»   »  தத்தெடுத்த 'கந்தசாமி'

தத்தெடுத்த 'கந்தசாமி'

Posted By:
Subscribe to Oneindia Tamil


சீயான் விக்ரம், ஷ்ரியா நடிப்பில், கலைப்புலி தாணு தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகும் கந்தசாமி படக்குழுவினர், மதுரை பக்கம் உள்ள 2 கிராமங்களை தத்தெடுத்து அசத்தியுள்ளனர்.

கந்தசாமி படத்தின் தொடக்க விழா சென்னை தேவி பாரடைஸ் தியேட்டரில் வெகு கோலாகலமாக நேற்று மாலை நடந்தது. வித்தியாசமான முறையில் படங்களை தயாரிக்கும் கலைப்புலி தாணு, இந்த நிகழ்ச்சியையும் படு வித்தியாசமாக அரங்கேற்றினார்.

கோலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் என பலரும் குழுமியிருந்தனர். தமிழ் திரையுலகம் தவிர பிற மொழித் தயாரிப்பாளர்கள், இயக்குநர்களும் கூட வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கந்தசாமி படத்துடன் தொடர்புடைய அனைவரும் வந்திருந்தனர். விக்ரம் வித்தியாசமான கெட்டப்புடன் மேடையில் தோன்றி சிறிது நேரம் படத்தின் கதை குறித்து பேசினார்.

அனைவரையும் அசரடிக்கும் வகையில் படு கிளாமராக டிரஸ் போட்டு வந்து இதயங்களை பிசைய வைத்தார் ஷ்ரியா. அழகான ஆங்கிலத்தில் சில வார்த்தைகளையும் மேடையில் பேசினார். அவர் பேசியதை விட அவரது உடைதான் கிளாமர் பாஷையை சிறப்பாக பேசியது.

கந்தசாமி படத்தில் வரும் ஒரு பாடலின் சில வரிகளுக்கு விக்ரமும், ஷ்ரியாவும் ஆடி மகிழ்வித்தனர். தேவி ஸ்ரீபிரசாத்தின் இசையில் பாடல் அதிரடியாக வந்திருந்தது.

இதுவரை நடந்ததெல்லாம் படு ஸ்லோவாக இருந்தது. ஆனால் இயக்குநர் சுசி கணேசன் மேடையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டபோது அரங்கில் கூடியிருந்த அனைவருமே அசந்து விட்டனர்.

சுசி. கணேசன் பேசுகையில், மதுரை மாவட்டத்தில் உள்ள சங்கம்பட்டி மற்றும் காந்தி நகர் ஆகிய இரு கிராமங்களை கந்தசாமி படக்குழு தத்தெடுத்துள்ளது. அந்தக் கிராமத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை நாங்கள் செய்துள்ளோம். தொடர்ந்து செய்யவும் போகிறோம்.

இந்தக் கிராமங்களில் மிகவும் தேவையான அடிப்படை வசதி கூட இல்லை. இவற்றை நாங்கள் கொடுத்துள்ளோம் என்றார். இப்படி ஒரு அருமையான ஐடியாவை கலைப்புலி தாணுவிடம், சுசி. கணேசன் கூறியபோது அவர் உடனே ஒப்புதல் கொடுத்தாராம். சுசி. கணேசன் ஒரு கிராமத்தைத்தான் தத்தெடுக்கலாம் என கூறியுள்ளார். ஆனால் தாணுதான் ஒன்றுக்கு இரண்டாக தத்தெடுக்கலாம் தம்பி என சுசி.கணேசனை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினாராம்.

சுசி.கணேசன் தொடர்ந்து பேசுகையில், படத் தொடக்க விழாவை வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று விரும்பியபோது, எங்களது பட விழாவில் அந்த இரண்டு கிராமத்து மக்களையும் மேடையில் நிறுத்த ஆசைப்பட்டோம். அதன்படி தற்போது அவர்களையும் இங்கு அழைத்து வந்துள்ளோம் என்று கூறி இரு கிராமத்திலிருந்தும் அழைத்து வரப்பட்டிருந்த கிராமத்துப் பிரதிநிதிகளை அழைத்து நிறுத்தினார்.

இந்த இரு கிராமங்களிலும் பள்ளிக்கூடங்களைப் புதுப்பித்தது, சமையல் கூடத்தில் புகை போக்கி அமைத்தது, சாலை அமைத்தது என பல நல்ல விஷயங்ளை செய்துள்ளது கந்தகசாமி யூனிட்.

இதை செய்ததற்குக் காரணம், படத்தின் கதையும் அதுதானாம். இல்லாதவர்களுக்கு இருப்பவர்களிடமிருந்து எடுத்துக் கொடுக்கும் ராபின்ஹூட் கதாபாத்திரத்தில் விக்ரம் நடிக்கவுள்ளாராம். இதை படத்தில் செய்தியாக சொல்வதை விட நாமே அதைச் செய்து முன்னுதாரணமாக இருக்கலாமே என்றுதான் இரு கிராமங்களைத் தத்தெடுத்து அங்கு பல வசதிகளைச் செய்து கொடுத்து புண்ணியத்தை வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளனர் கலைப்புலி தாணுவும், சுசி.கணேசனும்.

பட விழாவுக்கு வந்திருந்த மைனே பியார் கியா படத்தை இயக்கியவரான பாலிவுட் இயக்குநர் சூரஜ் பார்ஜாதியா பேசுகையில், இப்படி ஒரு விழாவை நான் எனது வாழ்நாளிலேயே எங்குமே பார்த்ததில்லை என்று உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னார்.

இந்த நிகழ்ச்சியைப் பார்த்து நெகிழ்ந்து போன அபிராமி ராமநாதன், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான பூலாங்குறிச்சியை தத்தெடுப்பதாக மேடையில் அறிவித்தார்.

படத்தின் டிரைலரும் மேடையில் போட்டுக் காட்டப்பட்டது. அதைப் பார்த்தவர்கள் அசந்து போயினர்.

நிகழ்ச்சியில், இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், ஷங்கர், கவிஞர் வைரமுத்து, நடிகர்கள் அருண், பரத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

கலைப்புலி தாணுவுடன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கைகோர்த்துள்ள சன் டிவி, இந்த நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்பியது.

இனிமையான மாலைப் பொழுதை அர்த்தப்பூர்வமாக கழிக்க உதவிய கந்தசாமி யூனிட்டார் பாராட்டுக்குரியவர்கள்தான்.

Read more about: kandasamy villages

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil