»   »  கனிமொழியின் கருணாநிதி படம்

கனிமொழியின் கருணாநிதி படம்

Subscribe to Oneindia Tamil

முதல்வர் கருணாநிதி குறித்த டாக்குமெண்டரி படம் ஒன்றை தயாரித்து இயக்கவுள்ளார் அவரது மகள் கவிஞர் கனிமொழி.

70 ஆண்டு கால அரசியல் அனுபவம் கொண்ட தலைவரான கருணாநிதி, சமீபத்தில் சட்டமன்ற உறுப்பினராக பொன் விழா கொண்டுள்ளார். இதற்காக அவருக்கு சிறப்பான பாராட்டு விழாவும் நடைபெற்றது.

இந்த நிலையில் முதல்வர் கருணாநிதியின் அரசியல் சாதனைகள், சமூக நீதிப் போராட்டங்கள், சந்தித்த சவால்கள், சமாளித்த பிரச்சினைகள் உள்ளிட்டவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் டாக்குமெண்டரி ஒன்றை தயாரிக்க முடிவு செய்துள்ளார் கருணாநிதியின் புதல்வி கனிமொழி.

கருணாநிதியின் அரசியல் பிரவேசம், பெரியார், அண்ணாவிடம் கற்ற அரசியல் பாடங்கள், அன்று முதல் இன்று வரை அவர் நடந்து வந்த பாதை, ஆற்றியுள்ள பணிகள், தேர்தல் பிரசாரம் உள்ளிட்ட கூட்டங்களில் பேசிய பேச்சுக்கள், அளித்த பேட்டிகள் உள்ளிட்ட அனைத்தும் இந்த செய்திப் படத்தில் இடம் பெறவுள்ளதாம்.

செய்திப் படத்தின் முக்கிய அம்சமாக கனிமொழியின் கேள்விகளுக்கு கருணாநிதி அளிக்கும் பதில்கள் இடம் பெறுமாம்.

இந்தப் படம் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் படமாக இல்லாமல், வருங்கால சந்ததியினருக்கு வழிகாட்டும் அரிய பொக்கிஷமாக அமையும் என்று கனிமொழி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஒன்றரை மணி நேரம் ஓடக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படம் இன்னும் 2 மாதங்களில் வெளியாகவுள்ளதாம்.

Please Wait while comments are loading...