»   »  உளியின் ஓசை

உளியின் ஓசை

Posted By:
Subscribe to Oneindia Tamil

முதல்வர் கருணாநிதி பல ஆண்டுகளுக்கு முன்பு தீட்டிய உளியின் ஓசை என்ற கதை திரைப்படமாகிறது. இந்தப் படத்துக்கு இசையமைக்க வேண்டும் என்று இளையராஜாவை அணுகியபோது, கதையைக் கூட கேட்காமல் 7 பாடல்களை ஒரே நாளில் இசையமைத்துக் கொடுத்து அசத்தி விட்டாராம் ராஜா.

கலைஞர் தீட்டிய பல கதைகள் திரைப்படங்களாகியுள்ளன. பல படங்களுக்கு கலைஞரே வசனத்தையும் வார்ப்பித்து தனது தமிழை விளையாட விட்டு உலகத் தமிழர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

அந்த வகையில், கலைஞர் கருணாநிதி எழுதிய உளியின் ஓசை என்ற நூல் இப்போது திரைப்பட வடிவம் எடுக்கிறது. ஒரு சிற்பிக்கும், நாட்டியக்காரிக்கும் இடையில் மலர்ந்த காதல் காவியம்தான் உளியின் ஓசை.

இந்தக் கதையின் பின்னணி ராஜராஜ சோழன் காலத்தில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. ராஜராஜசோழன், தஞ்சை பெரிய கோவிலில் 108 கர்ண நிலைகளில் சிலை அமைக்க திட்டமிட்டான். அதன்படி சிலைகளும் தயாராகின. ஆனால் 83 சிலைகளுடன் அந்தத் திட்டம் நின்று போனது.

அது ஏன் நின்று போனது, அதன் பின்னணி என்ன என்பதுதான் உளியின் ஓசை கதையின் கருவாகும். அருமையான தமிழ் வார்த்தைகளில், அற்புதமாக வார்த்தெடுக்கப்பட்ட அழகிய காதல் காவியம்தான் உளியின் ஓசை.

இந்தக் கதையை பெரும் பொருட் செலவில் படமாக்குகிறார் திருவொற்றியூர் எஸ்.பி.முருகேசன். வினீத் நாயகனாக நடிப்பார் என்று தெரிகிறது. நாட்டியம் தெரிந்த நாயகியைத் தேடி வருகின்றனர். பிரபல நடிகைகளில் ஒருவர் நடிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்துக்கு இசையமைப்பவர் இசைஞானி இளையராஜா. அவரை அணுகிய தயாரிப்பாளர், இப்படத்துக்கு நீங்கள்தான் இசையமைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். கதையின் பெயரைச் சொன்னதுமே ஓ, உளியின் ஓசையா, இந்தக் கதையை நான் பல வருடங்களுக்கு முன்பே படித்திருக்கிறேனே என்று வியந்து கூறினாராம் இளையராஜா.

அத்தோடு நில்லாமல் படத்துக்காக 7 பாடல்களையும் சுடச் சுடப் போட்டு கையில் கொடுத்து விட்டாராம். காலை 6 மணிக்குத் தொடங்கி அடுத்த நாள் காலை 9 மணிக்குள் 7 பாடல்களும் ரெடியாகி விட்டதாம். இந்த இன்ப அதிர்ச்சியிலிருந்து இன்னும் தயாரிப்பாளர் முருகேசன் மீளவில்லை என்கிறார்கள்.

பாரதிராஜாவின் கண்கள் என போற்றப்படும் ஒளிப்பதிவாளர் பி.கண்ணன்தான் இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். படத்தில் வரும் கேரக்டர்கள் அணியும் ஆடை, அணிகலன்களை பிரபல ஓவியர் மாருதி வடிவமைத்துக் கொடுத்துள்ளாராம்.

பிரபல எழுத்தாளர் இளவேனில்தான் இப்படத்தின் திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தைக் கவனிக்கவுள்ளார்.

கலைஞர் வழங்கிய கன்னல்களில் இந்த உளியும் ஒன்று. சுவைத்துச் சாப்பிட தமிழர்களின் உணர்வுகளும், உள்ளங்களும் ரெடி!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil