»   »  ஸ்டார் நைட் - நடிகர்கள் அதிருப்திதேதி திடீர் மாற்றம்

ஸ்டார் நைட் - நடிகர்கள் அதிருப்திதேதி திடீர் மாற்றம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் சிங்கப்பூர், சான் பிரான்சிஸ்கோ நகரங்களில் நடைபெறவுள்ள நட்சத்திரக் கலைவிழாவுக்கான ஏற்பாடுகள் தடபுடலாக தொடங்கி மும்முரமாக நடந்து வருகின்றன.

தமிழ் சினிமாவின் 75வது ஆண்டு விழாவையொட்டி சிங்கப்பூர் மற்றும் சான்பிரான்சிஸ்கோ நகரங்களில் நட்சத்திரக் கலைவிழா நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை நடிகர் சங்கம் செய்து வருகிறது.

இந்த கலை இரவு நிகழ்ச்சி சிங்கப்பூரில் ஆகஸ்ட் 11ம் தேதி நடப்பதாக இருந்தது. தற்போது இது அக்டோபர் 6ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதேபோல, சான்பிரான்சிஸ்கோவில் நவம்பர் 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை மூன்று நாள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினி, கலைஞானி கமல் ஆகியோர் கலந்து கொள்வதற்கு வசதியாக தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாம்.

ஆகஸ்ட் 6ம் தேதி சிங்கப்பூரில் கலை நிகழ்ச்சியின் தொடக்க விழா நடைபெறுகிறது. இதை தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் தொடங்கி வைக்கிறார். நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தலைமை தாங்குகிறார்.

தொடக்க நாளில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் படம் திரையிடப்படுகிறது. அதன் பின்னர் தினசரி ஒரு திரைப்படத்தைத் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறப்புக் காட்சிகளாக ஆர்யா மற்றும் பள்ளிக்கூடம் ஆகிய படங்கள் திரையிடப்படவுள்ளன. இதைத் தொடர்ந்த மெல்லிசை நிகழ்ச்சிகள், விவாதங்கள் ஆகியவை இடம்பெறுகிறது. இதில் முன்னணி நடிகர், நடிகையர் பங்கேற்கவுள்ளனர்.

75வது ஆண்டு விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி சென்னையில் ஜனவரி மாதம் நடைபெறுகிறது.

நட்சத்திரக் கலைவிழாவையொட்டி அது நடைபெறும் நாட்களில் ஷூட்டிங்குகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கலை நிகழ்ச்சிகளில் தான் கண்டிப்பாக கலந்து கொள்வதாகவும், அரை மணி நேரம் மேடையில் இருப்பேன் என்றும் ரஜினிகாந்த், சரத்குமாரிடம் உறுதியளித்தார்.

ஆனால் அதில் சரத்குமாருக்கு உடன்பாடு ஏற்படவில்லையாம். இதையடுத்தே அவர் கலந்து கொள்ளாத நடிகர், நடிகைகளுக்கு ரெட் போடப்படும் என தடாலடியாக அறிவித்தார்.

இதற்கு பலன் கிடைக்கும் என சரத் எதிர்பார்க்க, எதிர்மாறான விளைவுகளை அது ஏற்படுத்தி விட்டதாம். பல நடிகர், நடிகைகள் சரத்குமாரின் மிரட்டலுக்கு கடும் அதிருப்தி தெரிவித்தனர். இதையடுத்து சில முன்னணி நடிகர்கள் சரத்தை அணுகி நிகழ்ச்சி ஷெட்யூலை மாற்றி அமைக்குமாறு கேட்டுக் கொண்டனராம்.

இதையடுத்தே தேதிகளில் இப்போது மாற்றம் வந்துள்ளது. தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டதைப் போலவே சிங்கப்பூர் நிகழ்ச்சியிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட் 6ம் தேதி முதல் சிங்கப்பூரில் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரு கலை நிகழ்ச்சிகளிலும் பிரபல நடிகர், நடிகைகள், பாரதிராஜா, தங்கர் பச்சான், பார்த்திபன், டி.ராஜேந்தர், உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் திரளாக பங்கேற்கவுள்ளனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil