twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சினிமாவுக்கும் ஒத்திகை முக்கியம்!-கமல்

    By Chakra
    |

    Trisha, Udayanidhi Stalin, Kamal and KS Ravikumar
    ரூ. 3 லட்சம் செலவு பண்ணி போடற நாடகத்துக்கு ஒத்திகை பார்க்கிறார்கள்... ஆனால் ரூ. 50 கோடி, ரூ.100 கோடின்னு செலவு பண்ற சினிமாவுக்கு ஒத்திகை பார்க்க மறுக்கிறோம்... இது அக்கிரமமானது என்றார் கமல்ஹாஸன்.

    கமல்-த்ரிஷா நடிக்க, உதயநிதி ஸ்டாலின் தயாரிக்க, கேஎஸ். ரவிக்குமார் இயக்கும் புதிய படம் 'மன்மதன் அம்பு' அறிமுக விழா சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் நடந்தது.

    கமல்ஹாசன், த்ரிஷா, மாதவன், சங்கீதா, டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார், படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின், இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத், ஒளிப்பதிவாளர் மனுஷ் நந்தன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

    அப்போது, நிருபர்களிடம் பேசிய கமல்ஹாசன்,

    "பொதுவாக ஒரு படம் முடிப்பதற்குள் இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் இடையே பிரச்சனைகள் ஏற்படும். ஆனால் இந்த படத்தின் இயக்கும் கே.எஸ்.ரவிகுமாரும், தயாரிப்பாளர் உதயநிதியும் ஏற்கனவே ஒரு படத்தில் இணைந்து பணிபுரிந்து இருக்கிறார்கள். இது, இரண்டாவது படம். இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டிருப்பது, சந்தோஷம்.

    சினிமா மீது அன்பு செலுத்துபவர்கள் மீது, நான் அன்பு செலுத்துவேன். அந்த வகையில் எனக்கும், தயாரிப்பாளருக்கும் பொருத்தம் இருக்கிறது. இது, ஜாதக நம்பிக்கையில் வரும் பொருத்தம் அல்ல. அவரும் சினிமாவை நேசிக்கிறார். நானும் சினிமாவை நேசிக்கிறேன். அந்த வகையில் எங்களின் பொருத்தம் சரியாக இருக்கிறது.

    இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் சொல்வதை நான் கண்ணை மூடிக்கொண்டு செய்வேன். நான் சொல்வதை, அவர் கண்ணை மூடிக்கொண்டு செய்வார். அதனால்தான் எங்களால் 5 வெற்றிப் படங்களைக் கொடுக்க முடிந்தது.

    கேஎஸ் ரவிக்குமாருக்கு கோபமே வராது... எப்பவும் ஜாலியா இருப்பார் என்று மாதவன் சொன்னார். அது பொய். அவருடைய இன்னொரு பக்கம் எனக்குத்தான் தெரியும்.

    அப்புறம், ரொம்ப நாளா நான் விரும்பிய ஒரு விஷயத்தை இந்தப் படத்துல செஞ்சிருக்கோம். அது ஒத்திகை. சினிமா ஒரு கூட்டு முயற்சி. அதற்கு ஒத்திகை தேவை என்றால், யாரும் மதிப்பதில்லை. என் கருத்துக்கு மதிப்பளித்து, சினிமாவுக்கு ஒத்திகை தேவை என்பதை புரிந்துகொண்ட தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நன்றி.

    மூன்று அல்லது நான்கு லட்சத்தில் தயாராகும் நாடகங்களுக்கே 40 நாட்கள் ஒத்திகை பார்க்கிறார்கள். நாற்பது அல்லது ஐம்பது கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்படும் சினிமாவுக்கு ஒத்திகை பார்க்காதது, அக்கிரமம் என்றே தோன்றுகிறது. இதை எனக்கு புரியவைத்த வாத்தியார்கள் சண்முகம் அண்ணாச்சி, கே.பாலசந்தர் ஆகியோருக்கு நன்றி.

    நடிகர் திலகம் சிவாஜி கூட, ஒத்திகை பார்ப்பார். படப்பிடிப்பு அரங்கில் அவர் வாய் முணுமுணுத்துக் கொண்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஒத்திகைப் பார்க்க வேண்டும் என்ற என் கருத்துக்கு ஒத்துழைத்த நடிகர்-நடிகைகளுக்கு நன்றி. இந்த படத்தில் ஆரம்பித்துள்ள ஒத்திகை, இனி எல்லா படங்களிலும் தொடரும் என்றார்.

    இந்த நிகழ்ச்சியின் சிறப்பு, அதை கமலின் மீடியா மேனேஜரும் படத்தின் மக்கள் தொடர்பாளருமான நிகில் முருகன் தொகுத்தளித்த விதம்தான். கமல்ஹாஸன் மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு அவர் கொடுத்த முன்னுரை கமல்ஹாஸனையே புன்னகைக்க வைத்தது.

    இதை தனது பேச்சின்போது இப்படிக் குறிப்பிட்டார் கமல்: "இங்கு பேசிய எல்லோருமே சுருக்கமாக பேசினார்கள், நிகில் ஒருவரைத் தவிர" என்றார் சிரித்தபடி.

    இயக்குநர் ரவிக்குமார் பேசுகையில், இந்த படத்தில கமல் சாருக்கு கெட்டப் இல்லை. அவரு முழுக்க முழுக்க ரொமான்ட்டிக் ஹீரோவா நடிச்சு பல வருஷம் ஆச்சு. இந்த படத்தில் கமல் ரொமான்ட்டிக் ஹீரோவா நடிக்கிறாரு. முப்பது வயசு பையன் தோற்றத்துக்கு வந்திட்டாரு என்றார்.

    விசேஷம் என்னவென்றால் இப்படத்திற்காக கதை, திரைக்கதை, வசனம், இவற்றுடன் பாடல்கள் எழுதும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார் கமல். 90 சதவீத படப்பிடிப்பு வெளிநாட்டில்தான் நடைபெறுகிறதாம்.

    "கதைக்கு தேவைப்பட்டா முத்தக்காட்சியும் இருக்கும்" என்கிறார் கே.எஸ்.ரவிகுமார்.

    அது இல்லாமல் கமல் படமா!!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X