»   »  தசாவதாரம் கதை: கமலுக்கு உத்தரவு

தசாவதாரம் கதை: கமலுக்கு உத்தரவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

தசாவதாரம் படத்தின் கதை தொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் மற்றும் நடிகர் கமல்ஹாசனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செந்தில்குமார் என்ற உதவி இயக்குநர், கமல்ஹாசன் நடிக்கும் தசாவதாரம் படத்தின் கதை தன்னுடையது. அதை திருட்டுத்தனமாக எடுத்து தசாவதாரம் படத்தை எடுத்து வருகின்றனர் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை முதலில் விசாரித்த தனி நீதிபதி, செந்தில்குமாரின் மனுவைத் தள்ளுபடி செய்து விட்டார். இதையடுத்து செந்தில்குமார் பெஞ்ச் முன்பு மீண்டும் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை தலைமை நீதிபதி ஏ.பி.ஷா மற்றும் நீதிபதி ஜோதிமணி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது.

கடந்த மாதம் படத்தின் முழுக் கதையையும், யார் பெயரில் அந்தக் கதைக்கு காப்பிரைட் தரப்பட்டுள்ளது என்ற விவரத்தையும் தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் நீதிமன்றம் கூறியிருந்த காலத்திற்குள் இவற்றை தயாரிப்பாளர் தரப்பு தாக்கல் செய்யவில்லை.

இந்த நிலையில் நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் கமல்ஹாசன் சார்பில் வக்கீல் சஞ்சய் ராமசாமி ஆஜரானார். படத்தின் முழுக் கதையையும் மனுதாரர் கோருவது நியாயமற்றது என்று அவர் வாதாடினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், படத்தின் முழு திரைக்கதையையும் தாக்கல் செய்ய வேண்டும் என தயாரிப்பாளர் மற்றும் கமல்ஹாசனுக்கு உத்தரவிட்டனர்.

இந்தக் கதையின் நகலை மனுதாரருக்கு (செந்தில்குமாருக்கு) தருவது குறித்து ஆகஸ்ட் 7ம் தேதி முடிவு அறிவிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil