twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மதுரை பெயரைக் கெடுக்கும் தமிழ்ப் படங்களால் பின்வாங்கும் ஐடி நிறுவனங்கள்!

    By Siva
    |

    Madurai
    மதுரை: மதுரை என்றாலே வன்முறை நிறைந்த நகரம் என்று நினைக்கும் அளவிற்கு தமிழ் திரைப்படங்களில் கோவில் நகரம் கொலை நகரமாகக் காட்டப்படுகிறது. இதனால் பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் மதுரைக்கு வர அஞ்சுவதாக தெரிய வந்துள்ளது.

    மதுரை என்றாலே மல்லிகைப்பூவும், மீனாட்சி அம்மனும் தான் நினைவுக்கு வரும். விருந்தோம்பலில் மிரள வைப்பவர்கள் மதுரைக்காரர்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே. அறிமுகம் இல்லாதவர்களாக இருந்தாலும் கேட்காமலேயே உதவிக்கு வருபவர்கள் மதுரையைச் சேர்ந்தவர்கள். பாசத்துக்குக் கட்டுப்பட்டவர்கள் என்று மதுரையைப் பற்றி நிறைய பாசிட்டிவ் விஷயங்கள் இருந்தாலும் தமிழ் சினிமாக்காரர்களுக்கு மட்டும் நெகட்டிவ் விஷயங்கள் மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறது.

    நல்ல விஷயங்களை விட கெட்ட விஷயங்களை வைத்துப் படம் எடுத்து கல்லாக் கட்டி பிழைத்து வரும் தமிழ் சினிமாக்கார்களின் செயலால் இன்று மதுரை நகரம் மிகப் பெரிய அவலத்தையும், பொருளாதார பின்னடவையும் சந்திக்க நேர்ந்துள்ளது என்றால் நம்ப முடியவில்லை இல்லையா. ஆனால் உண்மையை அறிந்தால் மிகப் பெரிய அதிர்ச்சியாக இருக்கும்.

    முன்பு மதுரையை வைத்து நிறையப் படங்கள் வந்துள்ளன.அந்தப் படங்களில் மதுரை மண்ணின் பாசம், நேசம், உயிர்ப்பு, தமிழ்ப் பண்பாடு ஆகியவற்றையே பிரதானமாக காட்டுவார்கள். குறிப்பாக அந்தக் காலத்து சிவாஜி கணேசன் படங்கள், பின்னர் வந்த எஸ்.எஸ்.ஆர். படங்கள், பிற்காலத்தில் வந்த ராமராஜன் படங்களில் இதை அதிகம் காணலாம்.

    ஆனால் தற்போது வெளிவரும் தமிழ் படங்களில் மதுரையில் ஏதோ கொலையை தொழில் போல செய்வதாக காட்டுகிறார்கள். காலையில் எழுந்துதம் பல்லை விளக்கி விட்டு, பத்து பேரைக் கொலை செய்து பின்னர்தான் டீ சாப்பிடுவார்கள் என்பது போலவும், மத்தியானத்திற்கு மண்டையை வெட்டி கறி சமைத்து சாப்பிடுவார்கள் என்பது போலவும், சாயந்திரம் நாலு பேரை சாய்த்து விட்டுத்தான், ராத்திரிக்குத் தூங்கப் போவார்கள் என்பது போலவும் காட்டுகிறார்கள்.

    மதுரை என்றாலே ரத்த பூமி என்பது போலவும், அங்கு மனிதர்களே கிடையாது என்பது போலவும், மதுரையி்ல் தினசரி தவறாமல் கொலை செய்வது போலவும் காட்டி மதுரையின் மாண்பை சீர்குலைத்து, சீரழித்து வருகிறார்கள் தமிழ் சினிமாக்காரர்கள்.

    குறிப்பாக சுப்பிரமணிய புரம் படம் வந்த பிறகுதான் மதுரை என்றாலே கொலை நகரம் என்ற அவப்பெயரை மக்கள் மத்தியிலும், சர்வதேச அளவிலும் திணித்து விட்டனர் தமிழ் சினிமாக்காரர்கள்.

    மதுரை சம்பவம், ஆடுகளம் ஆகிய படங்களும் மதுரையில் எடுக்கப்பட்டவை. அனைத்திலும் வன்முறை தான் பிரதானம்.

    இது சாதாரண சினிமாதானே என்று விட்டு விட முடியவில்லை. காரணம், மதுரையின் பொருளாதாரத்தையே பாதிப்பதாக அமைந்துள்ளன இந்த சினிமாப் படங்கள் என்ற உண்மை இப்போது தெரிய வந்துள்ளது.

    இப்படிப்பட்ட கேடு கெட்ட திரைப்படங்களைப் பார்த்து, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மதுரையில் கிளை அமைக்க அஞ்சும் அளவுக்கு நிலைமை கை மீறிப் போயுள்ளது.

    இந்தியாவின் பெருநகரங்கள் தவிர்த்து 2ம் நிலை நகரங்களில் கிளை அமைக்கலாம் என நினைக்கும் பெரிய பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கடைசியாகத்தான் மதுரையைப் பற்றி சிந்திக்கிறார்களாம். காரணம், திரைப்படங்களில் காட்டப்படும் பொய்யான மதுரையை நினைத்து அஞ்சுவதால்.

    இதில் விந்தை என்னவென்றால் சென்னை, பெங்களூர் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள ஐ.டி நிறுவனங்களில் பணிபுரிபவர்களில் 25 சதவீதம் பேர் மதுரையைச் சேர்ந்தவர்கள்தான்.

    கடந்த ஆண்டு நடந்த பல்துறை வல்லுநர்கள் கூட்டத்தில் தான் இந்த கருத்து வெளியிடப்பட்டது.

    மதுரையில் இலந்தைக்குளத்தில் கடந்த திமுக ஆட்சியின்போது ஐடி பூங்கா அமைக்கப்பட்டது. அதில் இதுவரை இதுவரை 3 நிறுவனங்கள் மட்டும் தான் தங்கள் கிளைகளை அமைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    அதேபோல வடபழஞ்சியில் அமைக்கப்படுவதாக கூறப்பட்ட ஐடி பூங்கா இன்னும் ஆரம்பிக்கப்படவே இல்லை.

    தமிழ் சினிமாக்களில் மதுரையைப் பற்றி அவதூறாக, அசிங்கமாக, கோரமாக சித்தரிப்பதை தடுத்து நிறுத்த வேண்டியது அவசியம் என்ற கருத்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணி புரியும் மதுரையைச் சேர்ந்தவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    தமிழக அரசு இந்த விஷயத்தை சற்று சீரியஸாக கவனித்தால் மட்டுமே மதுரைக்கு மோட்சம் கிடைக்கும் - இந்த தமிழ் சினிமா வியாபாரிகளிடமிருந்து.

    English summary
    Kollywood movies involving the life around Madurai is spoiling the city's name. Kollywood movies are depicting the temple city as a violent city which scares the IT companies. IT companies don't want to set up their branch in Madurai.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X