»   »  கோர்ட்டில் ஆஜரான கமல்!

கோர்ட்டில் ஆஜரான கமல்!

Subscribe to Oneindia Tamil

தசாவதாரம் படக் கதை தொடர்பான வழக்கில் கமல்ஹாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அவரிடம் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா தலைமையிலான பெஞ்ச் தனியாக விசாரணை நடத்தியது.

சென்னை மேற்கு தாம்பரத்தைச் ேசர்ந்தவர் செந்தில்குமார். உதவி இயக்குநரான இவர், தான் எழுதிய கதையை தனது அனுமதி பெறாமல் தசாவதாரம் படத்தில் பயன்படுத்தியுள்ளதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, செந்தில்குமாரின் மனுவைத் தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து அவர் அப்பீல் செய்துள்ளார். இந்த மனுவை தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி ஜோதிமணி ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்ச் விசாரித்து வருகிறது.

கமல்ஹாசன் மற்றும் செந்தில்குமார் ஆகிேயார் தங்களது கதையை விரிவாக, ஆங்கிலத்தில் தாக்கல் செய்யுமாறு பெஞ்ச் முன்பு உத்தரவிட்டிருந்தது. அதன்படி இரு தரப்பும் தங்களது கதையை சமர்ப்பித்தனர்.

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கமல்ஹாசன் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமனும், செந்தில்குமார் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கே.சுப்பிரமணியமும் ஆஜராகினர்.


விசாரணையின்போது வழக்கறிஞர் சுப்பிரமணியம் பேசுகையில், கமலஹாசன் தாக்கல் செய்த முழு கதையையும் எங்களுக்கு கொடுத்தால்தான், கதையை ஒப்பிட்டுப் பார்த்து வாதாட முடியும்.

எங்கள் கதையில் கதாநாயகன், உலகின் மிகப்பெரிய பணக்காரர் பில்கேட்ஸைவிட பெரிய பணக்காரர் ஆவது போல் குறிப்பிட்டுள்ளோம். ஆனால் கமல் அவர் கதையில் ஜார்ஜ்புஷ் வேடத்தில் நடிப்பதாக ஷூட்டிங் நடத்தி வருகிறார். இந்த விவகாரத்தில் நடிகர் கமலஹாசனை நேரில் அழைத்து விசாரணை நடத்தினால்தான் உண்மை என்னவென்று தெரியும் என்றார்.

இதற்கு பதிலளித்த கமலின் வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், அவர்கள் சொல்வது அனைத்தும் தவறானதாகும். எங்கள் கதையை பார்த்தால் வேறுபாடுகள் தெரியும் என்றார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, அப்படியானால் எதிர் மனுதாரரையும் (கமல்) வரவழைத்துத்தான் விசாரிக்க முடியும் என்று கூறி கமல்ஹாசனை நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.

இதையடுத்து பிற்பகல் 2 மணிக்கு கமல்ஹாசன் நேரில் ஆஜரானார். பின்னர் இரண்டரை மணிக்கு தலைமை நீதிபதி முன்பு ஆஜரானார் கமல். முதலில் செந்தில்குமார் மற்றும் அவரது வழக்கறிஞரிடம் தலைமை நீதிபதியும், நீதிபதி ஜோதிமணியும் தனியாக விசாரணை நடத்தினர்.

பின்னர் கமல்ஹாசன் வரவழைக்கப்பட்டார். தனது வக்கீல் ராமனுடன் ஆஜரான கமலிடம் நீதிபதிகள் தனியாக விசாரணை நடத்தினர். கால் மணி நேரம் நீதிபதிகளிடம் தனது கதை குறித்து விளக்கம் அளித்தார் கமல்.

இந்த விசாரணையின்போது வேறு யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. பின்னர் விசாரணை வரும் திங்கள்கிழமைக்கு பெஞ்ச் ஒத்திவைக்கப்பட்டது.

கமல்ஹாசன் கோர்ட்டுக்கு வந்ததைத் தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. வக்கீல்கள், வழக்குகளுக்காக வந்தவர்கள், போலீஸார் என பெரும் திரளானோர் கூடி கமல்ஹாசனை ஆவலுடன் பார்த்தனர்.

செய்தியாளர்கள் கமலிடம் என்ன நடந்தது என்று கேட்டபோது பதில் அளிக்க மறுத்த கமல், எனது வக்கீல் இருக்கிறார். அவரிடம் உங்களது கேள்விகளை கேளுங்கள், அவர் பதிலளிப்பார் என்று கூறி விட்டு கிளம்பினார்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil