»   »  கர்நாடகத்தில் மட்டும் சிவாஜிக்கு 10!

கர்நாடகத்தில் மட்டும் சிவாஜிக்கு 10!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினியின் சிவாஜி ரெக்கார்ட் பிரேக்காக ஏகப்பட்ட தியேட்டர்களில் திரையிடப்படவுள்ள நிலையில் சூப்பர் ஸ்டாரின் சொந்த மாநிலமான கர்நாடகத்தில் 10 பிரிண்டுகளுடன் திரையிடப்படவுள்ளதாம்.

வரலாறு காணாத பரபரப்புக்கு மத்தியில் ஒரு தமிழ்ப் படம் இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. முதலில் ஸ்டில்கள் லீக் ஆனது, பிறகு பாடல்கள் கசிய விடப்பட்டது. இப்போது டிக்கெட் முன்பதிவில் புதிய சாதனை படைத்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு ஏகப்பட்ட தியேட்டர்களில் படத்தை திரையிடவுள்ளனர்.

இத்தனை பரபரப்பு, சலசலப்பு, எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகும் சிவாஜி, கர்நாடகத்தில் மட்டும் கல்லா கட்டாமல் படு அமைதியாக வெளியாகிறது.

தமிழகம், கேரளம், ஆந்திரா மற்றும் பல்வேறு நாடுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக தியேட்டர்களில் வெளியாகும் சிவாஜிக்கு, கர்நாடகத்தில் 10 பிரிண்டுகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதாம்.

சிவாஜியின் கர்நாடக உரிமையை வாங்கியுள்ளவரும், ரஜினியின் நெருங்கிய நண்பருமான கங்கராஜு இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 3.25 கோடி கொடுத்த கர்நாடகம் மற்றும் பெங்களூர் நகரில் சிவாஜி படத்தை திரையிடும் உரிமையை வாங்கியுள்ளேன்.

கன்னடம் அல்லாத பிற மொழிப் படங்களை 10 பிரிண்டுகளுக்கு மேல் வெளியிடக் கூடாது என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபையின் நிபந்தனை கூறுகிறது. இதன் காரணமாக 10 பிரிண்டுகளுக்கு மேல் சிவாஜிக்குப் போட முடியவில்லை.

எனவே சிவாஜியை பிற இடங்களைப் போல கர்நாடகத்தில் பெரிய அளவில் திரையிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

பெங்களூரு நகரில் 13 தியேட்டர்களில் சிவாஜியை ரிலீஸ் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் பெங்களூருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதோ 5 பிரிண்டுகள்தான். அவற்றை 13 தியேட்டர்களுக்கும் ரவுண்டில் விட்டு படத்தை ஓட்டப் போகிறார்களாம். மற்ற 5 பிரிண்டுகளும் கர்நாடகம் முழுமைக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாம்.

சிவாஜி படத்திற்காக செலவிட்ட தொகையை வசூலிக்க பெரிய அளவில் டிக்கெட் கட்டணத்தை நிர்ணயித்தால்தான் ஆச்சு என்பதால் டிக்கெட் விலை யானை விலைக்கு ஏறியுள்ளதாம். குறைந்தபட்ச டிக்கெட்டே ரூ. 150 ஆக உள்ளு. அதிகபட்சம் 500 ரூபாய் வரை நிர்ணயித்துள்ளனராம்.

ரஜினிக்காக விதிமுறைகளை தளர்த்துமாறு பெங்களூரில் உள்ள ரஜினியின் நெருங்கிய நண்பர்களும், திரையுலகப் பிரமுகர்கள் சிலரும் கர்நாடக திரைப்பட வர்த்தக சபையை வலியுறுத்தி வருகிறார்களாம், பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகிறதாம். 50 பிரிண்டுகளுக்கு அனுமதிக்க வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனராம்.

கடைசி நேரத்தில் தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் என அவர்கள் நம்புகின்றனர். ஆனால் கன்னட ரக்ஷன வேதிகே இவர்களுக்கு ஆப்பு வைப்பது போல பேசியும், செயல்பட்டும் வருகிறது.

இந்த அமைப்பின் தலைவர் நாராயண கெளடா கூறுகையில், ஒட்டுமொத்த கர்நாடகத்திலும், 4 தியேட்டர்களுக்கு மேல் கன்னடம் அல்லாத பிற மொழிப் படங்களைத் திரையிடக் கூடாது. ஆனால் பெங்களூரில் மட்டும் 10 தியேட்டர்களுக்கு மேல் திரையிடப் போவதாக கூறுகின்றனர்.

அப்படிப் போட்டால் படச்சுருளை பறிமுதல் செய்வோம். ஷங்கர் ஏற்கனவே தயாரித்திருந்த இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் கர்நாடக மன்னன் புலிகேசியை கேலி செய்து காட்சிகள் இருந்தன.

அதைக் கண்டித்து அந்தப் படத்தை கர்நாடகத்தில் திரையிட விடாமல் தடுத்தோம். அதேபோல சிவாஜி படத்திலும் சர்ச்சையைக் கிளப்பும் காட்சிகள் இருந்தால் படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம்.

எங்களது ஆட்கள் தியேட்டர்களுக்குப் போய் படத்தைப் பார்ப்பார்கள். சர்ச்சைக்குரிய காட்சிகள் இருந்தால் உடனடியாக தடுத்து நிறுத்துவார்கள் என்று எச்சரித்துள்ளார்.

இதற்கிடையே, பெங்களூரில் சிவாஜி திரையிடப்படவுள்ள தியேட்டர்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. பெரும் திரளான ரசிகர்கள் தியேட்டர்களில் குவிந்து டிக்கெட்டுகளை வாங்கி வருகின்றனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil