுமிதா, யாழ்ப்பாணத்திற்காக பணி மாற்றமாக வருகிறார். அங்கு நந்தாவைச் சந்திக்கிறார். அவர் மூலம் யாழ் தமிழர்களின் துயரங்கள், சோகங்கள், மதுமிதாவைப் பாதிக்கிறது. அங்கேயே தங்குகிறார்.

ஆனால் நந்தாவையும், மதுமிதாவையும் பிரித்து விடுகிறார்கள். தமிழகத்திற்கு அனுப்பப்படுகிறார் மதுமிதா. சில காலத்திற்குப் பின்னர் அவர் மீண்டும் யாழ் வருகிறார். நந்தாவைத் தேடி அலைகிறார். கண்டுபிடித்தாரா, இருவரும் இணைந்தார்களா என்பதுதான் படத்தின் கதை.

இப்படம் பல வெளிநாடுகளில் திரையிடப்பட்டு ஓடிக் கொண்டிருக்கிறதாம். ஆனால் இதுவரை இந்தியாவில் வெளியிடவில்லை. இதற்கு சென்சார் போர்டு அனுமதிக்குமா என்ற தயக்கம்தான் காரணம். தற்போது இப்படத்தை சென்சார் போர்டுக்கு அனுப்பி வைத்துள்ளனராம்.

படத்தை அப்படியே அனுமதித்தால் சந்தோஷமடைவோம் என்றார் ஜான் மகேந்திரன். பத்திரிக்கையாளர்களுக்காக நேற்று இப்படத்தைத் திரையிட்டுக் காட்டினார் ஜான் மகேந்திரன்.

ஆணிவேர் படத்தை தமிழகத்திலும் திரையிட முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளார் ஜான் மகேந்திரன்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil