For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  மீண்டும் கற்பு சர்ச்சையில் குஷ்பு!பாமக வக்கீல் நோட்டீஸ்!!

  By Staff
  |

  மீண்டும் கற்பு குறித்த விவாதத்திற்குள் நுழைந்து ஆறிப் போன புண்ணை நோண்டிப் பார்த்துள்ளார் குஷ்பு. அவரது புதிய பேச்சால் ஆத்திரமடைந்த பாமக வக்கீல் ஒருவர் குஷ்புவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

  சர்ச்சையைக் கிளப்பும் என்று தெரிந்தே, சென்சிட்டிவான விஷயங்களை பப்ளிக்காக பேசி பப்ளிசிட்டி தேடிக் கொள்வது சிலரின் வழக்கமாக உள்ளது. தாங்கள் பேசும் பிரச்சினைக்கு தீர்வு இருக்கிறதா என்பது குறித்தெல்லாம் யோசிக்காமல் பேசி விடுவார்கள்.

  குண்டைப் போடுவதற்கு முன்பு அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து யோசிப்பதே இல்லை. அந்த வரிசையில் நடிகை குஷ்புவையும் சேர்க்கலாம். கொஞ்ச காலத்திற்கு முன்பு கற்பு குறித்துப் பேசி அவர் பட்ட பாட்டை நாடே அறிந்தது.

  படு பட்டவர்த்தனமாக கல்யாணத்திற்கு முன்பு உடலுறவு, கற்பு குறித்து அவர் பேசி விட்டு பிறகு டிவியில் தோன்றி மன்னிப்பு கேட்கும் அளவுக்கு நிலைமை ரசாபாசமானது.

  குஷ்பு மீது ஊர் ஊருக்கு வழக்குப் போட்டனர். அந்த வழக்குகளிலிருந்து ஒவ்வொன்றாக ரிலீஸ் ஆகி ஒரு வழியாக பிரச்சினையிலிருந்து வெளி வந்தார் குஷ்பு.

  இந்த நிலையில் அந்த விவகாரத்தை மீண்டும் தோண்டித் துருவி எடுத்து மறுபடியும் ஒரு சர்ச்சை அலையை எழுப்பியுள்ளார் குஷ்பு. எப்.ஐ.சி.சி. நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தார் குஷ்பு.

  அந்த நிகழ்ச்சியில் பேசுகையில் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளுமே கற்பு குறித்த விவகாரத்தில் தன்னைக் கைவிட்டு விட்டன, அநீதி இழைத்து விட்டன என்று கூறியுள்ளார் குஷ்பு.

  குஷ்பு பேசுகையில், நான் சட்டத்திற்குப் புறம்பாக எதையும் சொல்லி விடவில்லை. உண்மையில், பாதுகாப்பான செக்ஸ் என்ற விஷயத்தில் அரசின் கொள்கையைத்தான் நான் கூறினேன்.

  ஒவ்வொரு பெண்ணும், பாதுகாப்பான செக்ஸை மேற்கொள்ள வேண்டும், ஆணுறைகளை, பெண்ணுறைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றுதான் நான் சொன்னேன்.

  கல்யாணத்திற்கு முன்பு ஒரு பெண் உடலுறவு வைத்துக் கொண்டால் கர்ப்பமடையும் ஆபத்து உள்ளது. அதைத் தடுக்க ஆணுறைகளை பயன்படுத்துவது நல்லது என்றுதான் நான் சொன்னேன். அப்படிச் செய்யாமல் பாதுகாப்பாற்ற முறையில் உடலுறவு வைத்துக் கொண்டால் அந்தப் பெண்ணுக்கு மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தினருக்கும் கூட பல பிரச்சினைகள் ஏற்படும் என்பதைத்தான் நான் எடுத்துரைத்தேன்.

  இப்படிப்பட்ட பிரச்சினைகளைத் தவிர்க்க பாதுகாப்பான செக்ஸே சிறந்த வழி என்றுதான் கூறினேன். இதில் என்ன தவறு இருக்கிறது. ஆனால் பல அரசியல் கட்சிகள் இந்த விஷயத்தில் நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி போராட்டங்கள் நடத்தின.

  குறிப்பாக பாமகவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் எனக்கு எதிராக என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதை எல்லாம் செய்து விட்டன.

  நான் அளித்த பேட்டியில் கூறிய கருத்துக்கள் அனைத்துமே மத்திய அரசின் கருத்துக்கள்தான். அதைத்தான் நான் பிரதிபலித்தேன். இதற்காக மத்திய அரசு மீது இந்த கட்சிகளால் வழக்கு போட முடியுமா? நான் ஒரு பெண் என்பதால் இந்தக் கட்சிகள் என்னைக் குறி வைத்து நடந்து கொண்டன என்று பேசினார் குஷ்பு.

  மேலும் பாமகவும், விடுதலைச் சிறுத்தைகளும் தன் மீது 24 வழக்குகளை போட்டதாகவும் குஷ்பு குற்றம் சாட்டினார். குஷ்புவின் இந்தப் பேச்சு பாமக வட்டாரத்தில் கடுப்பைக் கிளப்பியுள்ளது.

  பாமகவைச் சேர்ர்ந்த முருகன் என்கிற வழக்கறிஞர் நீதித்துறையை அவமதிக்கும் வகையிலும், கற்பு குறித்தும், பாமக குறித்தும் பொது இடத்தில் அவதூறாகப் பேசியதாகவும் கூறி குஷ்புவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

  அவர் கூறுகையில், வழக்கில் இறுதித் தீர்ப்பு வெளியாகும் வரை கற்பு குறித்தும், இதுதொடர்பான விவகாரம் குறித்தும் பொது இடத்தில் எந்தக் கருத்தையும் தெரிவிக்கக் கூடாது என்று மேட்டூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  ஆனால் அதை மனதில் கொள்ளாமல், பொது இடங்களில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதுகுறித்துப் பேசி வருகிறார் குஷ்பு. மேலும், அரசியல் கட்சிகள் தனக்கு எதிராக அநீதி இழைத்து விட்டதாகவும் பேசியுள்ளார் குஷ்பு.

  சிலர் நீதியை விலைக்கு வாங்கி விட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். யார் நீதியை விலைக்கு வாங்கினார்கள் என்பதை குஷ்பு விளக்குவாரா. எவ்வளவு பணம் கொடுத்து அதை வாங்கினார்கள் என்பதையும் குஷ்பு விளக்குவாரா?

  தனது கருத்துக்களுக்கு குஷ்பு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துத் தண்டிக்க வேண்டும் என்று கூறினார் முருகன்.

  குஷ்பு போட்ட குண்டு பாமக தரப்பில் போய் வெடித்துள்ளது. சிறுத்தைகளும் பாய்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X