»   »  கலைஞர் டிவியில் பாலச்சந்தர்!

கலைஞர் டிவியில் பாலச்சந்தர்!

Subscribe to Oneindia Tamil

புதிதாக உருவாகவுள்ள கலைஞர் டிவிக்காக, சிவாஜி புரொடக்ஷன்ஸும், கே.பாலச்சந்தரின் கவிதாலாயா நிறுவனமும் டிவி தொடர்களைத் தயாரித்து வழங்கவுள்ளன.

சன் டிவியுடன் உறவை முறித்துக் கொண்ட திமுக, தனக்கென புது டிவியை கொண்டு வருகிறது. கலைஞர் டிவி என இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது. ராஜ் டிவி நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இந்த புதிய டிவி நிறுவனம் உருவாக்கப்படுகிறது.

செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்த நாளன்று கலைஞர் டிவியின் ஒளிபரப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிவி அறிவிப்பு வெளியானது முதலே புதிய படங்களை வாங்கிக் குவிக்க ஆரம்பித்துள்ளது. சிவாஜி, தசாவதாரம் உள்ளிட்ட பல படங்களை வாங்கி வைத்துள்ளது கலைஞர் டிவி.

இந்த நிலையில், டிவி தொடர்களை தயாரித்து வழங்க முன்னணி நிறுவனங்களுடன் கலைஞர் டிவி ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் கலைஞர் டிவிக்காக தொடர் தயாரித்து தரவுள்ளது.

அதேபோல, கே.பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனமும் வாராந்திர மற்றும் தினசரி தொடர்களைத் தயாரித்து வழங்கவுள்ளது.

தினசரி ஒளிபரப்பாகும் வகையிலான மெகா சீரியல் ஒன்றில் சுகன்யா நடிக்கவுள்ளார். 3 கல்யாண ஜோடிகள் குறித்த கதை இது என்கிறார் கே.பாலச்சந்தரின் மகளும், தயாரிப்பாளருமான புஷ்பா கந்தசாமி.

தேவையில்லாத வில்லன்களும், அழுவாச்சி காட்சிகளும் இந்த தொடரில் இருக்காது என்றும் அவர் உறுதியளிக்கிறார்.

இதுதவிர கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் வாராந்திர தொடர் ஒன்றையும் கவிதாலயா வழங்கவுள்ளது.

இதுதவிர ராதிகாவின் ராடான் நிறுவனத்தையும் தொடர் தயாரித்துத் தருமாறு கேட்டுக் கொண்டுள்ளதாம் கலைஞர் டிவி.

ஆரம்பத்திலிருந்தே அசத்தும் நோக்கத்துடன் காய்களை கன கச்சிதமாக நகர்த்த ஆரம்பித்துள்ளது கலைஞர் டிவி.

சன் எப்படி சமாளிக்கப் போகிறதோ?

Please Wait while comments are loading...